“இன்னும் எத்தனை கல்யாணம் பண்ணுவே அபி. நீ பண்ற காரியத்தினால வெளிய தல காட்ட முடியாம இருக்கிறோம்! உனக்குப் புரியிதா இல்லையா? தலையில் அடித்துக் கொண்டு அழுத அம்மாவைச் சலமின்றி பார்த்தாள் அபிராமி.
செல்வனுடனான
வாழ்க்கை கேள்விக்குறியானபோது குடும்பமே துன்பத்தின் உச்சம் தொட்டு வந்தது.
பார்த்துப் பார்த்துச் செய்த திருமணம். ஒருமுறைக்குப் பலமுறை பையனின்
குடும்பத்தைப் பற்றி விசாரித்ததில் திருப்தி ஏற்பட அபிராமியின் திருமணம்
ஈராண்டுகளுக்கு முன்பு தடபுடலாய் நடந்து முடிந்தது. ஊர் கண் பட்டதோ உறவுக் கண்
பட்டதோ யாருக்குத் தெரியும். ஓராண்டிலேயே மகளின் வாழ்க்கையில் துன்பங்கள்
தொற்றிக்கொள்ள துடித்துப் போயினர் அவள்
பெற்றோர். வார்த்தையோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அடி உதையால் உடல் கண்ணி முகம்
வீங்கி வந்து நின்ற மகளை ஆரத்தழுவி கொண்டாள் அபிராமியின் அம்மா ஆனந்தவள்ளி.
சிதம்பர ரகசியமாய் இருந்த அப்பாவின் உணர்ச்சிகளை இன்றுவரை புரிந்துகொள்ள முடியாமல்
குழம்பிப் போயிருக்கிறாள் அபிராமி.
பிரிவின்
வலியால் எத்தனையோ இரவுகள் அவளுக்குச் சிவராத்திரியாய் அமைந்திருக்கின்றன. ஊராரின்
பேச்சால் எத்தனையோ நாட்கள் நரகமாய்த் தோன்றியிருக்கின்றன. தன் துன்பத்தை யாரிடமும்
பகிர்ந்திட அவள் எண்ணியதில்லை. தன் பாரத்தைப்
பிறர் மேல் ஏற்றி வைக்க அவள் விரும்பியதில்லை.
தனக்கெனத்
தனியொரு உலகத்தை உருவாக்கி வாழத்தான் நினைத்திருந்தாள், ஜெகனைச் சந்திக்கும் வரை. ஜெகனின்
அமைதி, அக்கறை, அன்பு அவள் மனத்தை மாற்ற
மூன்றே மாதங்கள்தான் தேவைப்பட்டன. வெளிப்படையாய்த் தன் கடந்த கால உண்மைகளைச் சொன்னபோது, அவன் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. அபிராமியின் வாழ்வில் மீண்டுமொரு வசந்தகாலம்.
அதை உதறித்தள்ள அவள் விரும்பவில்லை. ஏற்றுக்கொண்டாள். கோயிலில் திருமணம். அபியின் குடும்பத்தார், ஜெகனின் நண்பர்கள் ஆசிர்வாதத்தோடு
எல்லாம் சிறப்பாய் இன்று காலை நடந்து முடிந்தது.
தாலி கழுத்தில்
ஏறிய அடுத்த சில மணி நேரங்களில் வந்த ஒரு கைப்பேசி
அழைப்பு வாழ்க்கையைச் சுக்குநூறாய்ச் சிதறச் செய்யும்மென அவள் கனவிலும் நினைத்துப்
பார்க்கவில்லை. உடைந்து போனாள். மடிந்தும் போயிருப்பாள் சாதாரண பெண்ணாக இருந்திருந்தால்.
ஜெகனின் முதல் மனைவியின் அழுகை அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
“என்ன அபி, இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கிற! பார்க்கப்போனா நீ எனக்குக் கோயில் கட்டிக்
கும்பிடனும். வாழாவெட்டியா நின்ன உனக்குப் பெரிய மனசு பண்ணி வாழ்க்க கொடுத்திருக்கேன்!
நீ சம்மதிச்சா என் ரெண்டாவது பொண்டாட்டியா எப்பவும் என் கூட இருக்கலாம்!” ஜெகனின் வாய்
விசத்தைக் கக்கியது.
அபிராமியின் கண்கள் கலங்கவில்லை.
அவள் வாய்விட்டுக் கதறி அழவில்லை. கழுத்திலிருந்த தாலியைக் கழற்றினாள். கோயில் உண்டியில்
போட்டாள். திரும்பிப் பார்க்காமல் கோயிலை விட்டு வெளியேறினான்.
“இன்னும் எத்தனை கல்யாணம் பண்ணுவே அபி?” அம்மாவின் வார்த்தைகள் அவளைத்
தொடர்ந்து கொண்டே வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக