ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

#குறுங்கதை 064 #உதிரம்

 

தங்கையின் கதறல் தேவனைத் தூக்கி வாறிப்போட்டது. அவள் அறைக்கு ஓடோடிப் போய்ப் பார்த்தான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள் பதினெட்டு வயது நிரம்பிய தங்கை. கண்கள் கலங்கி முகம் சிவந்து கிடந்தது. என்னவென்று சைகைவழி கேட்டவனை வெறித்துப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு மிரட்சி. காரணம் புரியாமல் தவித்தான்.

“வயிறு வலிக்குதா? கக்கா போறீயா?

பதில் இல்லை. வயிற்று உபாதையாக இருக்க வேண்டுமெனக் ஊகித்துக் கொண்டான். சமையல்கட்டிற்கு ஓடோடிச் சென்றான். ஓமத்திராவக போத்தலை அவன் கண்கள் வலை வீசித் தேடின. தென்படவில்லை.

தங்கையின் அழுகை சமையல்கட்டு வரை கேட்க, பரபரப்பானான். அவன் அவசரம் புரிந்ததோ என்னவோ, அடுத்த சில நொடிகளில் அவன் கண்களுக்கு அகப்பட்டுக்கொண்டது அந்த ஓமத்திராவகப் போத்தல். தண்ணீர் டீஸ்பென்சர் அருகே போத்தல்கள் வரிசைக்கட்டி நிற்க, ஓடிசென்று எடுக்கப் போனவனின் கைபட்டு, ஒரு கிச்சாப் போத்தல் கீழே விழுந்து சிதற, பதறிப் போனான்.  தரையெல்லாம் கிச்சாப் ஆறாய் ஓடத் தொடங்கியது. அதைச் சுத்தப்படுத்தும் மனநிலையில் அவன் இல்லை. ஓமத்திராவகப் போத்தலை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு தங்கையின் அறையை நோக்கி ஓடினான்.

தங்கையின் அழுகை நின்றபாடில்லை. ஓமத்திராவகத்தைக் குடிக்கச் சொன்னான். முரண்டு பிடித்தாள் அவள். வாயில் ஊற்றப் பார்த்தான். தள்ளி விட்டாள். பொறுமையிழந்தான் தேவன்.

“என்ன பண்ணுது? ஏன் இப்படிப் பண்ற?” குரலில் கோபமும் சலிப்பும் வெளிப்படையாகவே தெரிந்தன.

அவள் மிரண்டு போனாள். வாயிருந்தும் பேச முடியாதவள், கால்களிருந்தும் அறையில் முடங்கிக் கிடப்பவள். என்ன செய்வாள் பாவம்!  இத்தனை காலமும் தங்கையின் அனைத்துக் காரியங்களையும் பார்த்துக் கொள்வது அம்மாவின் பொறுப்பாகவே இருந்தது,  இரண்டு வாரங்களுக்கு முன் மாரடைப்பால் அவர் இறந்து போகும் வரை.   

தன் உடன் பிறந்தவள், பிறந்தது முதல் தன் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ள முடியாதவள், சுயமாய் ஓரிடத்திற்கு நகர்ந்து செல்ல முடியாதவள்.  அவளை வைத்துக் கொண்டு அம்மா பட்ட பாட்டை அவன் பார்க்காமல் இல்லை. ஆனால்,  பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான். மறந்தும் அவருக்கு உதவியதில்லை. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவள் பிறந்தபோது அவளை இரத்தக் கறையோடு கையில் ஏந்திப் பிடித்தவன் அவன்தான். வீட்டில் ஆளில்லாத வேளையில் அம்மாவிற்கு வீட்டிலேயே பிரசவமாக, பயந்து போய் செயலற்று நின்றதை இன்று நினைத்தாலும் அவன் உடலெல்லாம் நடுங்கும்.

தங்கையின் அழுகை பெரிதாகத் தொடங்கியது. முகத்தில் வேதனையின் அறிகுறி  பரவிக் கிடந்தது. தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள். ஏதோ சொன்னாள். கோணிப் போயிருந்த வாயிலிருந்து வார்த்தைகள் பொருளின்றி வெளியே வந்து விழுந்தன. சற்று யோசித்தவன், அவள் மலம் கழிக்க வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை எடுத்தான். அவள் இடுப்பைக் கொஞ்சமாய்த் தூக்கி, அந்தப் பாத்திரத்தை வைத்தான். அவள் அலறத் தொடங்கினாள். மீண்டும் அவனைத் தள்ளி விட்டாள். தலை சுற்றிப் போனது.

“ஏன் இப்படிப் படுத்துற?” கத்தினான். வெறுப்பு மேலிட பாத்திரத்தை அகற்றினான். அதில் மலத்திற்குப் பதிலாக தங்கயின் உதிரத்தைப் பார்த்தான். தங்கையின் நிலை புரிந்து போனது. அடுத்த சில நிமிடங்கள் அவன் அவளுக்குத் தாயாகிப் போனான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...