வியாழன், 7 ஏப்ரல், 2022

#குறுங்கதை 061 #முடிவான முடிவு

 

         


            காலையில் எழுந்ததிலிருந்தே பரமசிவத்தின் அடிமனத்தில் நெருடலாக இருந்தது. எஸ்.பி.எம். முடிவு அறிவிக்கப்பட்டது முதல் வீட்டில் ஒரே கலவரம்தான். திண்டாடிப் போனார் பரமசிவம். மகனுக்கு வக்காலத்து வாங்கும் மனைவியை நம்பிப் பயனில்லை.  

    மகனின் விருப்பத்தை நிறைவேற்ற மலை அளவு ஆசை. குடும்பத்தின் நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே! தவித்துப் போனார். மகனை மருத்துவத் துறையில் படிக்க வைப்பது அவர் சக்திக்கு மீறிய செயல் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். வழி தேடியாக வேண்டும். தீவிரமாய் யோசிக்கத் தொடங்கினார்.

    முப்பது ஆண்டுகளாய்த் தனியார் நிறுவனத்தில் வேலை. ஓரளவு வருமானம். நான்கு பிள்ளைகள். மனைவி இல்லத்தரசி. குடும்பத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய ஒவ்வொரு மாதமும் திணறிப் போகும் பரமசிவத்தின் துன்பத்தை உணர்ந்துகொள்ள ஒருவரும் இல்லாததுதான் அவலத்தின் உச்சம்.

“என்னங்க... பையன் டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்படறான். நீங்க என்ன சொல்றீங்க?” சாப்பாட்டு மேசையில் மனைவி சொன்னபோது புரையேறிக் கொண்டது. அதைப் பற்றி அவர் அருமை மனைவி கொஞ்சமும் கவலைப்பட்டதாய்த் தெரியவில்லை. தொண்டையைச் செருமிக் கொண்டார்.  

“டாக்டருக்கா? நெறைய செலவாகுமே ஜானு! பணத்துக்கு எங்க போறது?” மனைவியைப் பார்த்தார். மனைவியின் கவனம் பரிமாறுவதில் இருந்தது.

“எங்க போறதுன்னா! நீங்கதான் எங்கையாவது கேட்டுப் பாக்கணும். பையனோட ஆசைய நிறைவேத்திறது நம்ப கடம... மறந்திடாதீங்க!” குரலில் கடுமை தெரிந்தது. பரிமாறும் சேவைக்கு முன்னறிவிப்பின்றி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஒழுங்கா படிச்சிருந்தா. அரசாங்க பல்கலைக்கழகத்துல இடம் கெடைச்சிருக்கும். படிக்க வேண்டிய நேரத்தில ஒழுங்கா படிக்கல... ஆனா, டாக்டர் ஆகனும்! சத்தியமா எனக்குப் புரியல ஜானு!” உச்சுக் கொட்டிய கணவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் ஜானு என்கிற ஜானகி. அவள் கோபத்தீயின் தனலைத் தாங்கும் வலிமை அவருக்கில்லை.

பசி முழுமையாக அடங்கும்முன்னே எழுந்து கொண்டார். கைகளைக் கழுவிக் கொண்டார். தலையெல்லாம் விண்விண் என்றிருந்தது. அறைக்குச் சென்றவர் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஆண்கள் அழக்கூடாது, உடைந்து போகக் கூடாது. இது உலகம் வகுத்த நியதி. கண்களைத் துடைத்துக் கொண்டார். யோசனையைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்.

இன்று முடிவைச் சொல்லாவிட்டால் மனைவி புலியாய்ப் பாய்ந்து குதறி விடுவாள். மகன் வாழ்க்கையின் முதல் எதிரியாய் அவரைப் பார்க்கத் தொடங்கி விடுவான். சட்டையை மாட்டிக் கொண்டு காரில் ஏறினார். ஒரு கையில் ராஜினாமா கடிதம் மற்றொரு கையில் வீட்டுப் பத்திரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...