“ஏன்மா!
உன்னதான். நிறையமுறை உன்ன இங்க பாத்திட்டேன். இந்தக் கொலைய பத்தி உனக்கு ஏதாவது
தகவல் தெரியுமா? தெரிஞ்சா பயப்படாம சொல்லு,” நிதானமாய்க் கேட்டான் இன்ஸ்பெக்டர்
ராஜசுந்தரம்.
“தெரியாதுங்க
சார்!” வெற்றிலையை மென்றுகொண்டு சுருக்கமாய்ப் பதில் சொன்னாள் முனியம்மா.
“இதுவரைக்கும்
நிறைய பேர விசாரிச்சிட்டேன். ஆனா, ஒருத்தர்கூட சரியான தகவல் சொல்லல!” சிகரெட்
புகையை உள்ளே ஆழமாய் இழுத்து மெதுவாய் விட்டுக்கொண்டே முனியம்மாவை
ஓரக்கண்ணால் பார்த்தான் ராஜசுந்தரம்.
“சார்,
அந்தப் பொண்ணோட கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. அந்தப் பொண்ண நான் பாத்ததுகூட
இல்லை. அப்பப்ப இங்க வருவேன். சும்மா உலாத்துவேன். அப்புறம் போயிடுவேன். மத்தபடி
இங்க யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டேன்!”
அவள் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. இதோடு
மூன்றாவது முறை இளம்பெண் கல்பனாவின் கொலையைப் பற்றிய விசாரனைக்காக அங்கு வந்து
விட்டான். கணவன் வெளியூர் போயிருந்த சமயம் திருமணமாகி மூன்று மாதங்களில் தன்
படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவளைப் பணிப்பெண்தான் முதலில்
பார்த்துக் காவல்துறைக்குத் தகவல் சொல்லியிருக்கிறாள். கொலையாளியைக் கண்டு
பிடிப்பதற்கான தடயங்கள் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான்.
யார் யாரையோ எல்லாம் விசாரித்தாகி விட்டது. இதுவரையில்
சிக்கலின் முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அவன்
அங்குப் போகும்போதெல்லாம் இந்த முனியம்மா கண்ணில் பட்டுவிடுவாள். அவள் மேல் அவன்
கழுகுப் பார்வை திரும்பியது.
“தோ
பாரு முனியம்மா. இன்னைக்கு நீ உண்மைய சொல்லல, நடக்கிறதே வேற,” குரல் தடித்தது.
அவளிடம்
தயக்கமோ நடுக்கமோ இல்லை. அவனை உற்றுப் பார்த்தாள்.
“உன்ன
மாதிரி அவளும் ஒரு பொண்ணு. அவளுக்கு நியாயம் கிடைக்கணும்!” அவள் கண்களில்
உண்மையைத் துளாவினான்.
“அதுக்கு
நான் என்ன செய்ய முடியும் சார்” முனியம்மாவின் அலட்சியம் அவன் கோபத்திற்குத் தூபம்
போட்டது.
“இதுக்கு
மேல என் விசாரன வேற மாதிரி இருக்கப்போவுது. நினைவில வச்சுக்கோ!” கராராய்
எச்சரித்தான்.
“இப்ப
துடிக்கிறீங்க சார். என் புருசன் என்ன
கொன்னப்பா இப்படி விசாரிச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்!”
இன்ஸ்பெக்டர்
ராஜசுந்தரத்தின் பார்வை மங்கத் தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக