பல வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து என் மகன் என்னைப்
பார்க்க வந்து விட்டான். அதுவும் குடும்பத்தோடு வந்ததைப் பார்த்தபோது மனம் திருப்தி கொண்டது. இதுவரை என்னைப் பற்றி
கவலைப்படாதவன், எனக்காக இன்று வந்து நிற்கிறான். என் அருகில் நின்று
பேசத் தயங்கியவன், என்னை தொட்டுத் தொட்டுப் பார்க்கிறான். கன்னங்களை
வருடிக் கொடுக்கிறான். நெற்றியில் முத்தமிடுகிறான். எல்லாம் மாயை போல்
தோன்றுகிறது. மனம் நிறைகிறது.
மருமகளும்கூட என் அருகிலேயே நின்று கொண்டாள். தம்
பிள்ளைகளையும் என்னை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டாள். மூத்த பேரன் மூன்று
வயதாக இருந்தபோது பார்த்தது. இப்போது எப்படியும் எட்டு வயதாகியிருக்க வேண்டும்.
என் மகன் சாயலில் இருந்த அவனைப் பார்க்கப் பெருமையாய் இருந்தது. என் வம்சமடா நீ
எனச் சொல்லிக் கட்டித் தழுவிக்கொள்ளத் தோன்றியது. அவன் கன்னங்களில் உள்ள குழி என்
மனைவி சாரதாவை நினைவுப்படுத்தியது. இரண்டு மூன்று வயதில் இன்னொருவன் என் மருமகளைக்
கட்டிப்பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அடிக்கடி என் முகத்தைப்
பார்க்கிறான். என்னை அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. யாரெனக் கேட்டு அவன்
அம்மாவைத் தொல்லைப்படுத்தினான். அவன் வாயை மூடி அமைதியாக இருக்கச் செய்தாள்
மருமகள். என்னைக் கருணையோடு பார்த்தாள். என் கால்களில் விழுந்து வணங்கினாள்.
“நல்லா இரும்மா. சுமங்கலியா நூறு வருஷம் நீ வாழனும். அது ஏன் நூறு வருஷம்? அதுக்கும் மேலேயே என் பிள்ளையோட, என் பேரப்பிள்ளைங்களோட நீ சந்தோசமா வாழனும்!” மனதார வாழ்த்தினேன்.
“அப்பாவுக்கு
எந்தக் குறையும் வச்சிராதீங்க!” என் மகனின் வார்த்தைகள் என் இதயத்தை நெகிழச்
செய்தன. எவ்வளவு உணர்வுப்பூர்வமான வார்த்தைகள்!
இதற்காகத்தானே இவ்வளவு நாள் ஏங்கிக் கொண்டிருந்தேன். என்
மனைவி இருந்தவரை நான் அன்புக்காக ஏங்கித் தவித்ததில்லை. அவள் தவிக்க விட்டதும்
இல்லை. கேட்காமலேயே அன்பை அள்ளிக் கொட்டித் திணறடிப்பாள். விழுந்து விழுந்து
உபசரிப்பாள். ஒரு நாளும் பசி வந்து உண்டதில்லை. தாயாக,
தோழியாக, மனைவியாக இருந்து ஒரு நாள் சொல்லாமலேயே செத்துப்
போனாள். அந்த வலி, அந்தப் பிரிவு என்னை உலுக்கி எடுத்தது. உலகமே
வெறுமையாய்த் தோன்றியது. வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென அப்பொழுதான்
முதன்முதலாக உணரத் தொடங்கினேன்.
என் எதிர்பார்ப்பு என் மகனிடம் திசை திரும்பியது. ஆனால், அதுவே அவனுக்குத் தொல்லையாக உருவெடுத்தபோது, என்னால் யாருக்கும் துன்பம் வேண்டாமென முடிவெடுத்தது என்னமோ உண்மைதான். ஆனால், பாழாய்ப்போன மனது கேட்கவில்லையே! சற்று முன்பு வரை அந்த அன்புக்காக ஏங்கித்தான் போயிருந்தேன். மிப்பொழுது அதற்கு அவசியமில்லாமல் போய் விட்டது. என்னைச் சுற்றி எனக்காகக் கூடி நிற்கும் சொந்தங்களைப் பார்க்கிறேன். இப்படித் தெரிந்திருந்தால் எப்போதோ உயிரை விட்டிருப்பேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக