வகுப்பில் என்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் வகுப்புத்
தோழிகளைச் சுற்றி என் கண்கள் வலம் வருகின்றன. முன் வரிசையில் அமர்ந்திருக்கும்
அமுதாவைப் பார்க்கிறேன். அவளது நீண்ட முடி என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது.
என் குட்டை முடியைத் தொட்டுப் பார்க்கிறேன். கழுத்தின் அளவைக்கூட தாண்டவில்லை. எத்தனையோ
முறை அம்மாவிடம் முடியை வெட்ட வேண்டாமென மன்றாடி விட்டேன். அம்மா வளைந்து கொடுப்பதாய்
இல்லை. ஒரு முறை அடம் பிடித்துத் துடைப்பைக் கட்டியால் அடி வாங்கியதுதான்
மிச்சம்.
அமுதாவின் சிவந்த மேனி, மெலிந்த
தேகத்தைப் பார்த்து பலமுறை பொறாமைப்பட்டிருக்கிறேன். அவள் அழகுக்காக அவளுடன் நட்புகொள்ள
விரும்பியவர்களைப் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் அவளுக்கு
நேர் எதிர். கருத்த மேனி. பெருத்த உடம்பு. பல வேளைகளில் எனக்கே என்னைப் பிடிக்காமல்
போயிருக்கிறது.
வலது பக்கத்தில் மலர். எவ்வளவு வடிவான முகம்! கூர்
மூக்கு. பெரிய கண்கள். அந்தப் பெரிய கண்களுக்கு மகுடமாய் நீளமான கண் முடி. வகுப்பு
ஆசிரியர் தேவசுந்தரி எத்தனையோ முறை அவள் கண்ணழகைப் பற்றி இரசித்துப் பேசியிருக்கிறார்!
சப்பை மூக்கு சித்ரா என்றால் என் பள்ளியில் எல்லோருக்கும் தெரியும். அது வேறு யாருமல்ல, நான்தான்.
என்னைப் படைத்த கடவுள் மேல் கோபம் வரும்.
அப்படியே மேசைமேல் சாய்ந்துகொள்வேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மாயமாய் மறைந்து
போவார்கள். கும்மிருள் என்னைச் சூழ்ந்து கொள்ளும். அமைதியின் பிடியில் அந்த அறை
பயங்கரமாய்த் தோற்றம் தரும். தனியறையில் தன்னந்தனியாய்...
“’ப்ளீஸ்… யாராவது வாங்களேன்! எனக்குப் பயமா இருக்கு! மலர்...!
அமுதா...!... யாருமே இல்லையா?” தொண்டை
கிழிய அலறுவேன். இரண்டு நாள் காய்ச்சலில் படுத்து உடல் தேறி வருவதற்குள் ஒரு
வழியாகிப் போவேன்.
ஏன் நான் மட்டும் இப்படி அசிங்கமாய்ப் பிறப்பெடுத்து
விட்டேன்? கடவுளுக்கு என் மேல் அப்படி என்ன வஞ்சம்? என்னை மட்டும்
ஏன் அவருக்குப் பிடிக்காமல் போனது? இன்னும் நான் சந்திக்கப்போகும் அவமானங்களை நினைக்கும்போது
உடல் வெடவெடத்துப் போகிறது. கண்களை அழுந்த மூடிக்கொள்கிறேன். தலை விண்விண் என வலிக்கத்
தொடங்குகிறது. வழக்கம்போல் மேசை மேல் சாய்ந்துகொள்கிறேன்.
வகுப்பில் சலசலப்பு. கண்களைத் திறந்து பார்க்கிறேன். எதிரில்
முன்பின் பார்த்திராத முகம். புதிய ஆசிரியர் போலும். ஓட்டு மொத்த வகுப்பின் பார்வையும்
அவர் மேல் இருந்தது. வலது கை முழு வளர்ச்சி பெறாமல் சுருங்கியிருந்தது. கையிலிருந்த தமிழ்மொழிப் பாடநூலை மேசைமேல் வைத்து விட்டு, தாங்கித்
தாங்கி நடந்து என் அருகில் வந்தார்.
“என்னம்மா, காலையில
இத்தன சோர்வு? நேரா உட்காருங்க! ஒவ்வொரு நாளும் உற்சாகமா கழிக்கணும், தெரியுதா!
இந்த வாழ்க்க நாம அனுபவிக்க கிடைச்சது! மிஸ் பண்ணா, திரும்ப
கிடைக்காது!” தொடர்ந்து பேசிக் கொண்டே போனவரைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் நானாக மாறிக்கொண்டிருந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக