எனக்கு இந்த உலகம் தெரிந்த நாள்முதல் உன்னை எனக்குத்
தெரியும். உன்னைப் பார்த்த அன்றே காதல் கொண்டேன். ஆனால், இதுவரை
யாரிடமும் சொன்னதில்லை. உன்னிடம்கூட சொன்னதில்லை என்று நினைக்கும்போது எனக்கே
ஆச்சரியமாய் உள்ளது. சொல்லியிருக்க வேண்டுமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. இன்று நீ உன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும்போது
தோன்றுகிறது. சொல்லியிருந்தால் உன்னைக் காப்பாற்றி இருக்கலாமோ என்னவோ! குற்ற
உணர்ச்சி என்னைக் கொல்கிறது.
தினம் தினம் உன் தரிசனம் இல்லாமல் என் வாழ்நாள்
கழிந்ததில்லை. அது உனக்கே தெரியும். உன் நீண்ட நெடிய உருவத்தைப் பார்த்து எத்தனையோ
முறை பிரமித்துப் போயிருக்கிறேன். உன் கம்பீரத்தைப் பார்த்து வியந்து
போயிருக்கிறேன். உனைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு நாளும் என் ஓரவிழிப் பார்வையால்
இரசித்துச் சென்றிருக்கிறேன். அந்நேரம் என் விழிகள் அகன்று மனம் நிறைந்துபோகும். என்னுடன்
கைகோர்த்து நடப்பவர்களுக்குக் கூட அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு நாள் யாரும் இல்லாத நேரம் பார்த்து இரகசியமாய் உனைப்
பார்க்க வந்தேன். அன்றுதான் முதல் முறையாய் மிக மிக அருகில் நின்று உனைப்
பார்த்தேன். மனம் பூரித்துப் போனது. உன் பரிசம் பட்டு எனைத் தழுவிச் சென்ற காற்று
புத்துணர்ச்சி தந்தது. அந்தரத்தில் மிதக்கத் தொடங்கினேன். நேரமாக ஆக சிறகடித்துப் பறக்கத்
தொடங்கினேன். ஏன் என்று மட்டும் கேட்டு விடாதே. எனக்குக் காரணம் சொல்லத் தெரியாது.
இதோ எனக்கும் உனக்குமான உலகத்திற்குள் அந்நியர்கள்
புகுந்து நாச வேலையைச் செய்யத் தொடங்கி விட்டனர். ஈவு இரக்கமின்றி உன் உடம்பை
ரணப்படுத்தி உறுப்புகள் ஒவ்வொன்றாய் துண்டித்து வீசுகின்றனர் பாவிகள். உன் கதறல்
சத்தம் எனக்கு மட்டுமே கேட்கிறது. என் இதயமும் ரணமாகிறது. ரத்தம் சொட்டுகிறது. நானும்
சத்தமாய்க் கதறி அழுகிறேன். என் அழுகை மட்டும் நயவஞ்சகர்களுக்குக் கேட்டு விடவாப்
போகிறது? இரும்புக் கரங்களால் உன் உடற்பாங்களை இழுத்து ஓரிடத்தில்
மலை போல் குவிக்கின்றனர். இனியும் அங்கிருந்தால் மூர்ச்சையாகிப் போவேன். நான்
போகிறேன். பிரிவைத் தாங்க முடியாமல் போகிறேன்.
இதற்குப் பிறகு விறகாவாயோ! இல்லை இந்த
மண்ணிற்கு உரமாவாயோ! வேறொரு பிறப்பெடுத்து எனை வந்து சேர்வாயோ! சத்தியமாய்
எனக்குத் தெரியாது. ஆனால், நான் உனக்காகக் காத்திருப்பேன். எனை மறந்து விடாதே! என்
நினைவுகளைத் துறந்து விடாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக