வெள்ளி, 1 ஏப்ரல், 2022

#குறுங்கதை 055 #காணவில்லை...

 

“யாராவது பார்த்தீர்களா?” அறைக்குள் நாலாப்பக்கமும் ஓடிக்கொண்டே அலறுகிறேன். பதின்மூன்று ஆண்டுகள்  என்னுடனே இருந்த எல்லாம் மாயமாய் மறைந்து போய்க் கொண்டிருப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தனி அறையில் பேச்சுத் துணையின்றி தவித்துப் போகிறேன். சன்னல்வழி எட்டிப் பார்க்கிறேன். பக்கத்து வீட்டுக் கவிதாவும் எதிர்வீட்டு மங்கையும் உலகத்தை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சத்தமாய்க் கூப்பிடுகிறேன். ஒருவர் காதிலும் விழுவதாய் இல்லை.

வீட்டின் கடைக்குட்டியாய், இராசா வீட்டுக் கன்றுக்குட்டியாய் சுற்றித் திரிந்தது நினைவுக்கு வருகிறது. அவை வெறும் ஞாபகங்களாக மட்டுமே இருந்து விடுமோ என்ற பயம் உள்ளூரப் பரவுகிறது.

எனக்குள் என்னன்னமோ நடக்கிறது. அறைக்கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன். முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. எனக்கு நானே புதிதாய்த் தோன்றுகிறேன். காரணமில்லாமல் அழுகை பொத்துக்கொண்டு வருகிறது. என்னைச் சுற்றிப் பார்வையை ஓட விடுகிறேன். பெரிய அறையில் நான் மட்டும் தனி ஆளாக. என் குடும்பத்தாரைத் தேடுகிறேன்.  

“பிள்ள முகத்தில முழிச்சிட்டுப் போனா எல்லாக் காரியமும் தடங்கல் இல்லாம நடக்குதுங்க. ராசியான பிள்ள!” அப்பாவிடம் அம்மா பல முறை சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்ட காட்சி மனக் கண்ணில் வந்து போகிறது. ஆனால், இன்று அம்மாவின் போக்கு மாறிப் போயிருந்தது.

“ரூம விட்டு வெளிய வராத புரியுதா! அப்பா அண்ணன அன்ன மூஞ்ச பாக்காத. சொல்ற வரைக்கும் நீ இங்கத்தான் இருக்கனும். வெளியில பாத்தேன், கால ஒடைச்சிடுவேன்!” அம்மாவின் இந்த ராட்சாச முகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. மிரண்டு போனேன்.

என்னைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டாடிய அப்பா என்னை நெருங்க மறுக்கிறார். நான் நெருங்க நெருங்க அவர் விலகிப் போகிறார். இரவில் திடுக்கிட்டு எழுகிறேன். அப்பாவின் முரட்டுக்  கைகளுக்குள்  அடைக்கலம் தேட மனம் ஏங்குகிறது.

“நான் என்னாப்பா தப்பு செஞ்சேன்? ஏன் என்ன யாரோ மாதிரி பாக்கிறீங்க!” அப்பாவின்  தோள்களைப் பிடித்து உலுக்கிக் கேட்கத் தோன்றுகிறது. அருகில் வந்தால்தானே கேட்பதற்கு!

நினைவு தெரிந்த நாள் முதல் என்னைச் சினேகிதியாய்ப் பாவித்து என்னோடு பொழுதைக் கழித்த அண்ணனைத் தேடுகிறேன். காணவில்லை. ஒருநாள்கூட என்னை விட்டுப் பிரியாதவன்.  அவன் முகம் பார்த்து ஏழு நாட்களாகி விட்டன. அவனும் என்னை பார்க்க எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. எத்தனை நாள் என்னை அவன் முதுகில் ஏற்றி யானைச் சவாரி செய்திருப்பான்! எத்தனை நாள் என்னைக் கட்டிப் பிடித்துத் தரையில்  புரண்டிருப்பான். கீழே தள்ளி விளையாடியிருப்பான். ஆனால், இன்று என்னைத் தொட அஞ்சுகிறான்.

வேறொருவளாகப் பரிணாமம் பெற்று வரும் என்னுள் நான் என்னைத் தேடுகிறேன்.  நான் தொலைத்த உறவுகளைத் தேடுகிறேன். ஒன்பது நாள்களுக்குப் பிறகு மஞ்சள் நீர் ஊற்றியவுடன் நான் தொலைத்தவை எல்லாம் கிடைத்து விடுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...