ஞாயிறு, 27 மார்ச், 2022

#குறுங்கதை 050 #அலாரம்

 

காலையிலிருந்தே எதுவும் சரியாக நடப்பதாக அருணனுக்குத் தெரியவில்லை. என்றும் அவனை  எழுப்பி விடும் அலாரம் இன்று ஏனோ துரோகம் செய்து விட்டது. அடித்துப் பிடித்து எழுந்து பள்ளிக்குச் சென்று சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வியர்க்க விறுவிறுக்க பள்ளி அலுவலகத்தைச் சென்றடைந்தபோது சரியாக மணி ஏழு இருபது. ஏழு முப்பதற்கெல்லாம் படிவம் ஐந்திற்கான தமிழ்ப்பாடம் தொடங்கி விடும். வகுப்பில் நுழைய தாமதமாகிவிட்டால் பிள்ளைகள் அவர்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

ஓட்டமும் நடையுமாய் ஆசிரியர் அறைக்குச் சென்று மடிக்கணினிப் பையை மேசை மேல் வைத்துவிட்டுக் கழிவறைக்குச் சென்றான். குழாய் நீரில் முகத்தை அலம்பிக் கொண்டான். கைக்குட்டையால் முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு ஒரு முறை கண்ணாடியில்  பார்த்துக் கொண்டான். தூங்கு மூஞ்சாய் இல்லாமல் கொஞ்சம்  பார்ப்பதற்குச் செழிப்பாகத்தான் இருந்தான். கலைந்திருந்த முடியைச் சீவிச் சரிபடுத்திக்கொண்டான். வகுப்பிற்குச் சென்று காலடி எடுத்து வைப்பதற்கும் முதல் பாடத்திற்கான மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. வழக்கம்போல் மாணவர்களைத் தன்வசப்படுத்தி பாடத்தை நிறைவாய் நடத்தி முடித்தான்.

வகுப்பறையை விட்டு வெளியேறும் வேளை கைப்பேசி அலற, எடுத்துப் பார்த்தான். பள்ளி  அலுவலக எண். முக்கிய விசயமாக இருக்க வேண்டும். எடுத்துப் பேசினான்.

“சலாம் செக்கு. செக்கு அருண்  டெக்காட் மானா? அட இபுபாபா மாவு ஜும்பா செக்கு!” மாணவர்நல ஆசிரியர் திரு. ரஹ்மான்தான் பேசினார்.

“ஓகே, சயா டத்தாங் பெஜாபாட் செக்காராங் என்சிக்!” பேசிக்கொண்டே அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் வகுப்பு மாணவன் கலைவாணனின் அப்பா அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

“சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்!” குரலில் தயக்கம் தெரிந்தது.

“ம்ம்ம் சொல்லுங்க!

“சார்.. கலை அடுத்த வருஷம் எஸ்.பி. எம்முக்குத் தமிழ் எடுக்கலன்னு பிடிவாதம் பிடிக்கிறான். அதான்... நேரா உங்கள பாத்து பேசலாம்னு வந்தோம்!”

“அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?”

“பிடிக்காத பாடத்த எடுக்கிறதுக்கு ஏன் வற்புறுத்தனும் சார். அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன்!”

“அப்படியா... சரி! ஆனா, ஏன் பிடிக்கலன்னு சொன்னானா? சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேக்கிறேன்!” வார்த்தைகளில் நிதானம் தெரிந்தது.

“தமிழ்ப் பாடத்தில அவன் இதுவரைக்கும் பாஸ் பண்ணதே இல்லையாம் சார். எஸ்.பி.எம்ல தமிழ்னால ஒரு ஜீ வரக்கூடாதுன்னு நெனைக்கிறான். அது தப்பில்லையே சார்!” மகனுக்கு ஆதரவாய்ப் பேச முயன்றார்.

“சரிங்க... ஆனா, கொஞ்சம் உங்க பையனோட ஐ.சி. நம்பர சொல்றீங்களா?” விரக்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பணிவாய்க் கேட்டான்.

கைப்பேசியின் துணையுடன் கலைவாணனின் அடையாள அட்டை எண்ணைத் தட்டி சேப்சில் அவன் அரையாண்டுத் தேர்வுப் புள்ளிகளைப் பார்த்தான். மலாய் மொழியில் இருபத்தைந்து. அவனுக்குத் தூக்கிவாறிப் போட்டது. விருப்பப்பாடங்களைப் பார்த்தான். முப்பத்தைந்தைத் தாண்டவில்லை.

“இங்க பாருங்க இதான் உங்க மகனோட தேர்வு முடிவு. பாக்கப் போனா அவன் எந்தப் பாடமும் எடுக்க முடியாது. அப்புறம் ஏங்க தமிழை எடுக்கிறது மட்டும் உங்க மகனுக்குப் பிரச்சனையா இருக்கு, சொல்லுங்க?” குரலில் அழுத்தம் தெரிந்தது.

இப்பொழுது கலை அப்பாவின் மண்டைக்குள் அலாரம் அடித்திருக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...