எத்தனையோ
முறை வீட்டிற்கு அழைத்தும் வராத மாமியார், இம்முறை
மறுப்பேதும் சொல்லாமல் வந்து வீட்டில் தங்கியது மரகதத்தின் குடும்பத்திற்கே வரமாய்
அமைந்தது. திருமணமாகி இந்த ஐந்து ஆண்டுகளில் இப்பொழுதுதான் தங்களோடு முழுமையாய்
ஒரு மாதம் தங்கி காலத்தைக் கழிக்கும் மாமியாரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள்
மரகதம்.
“அத்த... உங்களுக்கு
ஏதாவது சாப்பிடனும்னு ஆசையா இருந்தா சொல்லுங்க. நான் செஞ்சிக் கொடுக்கிறேன்!” வந்த
நாளிலிருந்து கெஞ்சாத குறையாய்க் கேட்டு விட்டாள். ஆனால், அப்படியேதும் இதுவரை மாமியார் கேட்டுச் சாப்பிடாதது அவளுக்கு ஒரு
குறையாகவே இருந்தது.
“அத்த, வாங்க சும்மா அப்படியே டவுன்னுக்கு போயிட்டு வரலாம். குட்டியா ஒரு
ஷாப்பிங். அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச ஒரு மசாலா டீ. ஓகேவா?” கண்ணிமைகள் பட்டாம்பூச்சியாய் மூடித் திறக்க ஆவலோடு தன் மாமியாரைப் பார்த்தாள்.
“இல்லம்மா, நான் வரல. என்னத்துக்கு தேவையில்லாத செலவு? மசாலா
டீய விட்டுலேயே கலக்கிக் குடிச்சிக்கலாம்!” பதிலுக்காகக் காத்திராமல்
செந்தூரப்பூவே தொடர் நாடகத்துள் மூழ்கிப் போனார் மாமியார்.
மரகதத்துக்கு உள்ளூர வருத்தம்
இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் சமையறைக்குள் புகுந்து கொண்டாள். கால் மணி
நேரத்திற்குள் மணக்க மணக்க மசாலா டீயுடன் வரவேற்பறைக்கு வந்தாள். டீயை மாமியாரிடம்
நீட்டினாள். முகத்தில் சலனமேதும் இல்லாமல் தம்ளரை வாங்கிப் பக்கத்திலிருந்த சின்ன
மேசை மேல் வைத்துக்
கொண்டார். உடனே டீயைச் சுவைத்துப் பார்த்து மாமியார் எதையாவது சொல்வாரென
எதிர்பார்த்த மரகதத்திற்கு ஏமாற்றமாய்ப் போக அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் மாமியாரைத் தேடித் தேடிப்
போவதும் மாமியார் அவளைத் தவிர்க்கப் பார்ப்பதும் தொடர்கதையாய் இருப்பதை எண்ணி
வெந்து போனது அவள் மனது.
“அத்த... உங்களுக்கு ரோஜா
செடின்னா ரொம்ப பிடிக்குமுன்னு எனக்குத் தெரியும். அதான் உங்களுக்காக ஷோப்பில நாலு செடி ஆர்டர் பண்ணியிருக்கேன்.
வீட்டுக்குப் போறப்ப மறக்காம எடுத்திட்டுப் போங்க!” சொல்லும்போதே ரோசாவைப் போல
மலர்ந்து போனது அவள் முகம். அதற்கும் ஒரு உயிரற்ற பார்வையைப் பரிசாய்த் தந்த
மாமியாரைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்துப் போனாள் மரகதம்
இன்னும் எப்படியெல்லாமோ முயற்சி செய்து விட்டாள். ஆனால், மாமியாரின் இறுக்கத்தை தளரச் செய்ய முடியவில்லை. இதோ இன்றும்கூட
கொல்லையில் புல்பூண்டுகளைப் பிடுங்கிக் கொண்டிருந்த மாமியாரின் அருகில் போய் நின்று
கொண்டாள்.
“அத்த, நான் கேக்கிறேன்னு தப்பா நெனைக்காதீங்க. என் மேல உங்களுக்கு அப்படி என்ன
கோபம்? என் மனசறிஞ்சு உங்ககிட்ட தப்பா பேசினது இல்ல, நடந்துகிட்டதும் இல்ல. அப்பறம் ஏன் என்கிட்ட நெருங்க மாட்டிறீங்க!”
முகத்திற்கு நேராகவே கேட்டுவிட்டு விசும்பத் தொடங்கினாள்.
“அழாத மரகதம். உன் மேல
ஒரு தப்பும் இல்ல. பிள்ளைங்க வீட்டில தங்கறது நமக்கு மரியாத இல்லன்னு நானா
நெனைச்சுகிட்டேன். அதனாலதான் போனமா வந்தமான்னு இருந்தா நமக்கு மரியாதன்னு
இருந்திட்டேன்! என் மனசில இருந்த களையை இதுநாள் வரைக்கும் பிடுங்கி எறிய
மறந்திட்டேன். அதான்...” புற்களைப் பிடுங்கிக் கொண்டே பேசிய மாமியாரைக் கண்
கொட்டாமல் பார்த்தாள் மரகதம். அவளும் மாமியாரோடு சேர்ந்து களையெடுக்கத்
தொடங்கினாள். இப்பொழுது கொல்லை சுத்தமாய்த் தெளிவாய் இருந்தது. மாமியாரின் முகத்தைப்
போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக