வியாழன், 14 ஏப்ரல், 2022

#குறுங்கதை 68 #கலை டீச்சர்

 

      பள்ளிக்கு வந்ததிலிருந்தே கலை டீச்சர் பரபரப்பாய் இருந்தார். நின்று பேசும் நிலையில் அவர் இல்லை என்பது அவர் பதற்றத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அவர் செல்லும் இடமெல்லாம் என் பார்வை நிழலாய்த் தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

    இந்தப் பள்ளிக்கு வந்து இந்த ஒரு வாரத்தில் அவரை அவரிடத்தில் பார்த்தது குறைவு. பார்க்கும்போதெல்லாம் ஒரு புன்னகையைச் சிந்துவதோடு சரி. அதிகமாய் பேசிப் பார்த்ததில்லை. அவருடன் நெருங்கிப் பழக முடியாதது  நெருடலாகவே இருந்த்து.

“யாருங்க இங்க கலை டீச்சரு!” ஆசிரியர் அறைக்கு வெளியே நடுத்தர வயதேயான முறுக்கு மீசைகாரர் கத்தத் தொடங்கினார்.

    எனக்கு உடம்பெல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது. கலை டீச்சர் இருக்கையை விட்டு எழுந்தார். உரிமை இல்லாவிட்டாலும், அவர் வலது கையைப் பிடித்து இழுத்தேன். அவர் என் கையை மெதுவாய் விலக்கி விட்டு கத்திக்கொண்டிருந்தவரை நெருங்கினார்.

“சொல்லுங்க, நான்தான் கலை டீச்சர். என்ன வேணும்?” வார்த்தைகளில் அலட்டல் இல்லை.

“ஏன் டீச்சர் நேத்து என் பிள்ளைய லேட்டா விட்டீங்க. உங்களுக்கும் பிள்ள இருக்குதான? பிள்ளைங்கங்களுக்குப் பசிக்குன்னுகூடவா தெரியாது. பீ.பீ.டி.யில கொம்லேன் பண்ணாதான் நீங்கல்லாம் அடங்குவீங்க!” வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

“அதுக்கு முன்ன எச்.எம்மைப் பாருங்க. அவர பாக்காம நீங்க இங்க வந்ததே தப்புங்க!” சொல்லிவிட்டு வந்தவரைப் பார்த்தார் கலை டீச்சர்.

“தோ.. பாக்கத்தான் போறேன். உங்கள ஒரு வழி பண்ணத்தான் போறேன்!” மீண்டுமொரு முறை அவர் குரல் ஆசிரியர் அறையை அதிரச் செய்தது.

“சரிங்க, தாராளமா பாருங்க. எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு. நான் கிளம்பனும்,” தன் இடத்திற்குத் திரும்ப நினைத்தவரைத் தடுத்தார் முறுக்கு மீசைக்காரர்.

“பதில்சொல்லாம போறீங்க டீச்சர்!” கண்களை உருட்டினார். அவர் சிவந்த கண்கள் யாரையும் பயமுறுத்தி விடும்.

“உங்க பிள்ளை முதல் நாளு கொடுத்த வீட்டுப் பாடத்த செய்யலங்க. அதான் செஞ்சி கொடுத்திட்டுப் போகச் சொன்னேன்!”

பதிலைக் கேட்கக்கூட அவருக்குப் பொறுமை இல்லாமல் போனது. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போனார்.

கலை டீச்சரைப் பார்த்தேன். முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“டீச்சர் பீல் பண்ணாதீங்க!” ஆறுதல் சொல்ல முயன்றேன்.

“இதெல்லாம் இங்க சகஜம். இதப் பாத்திட்டு நீ பயந்திடாதம்மா!” எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினார்.

“சரி, கிளாசுல மூனு பிள்ளைங்க பி.ஐ.பி.ஜி காசு கட்டாம இருக்காங்க. அவங்களுக்குக் காசு கட்டணும். இதோ இப்ப வந்து சத்தம் போட்டுட்டுப் போனாரே... அவரோட பிள்ளைக்கு நல்ல யூனிபோர்ம் இல்ல. ரெண்டு செட்டாவது வாங்கிக் கொடுக்கணும். கிலேய்ம் வந்தாத்தான் இதெல்லாம் செய்ய முடியும். நான் போயி கெலேம் போர்ம் சீக்கிரமா செஞ்சி அனுப்பனும். அப்புறம் பாக்கலாம்!” பரபரப்பாய் விடைபெற்றுக் கொண்டார் கலை டீச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...