புதன், 13 ஏப்ரல், 2022

#குறுங்கதை 067 #வாழையிலை உணவகம்

 

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பவானி வாழையிலை  உணவகத்தில் வழக்கம்போல் கூட்டம் அலை மோதியது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு உட்கார ஓரிடம் எப்படியோ கிடைத்துவிட பரமசிவம் சலிப்புடன் உட்கார்ந்து கொண்டான். கால்கள் கடுத்தன. இடுப்புப் பகுதியில் லேசாய் வலி எட்டிப் பார்த்தது.  தடவிவிட்டுக் கொண்டே கால்களை விரித்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். ஐந்து நிமிடங்கள் காத்திருப்பதுகூட அவனுக்கு பெரும்  அவஸ்தையாய் இருந்தது.

“டேய் தம்பி! ஆர்டர் எடுப்பீங்களா எடுக்க மாட்டீங்களா? இன்னும் எவ்வளவு நேரந்தான் காத்துக்கிட்டு இருக்கிறது?” பக்கத்து மேசையில் பரிமாறிக் கொண்டிருந்த புதியவனை அழைத்தான். வயது இருபது இருபத்தொன்றுதான் இருக்கும்.

“கொஞ்சம் நேரம் சார், ப்லீஸ்!” வேலையைத் தொடர்ந்தான் இளையவன். ஓட்டமும் நடையுமாய் ஒவ்வொரு மேசையாய் சென்று ஆர்டர் எடுத்துவிட்டு பரமசிவத்திடம் வந்தான்.

“ஹலோ! பசியோட வந்தா சாகடிச்சுதான் அனுப்புவீங்களா!”

“ஐயோ சார், ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? நீங்க வரதுக்குக்கு முன்னயே நிறைய பேரு ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்காங்க. அவங்கள முதல்ல கவனிக்கனும் சார்!”

“அப்ப நாங்க வெட்டியா காத்திருக்கணும்! ஊர்க்காரனுங்களுக்கு இப்ப கொஞ்சம் வாய் அதிகம்தான். உங்கள வைக்க வேண்டிய எடத்தில வைக்கணும்” குரலை உயர்த்திய பரமசிவத்தை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இளையவன்.

கடையில் ஒரே சலசலப்பு. பரமசிவத்தின் கலாட்டா, பலரின் பேச்சுப் பொருளாகியிருக்க வேண்டும். அவனைத் திரும்பிப் பார்த்துக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி அவன் கவலைப்படுவதாயில்லை.

“சார்! குடிக்க என்ன வேணும்?”

“மீலோ ஐஸ் ஒன்னு. சாப்பிட மீ கோரேங் மாமாக்,” வாய் மட்டும் பேச, கவனம் கைப்பேசியில் இருந்தது.

இந்த ஊர்காரர்களைப் பார்த்தாலே அவனுக்கு காரணமேயில்லாமல் பற்றிக்கொண்டு வந்தது. பக்கத்து வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஊர்க்காரர்களிடம்கூட இதுவரை முகம் கொடுத்துப் பேசியதில்லை.

பத்து நிமிடத்தில் ஒரு கையில் மிலோ ஐஸோடும் மற்றொரு கையில் மீ கோரேங் மாமாக்கோடும் வந்து நின்றவனைப் பார்வையால் சுட்டெரித்தான் பரமசிவம்.

“எனக்குச் சாப்பாடு வேணா.  பத்து நிமிசமா சாப்பாட்டுக்கு நாயாட்டும் காத்துகிட்டு இருக்கேன். இதே சீனன் கடைன்னா இந்நேரத்திற்கு சாப்பாடு வந்து, சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுருப்பேன். என்ன வேல செய்றீங்களோ! ஏன்யா இப்படி எங்க உயிர எடுக்குறீங்க!” தலையில் அடித்துக் கொண்டான்.

“சார், சோர்ரி சார். இன்னைக்கு ரெண்டு பேரு வேலைக்கு வரல, அதான்... கொஞ்சம் லேட்டாச்சி!” விளக்க முயற்சித்தான் இளையவன்.

பரமசிவம் காது கொடுத்துக் கேட்பதாய் இல்லை. இடத்தை விட்டு எழுந்தான். வாசலை நோக்கி வேகமாய் நடந்தான். அவன் பின்னாலேயே ஓடினான் இளையவன்.

“என்னடா பிரச்சனை. ஏன் கஸ்டமர் கோவிச்சுகிட்டுப் போறாரு?” முதலாளியின் குரல் பரமசிவத்தின் நடையைத் தடை செய்தது.

“ஒன்னுமில்லப்பா, சாப்பாடு கொண்டு வர லேட்டாச்சு, அதான் இழுத்தான் இளையவன்.

“அப்பாவா?” திரும்பி இளையவனைப் பார்த்தான் பரமசிவம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...