ஞாயிறு, 13 மார்ச், 2022

#குறுங்கதை 36 #கண்ணாடி

 

எல்லாருக்கும் சுயநலம். தன் வயிற்றுப் பிள்ளைகள் என்றால் என்னமாய் வலிக்கிறது! அலைபேசியில் அழைத்துப் பேசுவதென்ன, வீட்டிற்குப் போய் பார்த்து நலம் விசாரித்து வருவதென்ன! இரண்டு நாட்களாய் உடல் நோவு என்று சொல்லியும்கூட இன்னும் ஒரு முறைகூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. மயக்கம் மயக்கமாய் வருகிறது என்று சொல்லியும்கூட ஒரு விசாரிப்பு இல்லை. உடலோடு மனமும் சேர்ந்து வலித்தது.

 ஒரு மாதம் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது தலை மேல் வைத்துத் தாங்கினாள். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி இருப்பாளா? சமையல் அறைப்பக்கம் ஒரு நாளாவது விட்டிருப்பாளா? பிள்ளைகளைப் பார்க்கச் சொல்லி வம்பு பண்ணியிருப்பாளா? இல்லை, வெளியிடத்திற்கு அழைத்துச் சென்று துன்பப்படுத்தியிருப்பாளா? நிம்மதியாக இருக்கட்டுமெனப் பேச்சுக் கொடுத்து தொந்தரவு செய்ததுகூட கிடையாது. தனி அறை கொடுத்து அல்லவா நிம்மதியாக இருக்கச் செய்தாள். அறைக்குள்ளேயே குளியல் அறை, சிறிய தொலைக்காட்சிப் பெட்டி. வேறு என்ன வேண்டும்? கொஞ்சமாவது நன்றி இருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா?

இனி இவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தால் ஒப்புக்குப் பார்த்து அனுப்ப வேண்டியதுதான். அவர்களைப் போலவே பட்டும் படாமல் வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான். அன்பை அள்ளிக் கொட்டுவானேன் துன்பப்படுவானேன்!

 தலையில் அடித்துக்கொண்டவள் படுக்கையறையின் மூலையில் இருந்த அலங்காரக் கண்ணாடி முன் அமர்ந்து கொண்டாள். மன ஆதங்கத்தை யாரிடம் சொல்வது? தன் மேல் எந்தக் குறையும் இல்லாதபோது ஏன் அவளைப் புரிந்துகொண்டு யாரும் நடந்துகொள்வதில்லை என்ற கேள்வி தலையைக் குடைந்தது. கணவரை அழைத்துப் பேச முடிவு செய்தாள். அதில் எவ்விதப் பயனும் இல்லை என வெட்ட வெளிச்சமாய்த் தெரிய, அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். அதற்கும் ஒரு தடை வந்து சேர்ந்தது. பக்கத்தில் இருந்த அலைபேசி அலறத் தொடங்கியது. மறுமுனையில் அம்மா.“சுசிலா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும். என் மனக்கஷ்டத்தைச் சொல்லி அழனும் போல இருக்கு!. 

“ம்மா... ஏன் குரலெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு! என்ன பிரச்சன? சொல்லுங்கம்மா!”

“ஒரு வாரம்  உங்க அண்ண வீட்டில போயி தங்கனேன். வீட்டில ஒரு வேல செய்யற உரிமை இல்ல! சமையல் அறைப்பக்கம் ஒரு நாளுகூட விடல! பிள்ளைங்கள என்கிட்ட நெருங்கவே விடல! வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடந்தேன் தெரியுமா! என்கிட்ட பேசக் கூட யாருக்கும் நேரமில்ல. தனியா ஒரு ரூம்ல அனாத மாதிரி இருந்தேன். என்னால முடியலம்மா!” அம்மாவின் அழுகை பெரிதானது. அலங்காரக் கண்ணாடியில் அவள் மாமியாரின் முகம் மங்கலாய்த் தோன்றி மறைந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...