முதல்நாள் பேசி
முடிவெடுத்தபடி சரியாய் இரவு எழு மணிக்கெல்லாம் அம்மா வீட்டில் அனைவரும் கூடி
விட்டனர். நாதன், அப்பாவின் சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாய்ச் சாய்ந்து
கொண்டான். தங்கை ஜானகி தன் இரண்டு மாதக் கைக்குழந்தையோடு
வீட்டின் ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்துகொண்டாள்.
இரண்டாவது தங்கை பவானி அம்மாவின் அணைப்பில் அடைக்கலமானாள். அடுத்த ஒரு மணி
நேரத்தில் இங்கு என்னெவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.
“அம்மா…! அப்பா இறந்து ஒரு மாசம் ஆகுது. இன்னும் அப்பாவோட சொத்த
பத்தி நாம பேசி முடிவெடுக்கல. அப்பா,
இருக்கிற இந்த ஒரு வீட்ட உங்க பேருல எழுதி வைச்சிட்டாரு.
நாளைக்கு உங்களுக்கு ஒன்னு ஆச்சின்னா, யாருமே இந்தச் சொத்த உரிம கொண்டாட முடியாம போயிடும்.
அதனால....” குரலைச் செருமிக் கொண்டே அம்மாவின் மேல் பார்வையைப் பதித்தான் நாதன்.
“அதனால...
என்னடா பண்ணப்போற?” புருவங்களை உயர்த்தி மகனைப் பார்த்தார் அம்மா.
“உடனே, சொத்த
பேரு மாத்தி எழுதி வைக்கிறது நல்லதுன்னு தோனுது!” பேசிக்கொண்டே தங்கைகளைப்
பார்த்தான். அவன் பார்வையில் கலந்திருந்த அலட்சியத்தையும் ஏளனத்தையும் யாரும்
கவனிக்காமல் இல்லை. ஆனால், அவர்கள் எதையும் பேசும் நிலையில் இல்லை. அப்பாவின் இறப்பால்
மீளாத் துயரில் இருக்கும் அவர்களுக்கு அப்பாவின் சொத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கத்
தெம்பில்லை.
“இருக்கிறது
ஒரு வீடு. இருபதுக்கு எழுபது சைஸ்ல சின்ன வீடா இருந்தாலும் அத மூனு பேரு பேருலேயும்
எழுதி வைக்கிறதுதான் ஞாயம்னு தோனுது. நீ என்னடா சொல்ற?”
“என்னம்மா
பேசறீங்க? இந்த வீட்டுக்காகச் சின்ன வயசுலேர்ந்து மாடா மாதிரி
உழைச்சுக் கொட்டினது நானு. அப்படின்னா எனக்குத்தான இந்த வீட்டு மேல உரிம அதிகம்?” குரலை
உயர்த்தினான்.
“அப்படின்னா...
இந்த பொம்பளப்பிள்ளைங்க கதி?”
“அது
எனக்குத் தெரியாதும்மா. நாளைக்கு நாம இந்த வீட்ட என் பேருக்கு மாத்தப் போறோம்.
நீங்க காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பி நில்லுங்க. நான் வந்து ஏத்திக்கிறேன்.
புரியுதாம்மா?” வெட்டு ஒன்று துண்டு இரண்டு கணக்காய்ப் பேசினான்.
“பாவம்டா
இந்தப் பிள்ளைங்க. அதுங்களுக்கும் பங்கு கொடுக்கிறத பத்தி ஏன்டா யோசிக்க
மாட்டேங்கிற?” பவானியை அப்படியே மார்போடு இறுக அனைத்துக்கொண்டு
புலம்பினார் அம்மா.
சொத்தாசை
அவன் இதயத்தைக் கல்லாய் ஆக்கியதோ என்னவோ, தாயின் புலம்பலோ தங்கையின் பரிதவிப்போ அவனுக்குப்
பெரிதாய்த் தெரியவில்லை. நினைத்ததைச் சாதித்துவிட்ட திருப்தியில் வீடு
திரும்பியவனுக்குக் காலைப் பொழுதைக் காணும் பாக்கியம் இல்லாமல் போனது. இதயமே இல்லாதவனுக்கு
மாரடைப்பாம். குடும்பமே இன்னொரு இழப்பைத் தாங்க முடியாமல் தலையிலும் மார்பிலும்
அடித்துக் கொண்டு அழுதது. அவனைப் புதைப்பதற்கு அப்பாவின் அருகில் ஆறடி நிலம்
மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்படியென்றால் அந்த இருபதுக்கு எழுபது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக