வியாழன், 31 மார்ச், 2022

#குறுங்கதை 054 #இறந்தநாள்

 

      பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது.  எப்படியும் நண்பர்கள் நடுநிசியில் எழுப்பி சர்பரைஸ் என்ற பெயரில் இம்சைபடுத்தி விடுவார்கள். காலேஜ் வந்த நாளிலிருந்து இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ அவர்கள் சர்ப்ரைஸ்! என்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதும், இன்ப அதிர்ச்சியில் இருப்பது போல் மிகையாய் நான் பாவனை செய்வதும் பழகிப் போய் விட்டது. இன்று இரவும் அதுதான் நடக்கபோகிறது. சின்னதாய் ஒரு கேக், பீப்பீ ஊதல்கள், தலையில் அடித்து என் முடியை நாசப்படுத்த ஆளுக்கொரு முட்டை என எல்லா ஏற்பாடும் இந்நேரம் தயாராகியிருக்கும்.

      இன்று   சிவராத்திரிதான். முன்னேற்பாடாகக் கொஞ்சம் தூங்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனமென என் மூளை சொல்ல, கடைசி பாடத்திற்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தாகி விட்டது. கதவைத் திறந்து உள்ளே செல்ல, வீடெல்லாம் என்றும் இல்லாத மணம். என் அம்மா வைக்கும் நாட்டுக்கோழி கறி மணம். சமையலறையை எட்டிப் பார்க்கிறேன். யாரும் சமைத்ததற்கான அடையாளம் இல்லை. உடம்பு சிலிர்த்துக் கொள்கிறது. பின்னால் இருக்கும் சீன ஆண்ட்டியின் வீட்டைச் சன்னல்வழி பார்க்கிறேன். பின் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துக் கிடக்க, ஏமாற்றம் தொற்றிக் கொள்கிறது. தோளில் தொங்கிக் கொண்டிருந்த புத்தகப்பையை அப்படியே சாப்பாட்டு மேசை மேல் போட்டு விட்டுக் குளியலறை செல்கிறேன்.

      ஆடைகளைக் களைந்து விட்டு, மதிய வேளையில் சூடான தண்ணீரில் குளிப்பது ஒரு வகையான சுகம். அதை அனுபவித்தால் மட்டுமே தெரியும். ஹீட்டரோடு ஒட்டியிருந்த குழாய் நீரைத் திறக்கிறேன். சில்லென்ற நீர் உடம்பை நனைக்க எகிறிக் குதிக்கிறேன். ஹீட்டரைத் தட்ட மறந்து போனது நினைவுக்கு வருகிறது. யாராவது தட்டி விட்டால் நன்றாக இருக்குமே என்று நினைக்க, அடுத்த கணம் சுடுநீர் உடம்பை நனைக்கிறது. ஹீட்டரை யார் தட்டியிருக்கக் கூடும்? மூளை பரபரப்பாய் யோசிக்கிறது. பயம் கௌவிக்கொள்கிறது. துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு அவசர அவசரமாக வெளியே வருகிறேன். வீட்டின் அமைதி என்னை அச்சுறுத்துகிறது.

நண்பனுக்கு அழைத்துப் பேச எண்ணம் தோன்ற, கைப்பேசியைத் தேடுகிறேன். புத்தகப்பையில் வைத்தது நினைவுக்கு வர, மேசை மேல் வைத்த புத்தகப் பையைத் தேடுகிறேன். காணவில்லை. குழப்பத்தில் தலையைச் சொரிகிறேன். நண்பர்கள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம். மூன்று அறைகளையும் திறந்து பார்க்கிறேன். யாருமில்லை. மூன்றாவது அறையில் கோழிக்கறியின் மணம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன். உடல் சில்லிடுகிறது.  பட்டெனக் கதவைச் சாத்திவிட்டு ஓட்டமும் நடையுமாய் வரவேற்பறைக்குச் செல்கிறேன். முகமெல்லாம் வியர்வைத் துளிகள். மனத்தில் படபடப்பு. மூர்ச்சையாகிப் போயி விடுவேனோ என்ற அச்சம் மனத்தில் பரவத் தொடங்குகிறது.

“ஏன்டா பயந்திட்டியா?” முதுகுக்குப் பின்னாலிருந்து குரல் வர, திரும்பிப் பார்க்கிறேன். என் பாசமிகு அம்மா புன்னகையோடு கைகளைக் கட்டிக் கொண்டு நிற்கிறார்.

“உன் பிரண்ட்ஸ்தாண்டா, என்ன(னை) போன் பண்ணி வரச்சொன்னாங்க. சர்ப்ரைஸ் கொடுக்கச் சொன்னாங்க. அதான் வந்தேன். நீ என்னடான்னா இப்படிப் பயந்து சாகற!” சிரித்துக் கொண்டே பேசிய அம்மாவைப் பார்க்கப் பார்க்கப் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ம்மா, நீங்க ரொம்ப மோசம்மா. என் பொறந்தநாள கொஞ்ச நேரத்தில இறந்தநாளா மாத்தியிருப்பீங்க, போங்க!” அலுத்துக் கொள்கிறேன்.

“சரிடா... அப்பறமா சாப்பிட கோழிக்கறி வச்சிட்டேன். உனக்குக் கேசரி பிடிக்கும் இல்லையா. போய் கேசரி மாவு வாங்கிட்டு வரீயா?” கெஞ்சலாய்க் கேட்டார் அம்மா.

மோட்டாரை எடுத்துக் கொண்டு உற்சாகமாய்ப் புறப்படுகிறேன். அம்மாவிடமிருந்து அழைப்பு வருகிறது.

“அதற்குள் என்ன அவசரம்!” சலித்துக் கொண்டு அழைப்பை எடுக்கிறேன்.

“டேய் ராஜு, சோரிடா, உன் பிரண்ஸ்செல்லாம் என்ன(னை) இன்னைக்கு வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அப்பாவுக்கு உடம்பு முடியல. வர முடியாம போச்சி. பீல் பண்ணாதடா ப்ளீஸ்!”  அடுத்த நொடி என் கைப்பேசி அதுவாய்க் கைநழுவி கீழே விழுந்து சிதறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...