மூன்று
வார விடுமுறைக்குப் பிறகு எப்படியோ பள்ளிக்கு வந்தாகிவிட்டது. காரை விட்டு இறங்கி
மண்ணில் கால் வைத்தபோது, உள்ளமெல்லாம் ஒரு வகை உணர்வு
படரத் தொடங்கியது. அதை வார்த்தைகளால் விளக்கிட முடியுமா என எனக்குத் தெரியவில்லை. புதிதாய்
வந்த ஆசிரியரைப் போல் பார்வையாலே பள்ளி வளாகத்தைப் அளவெடுத்தேன். கடந்த பத்து
ஆண்டுகளாக இந்தப் பள்ளியில்தான் பணியாற்றி வருகிறேன். எத்தனை எத்தனை அனுபவங்கள்! எத்தனை எத்தனை
நினைவுகள்! மனம் லேசாய்க் கனக்கத் தொடங்கியது. மீண்டும் காருக்குள்ளே
அமர்ந்துகொண்டேன். என்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
ஒவ்வொரு
நாளும் நான் காரை விட்டு இறங்கும்போது மாணவர்க் கூட்டம் ஒன்று என்னைச் சூழ்ந்து
கொள்ளும். இன்று அந்தக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கையிலுள்ள மடிக்கணினிப் பையைப்
பிடுங்காத குறையாய் வாங்கி மாட்டிக் கொள்ளும் இரண்டாம் படிவ மாணவன் ரமணன், அவனும் இன்று இல்லை. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும்
முதலாம் படிவ மாணவிகள் ஹேமாவும் திவ்யாவும்கூட இன்று இல்லை. நான் அணிந்து வரும்
சாதாரண உடையையும் பெரிதாய்ப் பாராட்டிப் பேசும் பவித்திராவையும் காணவில்லை. மனம் வெறுமையாய்
தோன்றியது. குடும்ப உறவுகளோடு விடுமுறையைக் கழித்தபோது இருந்த மகிழ்ச்சிக்கு
அளவில்லைதான். ஆனால், அந்தக் காலக்கட்டத்திலும் இவர்களின்
ஞாபகங்கள் என்னுள் எட்டிப் பார்ப்பதை என்னால் தடை செய்ய முடிந்ததில்லை.
கடந்த முப்பது ஆண்டுகளில் மாணவர்களோடு இருந்ததுதான் அதிகம்.
என் மாணவர் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். அவர்கள் பார்வையை வைத்தே அவர்களின்
மனநிலையை என்னால் கணித்துவிட முடியும். அதுவே என் பலமாகவும் இருந்தது என்பதுதான்
உண்மை. கணவன் மனைவி பிரிவில் எதிர்காலத்தை இழந்த எத்தனையோ மாணவர்களைப்
பார்த்திருக்கிறேன். கண்மூடிக் காதலால் குடும்பத்தை உதறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய
மாணவிகளை மறக்க முடியுமா என்ன! அவர்களுக்காகவும் அவர்கள் பெற்றோர்களுக்காகவும் எத்தனை இரவுகள் அழுதிருக்கிறேன். பள்ளிக்குப்
பிள்ளைகளை அனுப்ப முடியாது என முரண்டு பிடித்த பெற்றோரிடம் மன்றாடிய நாட்கள் கண்
முன் வந்து போயின. தடம் மாறிப் போன பிள்ளைகளைப் பற்றி பெற்றோரிடம் புகார் சொல்லி, வாங்கிக் கட்டிக் கொண்ட இருண்ட நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். இப்பொழுது
நினைத்தாலும் உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் மாணவர்களுக்காக வாழ்ந்திருக்கிறேன்
என்பதில் மனம் திருப்தி கொள்கிறது.
கடந்த
கால நினைவுகளின் தாலாட்டில் இன்றைய வருகைப் பதிவை மறந்தே போனேன். பள்ளி அலுவலகத்தை
நோக்கி ஓட முடியாமல் ஓடுகிறேன். இதுவே என் கடைசி வருகைப் பதிவு. இன்னும் ஆறு மணி
நேரத்தில் மாணவர்களின் நினைவுகளோடு மட்டுமே விடைபெறப் போகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக