ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

#குறுங்கதை 070 #தனிமை

 

கணபதியின் வீடு உறவுக்கார்களின் வருகையால் நிறைந்திருந்தது. தன் மேல் அக்கறையும் அன்பும் உள்ளவர்களின் அன்புப் பிடியில் மாட்டிக் கொண்டு விழிப்பதும்கூட ஒரு சுகம்தான்.  அவன் மனைவியும் வாயெல்லாம் பல்லாய் அனைவரையும் குசலம் விசாரித்து மகிழ்ந்திருப்பதைப் பார்த்து நிறைவு கொண்டான் கணபதி. இது போன்று எப்பொழுதாவதுதான் நடக்கும். கணபதியின் உடன்பிறப்புகள் எல்லாம் மலாக்காவில் இருக்க, அவன் மட்டும் குடும்பத்தோடு ஈப்போவில் இருப்பதை நினைத்து பல நாட்கள் வருந்தியதுண்டு. அந்த உறவுகளை இணைத்த கோவிட்டுக்கு விரும்பாவிட்டாலும் நன்றி சொல்லிக் கொண்டான்.

கடந்த ஒரு வாரமாக கோவிட் எனும் பெருச்சாளி உடலுக்குள் புகுந்து குடைச்சல் தந்ததை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா என்ன! தொண்டை வலியும் மூக்கடைப்பும் தொல்லை பண்ண ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்துப் போனான் கணபதி. விட்டு விட்டு உடல் சூடேறுவதையும், சோர்வு மனத்தைச் சுனங்கச் செய்வதையும் நினைத்து மனம் நிம்மதியற்றுப் போனான். ஆறேழு நாட்களாய் விரும்பியதைச் சாப்பிட முடியாமல் வெறும் சோற்றுக்கஞ்சியைச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போனது. பாவம் அவன் மனைவி. அறைக்கதவிற்கு  வெளியே நின்று அவனைச் சமாதானப்படுத்திச் சாப்பிட வைக்க படாத பாடுபட்டுப் போனாள்.

அறையில் அடைந்து கொண்டு நான்கு சுவர்களைப் பார்த்து வாழ்வது சாமானிய காரியமில்லை. அந்தத் தனிமையின் கொடுமையை அனுபவித்து  விரக்தியின் உச்சத்தைத் தொட்டு வந்திருந்தான் கணபதி. ஆனால், இன்று உறவுகளின் வருகை அந்தத் தனிமைக்கான மருந்தாக அமைந்து போனது. உற்சாகம் இரட்டிப்பானது. மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மூத்த அக்காள் சுமதி அவன் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு தைரியம் சொன்னது ஆறுதலாய் இருந்தது. தம்பி பிள்ளைகள் கால்களைப் பிடித்து விட்டது இதமாய் இருந்தது. தங்கை செல்வி பழங்களை வெட்டிக் கொடுத்துச் சாப்பிட வற்புறுத்தியது நெகிழ்ச்சியைத் தந்தது. குழந்தைகள் வரவேற்பறையில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு கூச்சலும் கும்மாளமாய் இருந்தது கண்களைக் குளிரச் செய்தது.

ஊர் கண் பட்டதோ உறவுக் கண் பட்டதோ தெரியவில்லை! கண்மூடித் திறப்பதற்குள் அந்த மகிழ்ச்சியெல்லாம் காற்றோடு காற்றாய் கரைந்து போனது. சொல்லாமல் வந்த தும்மல் அவன் மகிழ்ச்சியைக் காவல் வாங்கி அடங்கிப் போனது. மீண்டும் தனிமையைப் பரிசாய்த் தந்துவிட்டுப் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...