வேலைக்கு அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு
ஜே.பி.ஜே. போய்ச் சேர்ந்தபோது சரியாய் பிற்பகல் மணி 3.20. எனக்கு முன்னே பெரிய கூட்டம்
காத்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாமோ.
சிடுமூச்சி போஸ் ஆ மெங் விட்டால்தானே அது சாத்தியம். ஒரு மணி நேர விடுப்பு எடுப்பதற்கே
காலில் விழாத குறையாய்க் கெஞ்ச வேண்டியிருந்தது.
இன்னும் சீக்கிரம் என்றால் எப்படிச் சாத்தியமாகும்!
“நாலு மணிக்கெல்லாம் சாத்திடுவான். சீக்கிரம் போனாதான் லைசன்ஸ்
ரினிவு பண்ண முடியும்!” நேற்று இரவு கணவர்
எச்சரித்தது மூளையைக் குடைய ஆரம்பித்தது. மூன்று மணிக்குத் தொழிற்சாலையை விட்டுக் கிளம்பி
வந்து சேர்வதற்குள் இருபது நிமிடங்களாகி விட்டன.
“பிள்ளையாரப்பா! நீதாம்பா என்ன(னை) காப்பாத்தனும்” ஜே.பி.ஜே.வில்
இருக்கிறேன் என்பதையும் மறந்து கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.
முன் வாசல் தேடிப் போய்க் கதவைத் திறக்க கரார் குரலொன்று எமனாய்
வந்தது.
“தக் தவு பஹாசா மெலாயுகா? இக்கூட் பின்து லகி சத்து!” குரல்
வந்த திசையைப் பார்த்தேன். குரலின் சொந்தக்காரனின் தோற்றம் பயமுறுத்தியது. வாயை மூடிக்கொண்டு
அவன் காட்டிய திசைக்குச் சென்றேன். என் கணவர் மட்டும் இப்படிப் பேசியிருந்தால் அவர்
கதை கந்தல்தான்.
அங்குச் சென்ற பிறகுதான் அடுத்த கண்டம்
கைநீட்டிக் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. மை செஜாத்ராவை ஸ்கென் செய்ய வேண்டுமாம்.
ஜே.பி.ஜே. ஏப்ஸ் பதிவிறக்கம் செய்ய வேண்டுமாம். அதில் காட்டப்படும் பட்டனைத் தட்ட
எண் எடுக்க வேண்டுமாம். அந்த எண் கிடைத்த பின்தான் உள்ளேயே போக முடியுமாம். எனக்காக
ஒரு நாள் விடுமுறை எடுக்க முடியாத என் கணவர் மேல் அப்பொழுதுதான் அதிகமாய்க் கோபம் வந்தது.
பெரிய போராட்டத்திற்குப் பிறகு எண்
கிடைத்து விட உள்ளே சென்று அமர்ந்துகொண்டேன். சரியாக மணி 3.45. என்னுடைய எண் கூப்பிடப்படாமல்
இருந்தது. மனதிற்குள் படபடப்பு. கணவரை அழைத்தேன்.
“என்னங்க! உங்களால்தான் எல்லாம். தனியா மாட்டிகிட்டு கஷ்டப்படுறேன்.
எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்கானுங்க! நம்பர கூப்பிட மாட்றானுங்க! எனக்குப் பின்னால
வந்தவங்க எல்லாம் அவங்களா போயி லைசன்ஸ் எடுத்துகிட்டுப் போறாங்க! இப்ப நான் என்னா பண்ணட்டும்?”
கோபம் முழுவதுமாய்க் கணவர் பக்கம் திரும்பியது.
“பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கேக்கத் தெரியாதா? அதுகூடவா நான்
சொல்லிக்கொடுக்கனும்!” அடுத்த முனையில் அலறினார் கணவர். அழைப்பைக் கோபமாய்த் துண்டித்து
விட்டு கவுண்டருக்குப் போனபோது சரியாய் மணி 3.59.
“சோரி சேக், கவுண்டர் மாவ் துத்தூப். தோலோங் டத்தாங் ஏசோக்!”
‘சில கெ கவுண்டர் டுவா’ என்பது ஜே.பி.ஜே. ஏப்பில் வந்துகொண்டிருப்பது
தெரிந்திருந்தால் எப்போதோ வேலை முடிந்திருக்குமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக