திங்கள், 18 ஏப்ரல், 2022

#குறுங்கதை 071 #மணி என்கிற மணிவாசகம்

 

மணிவாசகத்தின் கைப்பேசி விடாமல் அலறிக்கொண்டிருக்க, பொறுமையிழந்து போனான் அப்பாஸ். அடிக்கடி கைப்பேசியை மறந்து அறையிலே வைத்துவிட்டு வேலைக்குச் செல்வது மணிவாசகத்திற்கொன்றும் புதிதல்ல. இன்று காலை ஷிப்ட் என்பதால் கட்டாயம் தாமதமாக எழுந்து அரக்கப்பரக்க வேலைக்குச் சென்றிருப்பான்.

இராமநாதபுரத்திலிருந்து அப்பாஸுக்குப் பின்னால் வந்தவன்தான் மணிவாசகம். ஒரே ஊர் என்பதால் அவன் மேல் அப்பாஸுக்குத் தனிப்பாசம். சொந்த ஊரை விட்டுவிட்டு மலேசியாவுக்கு வந்த முதல் இரண்டு நாட்கள்  அழுதே தீர்த்தான் மணிவாசகம். அவனுக்கு ஆறுதல் சொல்லி சரிப்படுத்துவதற்குள் களைத்துப் போனான் அப்பாஸ். இத்தனை ஆண்டுகளில் அவனுக்கு எல்லாம் பழகிப் போனது. மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டான். ஆனால், தாமதமாக எழுந்து வேலைக்குக் கிளம்பும் பழக்கம் மட்டும் அவனை விட்டுப் போகவே இல்லை.

மீண்டும் கைப்பேசியின் அலறல் தொந்தரவு செய்ய சலித்துக்கொண்டே எடுத்துப் பேசினான்.

“அண்ணா! நம்ப அம்மா நம்பள விட்டுட்டு போயிட்டாங்க! என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியலண்ணா. சீக்கிரம் பிளைட்ட பிடுச்சி வாண்ணா! எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு!” மூச்சு விடாமல் பேசினாள் மணிவாசகத்தின் தங்கை. அழுது அழுது ஓய்ந்திருக்க வேண்டும். குரல் கரகரவென இருந்தது.

“தங்கச்சி! நான் அப்பாஸ் பேசறேன்.  கேக்கிறதுக்கே கஷ்டம்மா இருக்கும்மா. மணிவாசகம் வேலைக்குப் போயிருக்கான். நான் போயி அவன்கிட்ட விசயத்த சொல்றேன். நீ தைரியமா இரு!” கொஞ்சம் நேரம் அவனும் அவளுக்கு அண்ணனாய் மாறிப் போனான்.

“அண்ணா! ப்லீஸ்ணா. அவன சீக்கிரம் வரச்சொல்லுங்கண்ணா. அவன்தான் அம்மாவுக்குக் கொள்ளி போடனும்!” அவள் அழுகைச் சத்தம்  பெரிதாகத் தொடங்கியது.

கட்டியிருந்த லுங்கியோடு கீழேயுள்ள உணவகத்திற்கு ஓடினான். அவன் கண்கள் மணிவாசகத்தை வலைவீசித் தேடின. அவன் அகப்படவில்லை. சமையலறைக்கு ஓடினான். பானையில் சாம்பாரை நிரப்புவதில் மும்முரமாய் இருந்தவனின் முதுகைத் தட்டினான். கொஞ்சம் பயந்துதான் போனான் மணிவாசகம்.

“என்னடா நீ... இப்படி பயமுறுத்திற” சலித்துக் கொண்டான்.

“மணி... முக்கியமான விசயம்டா... மனச திடப்படுத்திக்கோ. எந்த காரணதுக்காவும் உடைஞ்சி போயிறாதடா!”

“டேய்! முதல்ல விசயத்த சொல்றா!” மணிவாசகத்தின் முகம் மாறிப் போனது. சாம்பார் பானையை மேசை மேல் வைத்து விட்டு அவனைப் பார்த்தான்.

“அது வந்து... உங்க அம்மா.... உங்க அம்மா... செத்துட்டாங்களாண்டா மணி! தைரியத்த எழந்திடாதடா! நாங்க இருக்கோம்”

அப்பாஸ் சொல்லி முடிப்பதற்குள் சுவரோடு சுவரானான் மணிவாசகம். ஐந்து நிமிடங்கள் அப்படியே சிலையாய் நின்றான். பார்வை நிலைகுத்திப் போனது. அப்பாஸ் அவன் அருகிலேயே நின்று கொண்டான்.

“டேய் மணி... இப்படியே இருந்தா எப்படிடா! முதலாளிய பாத்துப் பேசுடா. சீக்கிரம் கிளம்பற வழிய பாரு!” கைகளைப் பிடித்துக் கொண்டு பேசியவனை வெறித்துப் பார்த்தான் மணிவாசகம்.

“அப்பாஸ்...! என் பெர்மிட் எக்ஸ்பயர்ட் ஆயி ஒரு வாரம் ஆகுதுடா. நான் இப்ப போனா திரும்ப வர முடியாது...  வீட்டுக் கடனையெல்லாம் எப்படி அடைப்பேன். தங்கச்சி கல்யாணச் செலவ எப்படி பாப்பேன். என் நெலமையா பாத்தியா! எங்க அம்மாவுக்குக் கொள்ளிகூட போட முடியாத பாவியாயிட்டேன்!” ஓவெனக் கதறி அழுதவனை ஆரத் தழுவிக்கொண்டான் அப்பாஸ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...