“சார்...! சார்...! சீக்கிரம் எழுந்திரீங்க... உங்ககிட்ட ஒன்னு காட்டணும். சீக்கிரம் சார்!” கணபதிக்கு மூச்சிரைத்தது. சாப்பிடுவதை நிறுத்தி விட்டுக் கணபதியைப் பார்த்தான் சங்கரன். கொஞ்சம் விட்டால், சங்கரன் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்தே சென்றிருப்பான்.
“டேய், இப்ப என்ன பிரச்சனை? ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி
வர? நல்லா மூச்ச இழுத்து விடு... அப்புறம் நிதானமா பேசு!” கணபதியை
அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் சங்கரன்.
“ஐயோ, சார்! உங்களப்பத்தி மூர்த்தி தப்பு தப்பா பாத்ரூம்ல எழுதி வச்சிருக்கான்.
நீங்களே வந்து பாருங்க சார்! நம்ம கிளாஸ் பிள்ளீங்க எல்லாம் அங்கதான் இருக்காங்க!”
மூச்சு விடாமல் பேசினான். அவன் வாயைவிட அவன் கண்கள்தான் அதிகம் பேசின. கண்களை
உருட்டி, வாயைக் கோணலாய் வைத்துக் கொண்டு அவன் பேசியதைப்
பார்த்துச் சிரிப்பு வந்தாலும் அவன் சொன்ன செய்தி மனத்திற்குள் கொத்தளிப்பை
உண்டுபண்ணியது.
“சரி, நீ போ. நா வரேன்!” சொல்லிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த நாசி லெமாக்கை
மூடி மேசையின் ஓரமாய் வைத்தான். ஆசை ஆசையாய் வாங்கி வந்த நாசி லெமாக்கின் சுவையை முழுமையாய் அனுபவிக்க
விடாமல் செய்த மூர்த்தி மீது கோபம் வந்தது. சிட்டாய்ப் பறந்து சென்றுகொண்டிருந்த
கணபதிக்கு ஈடுகொடுத்து நடக்க முயன்றான். முடியவில்லை.
நேற்றுதான், வகுப்பில் கணபதியிடம் சண்டை போட்டதால் மூர்த்தியைக் கண்டித்து அனுப்பினான்.
கணபதிக்கும் சேர்த்தே பாட்டு விழுந்தது.
கழிவறைக்குள் மாணவர்க் கூட்டம் நிறைந்து வழிந்தது. அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். குச்சி குச்சியாய்க் கைகால்கள். வட்டமாய்ப் பெரிய தலை. அதற்குள்ளே பெரிய மூக்கு, குண்டு விழிகள். படத்தை வரைந்தவன் பெரிய ஓவியன் இல்லை என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. படத்தைச் சுற்றி மொட்டை சார், தொந்தி சார் என்ற கிறுக்கல்கள்.
“சரி, எல்லாம் முதல்ல வகுப்புக்குப் போங்க. யாரும் இங்க இருக்கக்கூடாது!”
அழுத்தமாய்ச் சொன்னான் சங்கரன். யாரும் நகர்வதாய் இல்லை. சலசலப்பு அடங்குவதாய்
இல்லை.
“மூனு எண்றதுக்குள்ள
ஒருத்தன் இங்க இருக்கக்கூடாது. ஒன்னு, ரெண்டு, மூமூமூ...” முடிப்பதற்குள் எல்லாம் தெறித்துக் கொண்டு ஓடினர். ஆனால், கணபதி மட்டும் அவன் அருகில் வந்து இன்னும் நெருக்கமாய் நின்று கொண்டான்.
“கணபதி! நீ சீக்கிரம்
போயி மூர்த்திய கூட்டிட்டு வா!” இராமன் கட்டளைக்குக் காத்திருந்த அனுமன் போல்
சொன்ன வேகத்தில் புறப்பட்டான் கணபதி. ஏனோ தெரியவில்லை அவனைப் பார்த்தாலே சங்கரனுக்குக்
குபீரென்று சிரிப்பு வந்து விடும். ஐந்தே
நிமிடத்தில் கணபதியோடு வந்து நின்றான்.
“சார், நான் செய்யனும்னு நினைச்சா, உங்க முதுகுக்குப்
பின்னால செய்ய மாட்டேன் சார். தேவ இல்லாம என் மேல பழி போடாதீங்க! இன்னொரு விசயம்
சார். என்னோட எழுத்து இவ்ளோ மோசமா இருக்காது சார்!” அவன் முகத்தில் கலவரம் இல்லை. வார்த்தையில் தடுமாற்றம்
இல்லை. .
“ஏன், இந்த எழுத்துக்கு என்னா?” முகத்தைச் சுளித்துக்கொண்டான்.
இருவர் பார்வையும் அவன் பதிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக