அன்புள்ள அப்பாவுக்கு,
நெடுநாளாய் எழுத நினைத்த கடிதம் இது.
நீங்கள் படிக்கும் போது என்னைத் துரோகி எனத் தள்ளி வைக்கப்போவது நிஜம். நீங்கள் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்த கைக்கடிகாரத்தை
உங்களுக்குத் தெரியாமல் என்னோடு எடுத்து வந்து விட்டேன். அதை உங்களுக்குத் தெரியாமல்
எடுப்பதற்கு நீங்கள்தான் காரணம்.
எத்தனையோ இரவுகள் நீங்கள் அதைக் குட்டிப் பெட்டியிலிருந்து எடுத்துக்
கைகளில் கட்டி இரசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு நாள் நீங்கள் பார்த்துவிட்டு அசந்து தூங்கியபோது
அதை உங்களுக்கே தெரியாமல் பூனை போல பதுங்கி வந்து எடுத்துப் பார்த்தேன். பழைய டிசைனாக
இருந்தாலும் அழகாய்த்தான் இருந்தது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை! பழைய கைக்காரங்கள்
கொலெக்ஷன் செய்வதாய் ஒரு நாள் சும்மா சொல்லிப் பார்த்தேன். அதற்கு உங்களிடமிருந்து
பதிலேதும் வரவில்லை. அப்பொழுதே கொடுத்திருந்தால் அதை நான் எடுத்திருக்க மாட்டேன். மன்னிக்கவும்...
திருடியிருக்க மாட்டேன்.
உங்கள் சுயநலத்தை நினைத்து அன்று எனக்குக் கோபம் வந்தது. பலி
வாங்க முடிவெடுத்தேன். உங்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க எனக்குள் இருந்த கொடூரன்
தீவிரமாய் யோசித்தான். அவனை அடக்கப் பார்த்தேன். கோபம் என் கண்ணை மறைத்து விட்டது.
அவன் போக்கில் அவனை விட்டு விட்டேன். மருத்துவப் படிப்புக்காக இந்தோனேசியா பயணமாக முடிவெடுத்தபோது
என்னுள் இருந்த அந்தக் கோடூரன் விழித்துக் கொண்டான். இந்தோனேசியா கிளம்புவதற்கு முதல்
நாள் இரவு துணிகளோடு துணிகளாய் பெட்டிக்குள் அடக்கம் பெற்றது உங்கள் கைகடிகாரம்.
அடுத்த நாள் காலை நீங்கள் நீங்களாய் இல்லை. உங்கள் முகம் வாடியிருப்பதைப்
பார்த்து அம்மா கிண்டல் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உங்கள் கண்கள் தொலைந்ததைத்
தேடிக் கொண்டிருப்பதை அம்மா பார்க்க வாய்ப்பில்லைதான். ஆனால், நான் பார்த்தேன் என்பது உங்களுக்கே தெரியாது.
இந்தோனேசியா வந்ததும் முதல் வேலையாய் உங்கள் கைக்கடிகாரப் பெட்டியைத்தான்
திறந்தேன். மனத்திற்குள் அப்படியொரு திருப்தி.
அதை என் கையில் கட்டிக் கொண்டேன். பெட்டியை மேசை மேல் தூக்கிப் போட்டேன். குட்டிக்
காகிதமொன்று வெளியே வந்து விழுந்தது. எடுத்துப் படித்தேன்.
“அன்புடன்
சாரதா”
மன்னித்து
விடுங்கள் அப்பா. நான் உங்கள் கைக்காரத்தை எடுத்திருக்கக் கூடாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக