குடும்பத்தின்
துரோகத்தை மறக்க முடியாமல் நொந்துதான் போயிருந்தான் பார்த்திபன். சொந்தக் குடும்பமே
சுயநலமாய் நடந்துகொண்டதை அவன் மனம் ஏற்க
மறுத்தது. அவர்கள் தனக்கு இழைத்த கொடுமை மீண்டும் மீண்டும் கண் முன் வந்து
போனது. விரக்தியின் உச்சத்தில் இருந்தான் அவன். உலகமே பொய்யாய்த் தோன்றியது அவனுக்கு.
தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எல்லாமே பொய்யாகவே தெரிந்தனர். இனி மறந்தும்
அவர்களை நம்பிவிடக்கூடாது. தீர்மானம் செய்து கொண்டான்.
நொடிப்பொழுதில்
பார்வை சம்பந்தமில்லாமல் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த பெரியவர் மீது
படிந்தது. தனிமையில் அமர்ந்திருந்தார். அவரும்
தம்மைப் போலத்தானோ எனத் தோன்றியது. அவரை முழுதாய் நோட்டமிட்டான். அவர் நேர்த்தியான
தோற்றம் படித்தவரெனப் பறைசாற்றியது. மடிப்புக் கலையாத ஆடை. முழுக்கை வெள்ளைச் சட்டையைக்
கறுப்புக் காற்சட்டைக்குள் விட்டிருந்தார்.
இடுப்பில் அதற்குப் பொருந்தமாக கறுப்பு நிறத்திலான இடைவார். அழகான கறுப்புக்
காலணிகள்.
அவருக்கு எப்படியும் வயது
அறுபதைத் தொட்டிருக்க வேண்டும்.
தன்
நாற்காலியை விட்டு எழுந்திருக்க முற்பட்டார். எழுந்திருக்க விடாமல் தடுத்தான்
உணவகப் பணியாள். பெரியவர் முரண்டு பிடித்து எழுந்து நின்றார். அவரைப் பிடித்துத்
தள்ளி மீண்டும் நாற்காலியில் உட்காரச் செய்தான் அந்த விடாக்கண்டன். பெரியவர்
தடுமாறி நாற்காலியில் முனையில் உட்கார்ந்துகொண்டார். கொஞ்சம் விட்டிருந்தால் கீழே
விழுந்திருப்பார். நாற்காலியைச் சரிபடுத்தி உட்கார்ந்து கொண்டவரின் பார்வை
உணவகத்தைச் சுற்றி வந்தது. காணாமல் போன
எதையோ தேடும் தவிப்பு அவர் பார்வையில் தெரிந்தது.
உதவி
செய்தால்தான் என்ன? ஆழ்மனத்தில் சன்னமான குரலில் யாரோ
சொல்ல அவரை நெருங்கிச் சென்றான். கீழே விழாமல் இருக்க வலது கையால் மேசையை பிடித்துக்
கொண்டிருந்த அவர் தோளைத் தட்டி அழைத்தான். தூக்கிவாறிப் போட்டது அவருக்கு. குற்ற
உணர்ச்சியால் பின்னால் இரண்டடி எடுத்து வைத்து நின்றவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
“சார், உங்கள ரொம்ப நேரமா பாக்கிறேன். என்னத்தையோ தேடிக்கிட்டு இருக்கீங்க? சொன்னா நான் தேடிக் கொடுக்கிறேன், சரியா?” கல்லும் கரைந்து போகும் தோரணையில் கேட்டான்.
பதில் சொல்லாமல் புலியைக்
கண்டு மிரளும் புள்ளிமானைப் போல் வெறித்துப் பார்த்தார். பார்வையில் பயம் சேர்ந்து
கொண்டது.
“சார்... நான் கேக்கிறது
புரியுதா? உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. நான் செய்றேன்!” அழுத்தமாய்ச்
சொன்னான்.
அவர் பார்வையில் மாற்றம்
இல்லை. ஆனால், ஐயத்தின் குறீயீடு அதிகரித்திருந்தது. சற்று
முன் பார்த்த அதே பணியாள் அவர் அருகில் வந்து நின்று கொண்டான்.
“சார், அவரு எங்க முதலாளியோட அப்பா. அவர தொந்தரவு பண்ணாதீங்க. அவரு பழசெல்லாம்
மறந்துட்டாரு. அதனால, முதலாளி அவர இங்க கூட்டிகிட்டு
வந்திடுவாரு. நாங்கதான் அவரு எங்கயும் போகாம பார்த்துக்குவோம்!” சொல்லி விட்டு
அடுத்த மேசையைத் துடைக்கச் சென்று விட்ட பணியாளை மீண்டும் தொந்தரவு செய்ய அவனுக்கு
மனமில்லை. இப்பொழுது அந்தப் பெரியவைப் பார்க்க அவனுக்குப் பொறாமையாக இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக