வெள்ளி, 8 ஏப்ரல், 2022

#குறுங்கதை 062 #சமையல்காரன்

 

“மது... என்ன(னை) மன்னிச்சிக்கோ.  என் அப்பா அம்மா நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிக்கல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல! அவங்கள எதிர்க்கிற தைரியம் எனக்கில்ல!” சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு மதுமிதாவைப் பார்த்தான் சேகர்.

“ஏன் சேகர்? எதனால அவங்களுக்கு என்ன(னை) பிடிக்காமச் போச்சி!” குரலில் சுருதி குறைந்திருந்தது.

“உங்கப்பாவ கணபதி ரெஸ்டோரன்ல பார்த்திருக்கிறாங்க. அவருகிட்ட பேசியிருக்காங்க. அவரு அங்க சமையல்காரரா வேல செய்றது அவங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சி... அதான்”

“எனக்குப் புரியல சேகர். எங்க அப்பா சமையல்காரரா வேல செய்றதுக்கும், நம்ம காதலுக்கும் என்ன சம்பந்தம்?” சேகரை வெறித்துப் பார்த்தாள் மதுமிதா.

சேகரின் கண்களை ஊடுருவிச் சென்று அவன் மனத்தில் நினைப்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டான் சேகர்.

சேகரின் குடும்பத்தைப்பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஊரில் வசதியான குடும்பம். அப்பா அம்மா இருவருமே அரசாங்க மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள். மதுமிதா தன் குடும்ப நிலையைப் பற்றி எவ்வளவோ சொல்லியும் துரத்தித் துரத்திக் காதல் செய்தவன்தான் இந்தச் சேகர். ஆனால், இன்று சாக்குப் போக்குச் சொல்லி அவளைக் கைகழுவப் பார்க்கிறான்.

“என்ன(னை)  என்ன பண்ணச் சொல்ற. அவங்க சம்மதம் இல்லாம என்னால ஒன்னும் பண்ண முடியாது மது. புரிஞ்சிக்கோ!” அவன் பேச்சில் வருத்தத்தை விட அலட்சியம்தான் மேலோங்கி இருந்தது.

“ஒன்னு சொல்றேன், நல்லா கேட்டுக்கோ சேகர். எங்க அப்பா சமையல்காரரா இருந்து சம்பாதிச்ச காசுலதான் நான் வளர்ந்தேன், படிச்சேன். இன்னைக்கு நல்ல வேலையில இருக்கிறேன். அவர் யாருக்கிட்டேயும் கையேந்தல. யார் வயித்திலேயும் அடிச்சிப் பொழைக்கில. எங்கப்பா ஒரு சமையல்காருன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எந்த அவமானமும் இல்ல சேகர்! எங்க அப்பாவவிட எனக்கு வேற எதுவும் பெரிசில்ல!”

சேகருக்குச் சொல்ல வார்த்தையில்லை. மௌனம் காத்தான். அவன் பார்வை ஓரிடத்தில் இல்லை. அவன் பதிலுக்காகக் காத்திருந்தவள் பொறுமையிழந்தாள்.

“சரி சேகர்... இங்க நிக்கிறதுல அர்த்தமில்லன்னு தோனுது. நான் கிளம்பறேன்!”

அவள் சொல்லி முடிப்பதற்குள் சேகரின் அலைபேசி அலறத் தொடங்கியது.

“டேய் சேகர், நீ வெளிநாட்டுல செவ்வுக்குப் (chef) படிக்கிறதுக்கு எப்ளை பண்ணியிருந்தல. நல்ல செய்தி வந்திருக்குடா. காங்ரேட்ஸ். கணபதி ரெஸ்டோரன்ல இன்னைக்கு உனக்கு த்ரீட். மறக்காம சீக்கிரம் வந்திடு!” அவன் அம்மாவின் உற்சாக வார்த்தைகள் காற்றுவழி வந்து அவள் செவிகளில் விழுந்தன. அவன் அவசரமாய்க் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மதுமிதா முகத்தில் வறட்சிப் புன்னகை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...