சனி, 9 ஏப்ரல், 2022

#குறுங்கதை 063 #இரண்டில் ஒன்று...

 


நீ என்னை அசிங்கப்படுத்தியது போதும். கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது என் மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. அதற்கு நீதான் முதற்காரணம் என்பதை நீ ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எத்தனையோ முறை உன்னைத் திருத்தப் பார்த்தேன். முடியவில்லை. காலம் அதற்கு வழிவிடவில்லை. உறவுகளின் உதவியையும் கேட்டுப் பார்த்தாகி விட்டது. முடியாதென்று கைவிரித்து விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்!  

உன்னால் எத்தனை அவமானங்கள், எத்தனை கிண்டல் பேச்சுகள். தாங்க முடியாமல் எப்படியெல்லாம் தவித்துப் போயிருப்பேன். உன்னால் என்னை முன்னால் விட்டுப் பின்னால் பேசியவர்கள் எத்தனையோ பேர். காதில் விழுந்தும் விழாததுபோல் எத்தனை நாள்தான் நடிக்க முடியும்! உணர்ச்சிகளற்ற மரக்கட்டையாய் இருந்திருந்தால் நான் இப்படி வருந்தியிருக்க மாட்டேன். மனிதனாகப் பிறந்து விட்டதுதான்  என் தப்பு!

இப்படியே போனால், உன்னால் என்னை ரவுடி என முத்திரை குத்தி விடுவார்கள். குடும்பத்தின் அவமானச் சின்னமாய்ப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.  அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. இரண்டில் ஒன்று பார்த்தாக வேண்டும். இல்லையென்றால் என் குடும்பத்திற்கும் அவமானம் சேர்ந்து விடும். இன்றாவது என் மனக்குமுறலுக்குப் பதில் கிடைத்து விடாதா எனப் பார்க்கிறேன். உனக்கு முடிவு கட்ட காலம் நெருங்கி விட்டது. ஆ சோங் ஒருவனால் மட்டுமே இதற்கு வழி சொல்ல முடியும். அவனை அழைத்துப் பேசி விட்டேன். உடனே ஒத்துக்கொண்டு விட்டான்.

      இன்னும் சில மணி நேரம் பொறுத்துக்கொள். ஆயுதங்களோடு வரப் போகும் ஆ சோங்கிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஆயுதங்கள் உன்னைப் பதம் பார்க்கப்போவது உறுதி. அதன் பின் நீயா நானா என ஒரு கை பார்த்து விடுகிறேன்.  இன்னும் பத்து நிமிடங்கள். உன் இறுதி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். வெட்டுவதை விட வேறு வழியில்லை.

இதோ காத்திருந்த நேரம் நெருங்கி விட்டது. ஆ சோங் வந்து விட்டான். உன்னைக் களையெடுக்கப் போகிறான். கையில் ஆயுதங்களை எடுத்து விட்டான். என் முகமெல்லாம் மகிழ்ச்சி பரவுகிறது. உள்ளமெல்லாம் பூரிக்கிறது. மிக மிக அருகில் அவன். உன்னைக் கூர்ந்து பார்க்கிறான். கவனமாய் இரு.  அவன் முடிவு செய்து விட்டால் யாராலும் தடுக்க முடியாது. முழுப் பொறுப்பை அவனிடம் கொடுத்து விட்டேன்.  அவன் வேலையை ஆரம்பித்து விட்டான். சத்தமின்றி இரத்தமின்றி நீ வெட்டப்படுவதைக் கண்குளிரப் பார்க்கிறேன். விட்டது தொல்லை. வந்தது நிம்மதி. தரை மேல் கேட்பாரற்றுக் கிடக்கும் உன்னைப் பார்க்க பரிதாபமாய் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...