என்னைப் படைத்த இறைவன் மீது எனக்கு அவ்வளவு கோபம். நேரில் கண்டால் கேட்பதற்கு ஆயிரமாயிரம் கேள்விகள் வரிசைகட்டி நின்றன. இந்த வயதில் சந்திக்கக் கூடாத இழப்புகளையெல்லாம் சந்தித்து விட்டேன். ஏதோ ஒன்றிரண்டு என்றால் பொறுத்துக் கொள்ளலாம். நானும் மனிதன்தானே. தாங்குமா இதயம்!
எனக்கு
உயிர் கொடுத்த என அப்பாவையும் அம்மாவையும் விபத்து எனும் பெயரில் காலன் கொண்டு
சென்றபோது துடியாய்த் துடித்துப் போனேன். அவர்களின் இழப்பை ஈடுகட்ட கனவுகளோடு
கைப்பிடித்த மனைவி என்னை வேண்டாமென விலகிச் சென்றபோது உடைந்து போனேன். நான் வகித்த
உயர்ந்த பதவி கைமாறியபோது திக்கற்றுப் போனேன். கொரோனா வந்து உடல்நலம் கெட்டபோது
வலுவிழந்து போனேன். உயிராய் நினைத்த நண்பன் துரோகம் செய்தபோது நம்பிக்கையிழந்து
போனேன். இன்னும் எத்தனை எத்தனையோ இழப்புகள்!
சோர்ந்து போய் கட்டிலின்மேல் சாய்ந்துகொண்டேன். கண்களை மூடித்
தூங்க முற்படும்போது யாரோ என்னைப் பலம் கொண்டு அழுத்த, திமிரிக் கொண்டு எழுந்தேன். மனத்தின் படபடப்பு அதிகரித்தது. உடலெல்லாம்
வெடவெடத்தது. இரண்டு முடக்குத் தண்ணீரைக் குடித்து என்னை நானே ஆசுவாப்படுத்திக் கொண்டேன்.
தூக்கத்தில்கூட நிம்மதி இல்லை. என்னடா வாழக்கையென நொந்துகொள்வதைத் தவிர வேறு என்ன
செய்ய முடியும்! மீண்டும் கண்களை மூடி வராத தூக்கத்தை வலுக்கட்டாயமாக வர வைக்கப்
போராடினேன். தூக்க மாத்திரையைத் துணைக்கு அழைத்தேன். அப்பொழுதும் முடியவில்லை.
விரக்தியுடன் எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
எனக்கு மிக மிக அருகில் யாரோ உட்கார்ந்திருப்பதை உணர்ந்தேன். அச்சம் மனத்தில் பரவ, எழுந்து இரண்டடி பின்னால் சென்றேன்.
“ஏன்பா? பயமா?” குரலைக் கூர்ந்து கேட்டேன். முன் பின்
கேட்டிராத குரல்.
“பயப்படாம! என் அறைக்குள்ள
எனக்கே தெரியாம யாராவது வந்தா பயமா இருக்காதா?” தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு எதிர் கேள்வி கேட்டேன்.
“நான் கடவுளா இருந்தா?”
“கடவுளா?” சத்தமாகச் சிரித்தேன்.
“சரி, அத விடு! இழப்புகள்தான் வாழ்க்கையா இருக்குன்னு சொல்லி வருத்தப்பட்டீயே, அதப் பத்தி கொஞ்சம் சொல்லு, கேட்கிறேன்!”
“அது எப்படி உங்களுக்குத்
தெரியும்!” என் புருவங்கள் தானாய் உயர்ந்து கொண்டன.
“சரி, நேரத்த வீணடிக்காத! எதையெல்லம் இழந்தன்னு கொஞ்சம் பட்டியல் போடறீயா!”
சிரித்துக் கொண்டே கேட்டவர் மீது கோபம் வந்தது.
நான் இழந்த இளமை, உடல்நலம், நல்ல நட்பு, அனைத்தையும் மூச்சு விடாமல் அடுக்கத்
தொடங்கினேன். பட்டியல் நீளமாய்ப் போய்கொண்டே இருந்தது. மூச்சு வாங்கியது.
“சரி! சரி! நிறுத்து. நீ இழந்ததெல்லாம்
என்னால திரும்ப கொடுக்க முடியும். கொடுக்கட்டுமா?”
“முடியுமா! என்னால நம்ப
முடியல! சத்தியமா?”
“சத்தியமா கொடுக்க
முடியும். ஆனா, இன்னும் சில இழப்புகள நீ சொல்ல மறந்திட்ட. உழைச்சதனால
வறுமைய இழந்த, படிச்சதனால அறியாமைய இழந்த, நல்ல உறவுகள்னால தனிமைய இழந்த, நல்ல குணத்தினால
விரோதிய இழந்த. இந்த இழப்ப எல்லாம் திரும்ப கொடுக்கட்டுமா?
சொல்லு... கொடுக்கட்டுமா?”
எனக்குத் தலைசுற்றிப்
போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக