இன்றைய
விடியல் தன் வாழ்க்கையை அஸ்தமிக்கச்
செய்து விடுமெனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை இராமசாமி. நாற்பது ஆண்டுகள்
தன்னோடு பயணித்தவள், தன் சுக துக்கங்களில் பங்கு
கொண்டவள், தான்தான் எல்லாமென வாழ்ந்தவள் உறக்கத்தில் உலக
வாழ்க்கையைத் துறந்து போனாள். திடீரென விட்டுப் போனாள்.
“என்ன அவசரம்
அன்னம்! ஏன்? நான் என்ன பாவம் பண்ணேன்?
ஏன் இப்படித் திடீர்னு என்னை அனாதையாக்கிட்டுப் போயிட்ட?” வாய்க்குள்ளேயே
முணுமுணுத்துக் கொண்டார். பெட்டிக்குள் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தவளை
வெறித்துப் பார்த்தார். அவர் கண்களில்
கண்ணீரைப் பார்க்க விரும்பாதவள் அன்னம். மறந்தும் கண்ணீருக்கு அனுமதி தரவில்லை
இராமசாமி.
நேற்றைய
இரவு மகிழ்ச்சியாய்த்தான் இருந்தாள்.
மடியில் படுத்துக் கொள்ளட்டுமா எனப் பார்வையாலே கேட்டாள். முகத்தின் சுருக்கம்
அவள் நாணத்தை ஒன்றும் மறைத்து விடவில்லை. என்ன என்பது போல் அவளைப் பார்த்த
இராமசாமியின் கண்களைத் தன் வறண்ட கைகளைக் கொண்டு மூடியபோதுகூட அவள் இறுதி ஆசை
அதுவாக இருக்குமென இராமசாமிக்குத் தெரியாமல் போனது. மடியில் படுத்தவளின் முடியைக் கோதியபோது அவன்
சிணுங்கித் திரும்பிக் கொண்டாள். முகமெல்லாம் பரவசம். முதுமையிலும் அவள் அழகாய்த்
தோன்றினாள்.
“ஏன் அன்னம், உன்கிட்ட ஒன்னு கேட்கனும், பதில் சொல்வீயா!”
பேசியவன் கண்களை அவள் பார்வை ஊடுருவிச் சென்றது. பார்வையாலே தன் கணவனின் நெஞ்சுக்குழி
வரை போய் வந்தாள்.
“கடைசி வரைக்கும்
என்கூடவே இருப்பீயா?” தொண்டை அடைத்துக் கொண்டது.
பதிலேதும்
வரவில்லை. அவள் விழியோரங்களில் கண்ணீர் மட்டும் எட்டிப் பார்த்தது. அது வடிந்து
காய்ந்து போகும் வரை இரு உள்ளங்களும் உணர்வுகளைச் பார்வையால் சத்தமின்றி பரிமாறிக்
கொண்டன. இந்த நாற்பது ஆண்டுகளில் தன் அன்பு மனைவியின் உணர்வுகளை வார்த்தைகளாய்க் கேட்டதில்லை. அது
பற்றி இராமசாமிக்குக் கவலையோ வருத்தமோ வந்ததில்லை.
“ஊமப் பொண்ண
கட்டிக்கிட்டு என்னடா பண்ணப்போற?” எனக் கேட்டவர்கள் மூக்கின்
மேல் விரல் வைக்கும் அளவிற்கு அவளோடு வாழ்ந்து காட்டி விட்டார். அவள் குறை அவளுக்கு மறந்து போகச் செய்த இராமசாமியை அன்னம்
தன் குலதெய்வமாய்ப் பார்த்தாள் என்பது இராமசாமிக்கு மட்டுமே தெரியும்.
“நீ இல்லாத வாழ்க்கைய
என்னால யோசிக்க முடியல அன்னம். நீ போகனும்னு முடிவு பண்ணிட்டா என்னையும் கையோட
கூட்டிக்கோ! புரியுதா!” எழுபதை நெருங்கிக் கொண்டிருந்த இராமசாமியின் குரல் நடுங்கியது.
அப்பொழுதும்கூட பதில் கூற மறந்து போனாள் அன்னம். நினைவுகளின் தாலாட்டில் அப்படியே
உறங்கிப் போனவர்கள்தான். காலையில் தன் மடியில் கிடந்தவளைத் தட்டி எழுப்பியபோது, இராமசாமியின் உலகம் இருண்டு போனது.
உறவுகள்
கூடத் தொடங்கின. அளவேயில்லாமல் ஆறுதல் வார்த்தைகள் குவியத் தொடங்கின.
வருவோர் போவோரின் பரிதாபப் பார்வை அவரைச்
சூழ்ந்துகொண்டன. எதுவும் இராமசாமியின் கண்களுக்குத் தெரியவில்லை. காதுகளில்
விழவில்லை. இனி இராமசாமியும் ஊமைதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக