புதன், 6 ஏப்ரல், 2022

#குறுங்கதை 060 #வளர்ப்பு

 

ஒரு வாரமாக அப்பாவிற்கும் அம்மாவுக்கும் சண்டையாம். பாட்டி சொன்னார். நான் பார்க்கவில்லை. இன்று காலையிலேயே வரவேற்பறையில் சண்டை விசுவரூபம் எடுத்தது. வரவேற்பறையில் நான். பாட்டி கேட்டும் கேட்காததுபோல் சமையல் வேலையில் இறங்கி விட்டார். அவர் கவனம் எல்லாம் அம்மா அப்பாவின் வாக்குவாதத்தில்தான் இருக்குமென்று எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் பாட்டி அமைதியாய் இருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

“இதோ பாரு பானு, நீ பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்ல! மரியாதையா இந்த டிவோஸ் பத்திரத்தில சைன் போடு! இல்ல நடக்கிறதே வேற!” அப்பா இப்படிப் பேசி நான் பார்த்ததில்லை.

“என்ன(னை) டிவோஸ் பண்ணிட்டு நீங்க புது பொண்டாட்டியோட சந்தோசமா இருக்கணும். நான் தனியா கெடந்து சாகனும், அதானே! கேட்க ரொம்ப நல்லாயிருக்கு! நீங்க நெனைக்கிறது கனவுலேயும் நடக்காது!” என் காதுபடச் சொன்ன அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். அவர் பார்வை அப்பா மேல் இருந்தது.

அப்பாவிற்கு இன்னொரு கல்யாணமா? மனம் நம்ப மறுத்தது. அப்படியென்றால் நான், அம்மா, பாட்டி எல்லாம் எப்படி? மூளை பலவாறாய் யோசிக்கத் தொடங்கியது.

“ம்மா, ப்பா... ப்லீஸ், அவசரப் படாதீங்க. என்ன பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!“ சன்னமான குரலில் கெஞ்சுகிறேன். கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது. அந்தக் கெஞ்சல் அவர்களைப் போய்ச் சேராதது என் துரதுஷ்டம்.

“இதுக்கு மேல உன்கூட இந்த வீட்டுல வாழனும்னு நெனைச்சாலே பயமா இருக்கு. இது வீடு இல்ல, நரகம்!” தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்துகொண்ட அப்பாவின் மேல் கோபம்தான் வந்தது. எங்களைப் பற்றி அவருக்கு அக்கறையில்லை. குறிப்பாக என்னைப் பற்றி கொஞ்சம்கூட கவலையில்லை. இவர்கள் பிரிந்து விட்டால் என் கதி? இருவருமே யோசிப்பதாகத் தெரியவில்லை. சமரசம் செய்ய வேண்டிய பாட்டி சமையலறையில் ஐக்கியமாகிவிட்டதை நினைக்க நினைக்க கோபம் வந்தது.

“ஆமா, இது நரகம்தான். இத்தனை வருஷம் உங்களுக்கு வேலைக்காரி மாதிரி எல்லாத்தையும் செஞ்சேன்ல. என்னைப் பத்தி யோசிக்காம, உங்களுக்காக வாழ்ந்தேன்ல. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!” அம்மா விடுவதாயில்லை.

“உன் வீட்ல உன்ன ஒழுங்கா வளர்த்திருந்தா, நல்ல பொண்டாட்டியா, புருஷனுக்கு அடங்கி ஒழுங்கா வாழ்ந்திருப்ப.  வளர்ப்பு சரியில்ல. அதான் பொம்பளயா இல்லாம இப்படிப் பேயாட்டம் ஆடற!” அப்பாவின் காரசாரமான வார்த்தைகளைக் கேட்க நான் விரும்பவில்லை. காதுகளைப் பொத்திக் கொண்டேன்.

வரவேற்பறை போர்க்களமாகிக் கொண்டிருந்தது. அவர்களைத் தடுக்கும் வயதில் நானில்லை.

“சரிங்க தம்பி. நீங்க சொல்றது என்னமோ சரிதான். என் பிள்ளைய எனக்கு வளக்கத் தெரியலதான். இந்தாங்க... பிடிங்க. உங்க பொம்பள பிள்ளைய எப்படிச் சரியா வளக்கணும்னு வளத்துக் காட்டுங்க! நான் கத்துக்கிறேன்!” அடுத்த நொடி என்னைத் தூக்கி அப்பாவின் கைகளில் கொடுத்துவிட்டுப் பாட்டி மீண்டும் சமையலறைக்குள்  நுழைந்து கொண்டார்.

நான் அப்பாவைப் பார்க்க, அப்பா என்னைப் பார்க்கிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...