பக்கத்து வீட்டில் அழுகைச் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அலை
போல் வந்து வந்து போனது. மனம் கனத்தது.
“பாவம் பார்வதி ஆண்ட்டி. அவங்க நிலம யாருக்கும்
வரக்கூடாது!” அம்மாவின் பேச்சு என்னையும்
ஏதோ செய்தது.
“நினைச்சா கஷ்டமாதான் இருக்கு மா. ஆனா, நாம
என்ன பண்ண முடியும்?” சுருக்கமாக நிறுத்திக்கொண்டேன்.
இன்று காலை முதலே சொந்த பந்தங்கள் எனக் கூட்டம் அலைமோதத்
தொடங்கிவிட்டது. பார்வதி ஆண்ட்டிக்கு இவ்வளவு சொந்தங்களா? எனக்குள்
ஆச்சரியம். இதுவரை அவருக்கு அவர் பிள்ளைகள் தவிர யாருமில்லை என நான் நினைத்தது தப்பாய்ப் போனது. வயது 65 இருக்கும் என நினைக்கிறேன்.
இதழோரத்தில் என்றும் ஒரு புன்னகை
இழையோடிக்கொண்டிருக்கும். ஆனால், அவரது கண்களில் மட்டும்
ஏதோ ஒரு சோகம். காரணம் என்னவென்று நாங்கள் கேட்டதும் இல்லை. அவர் சொன்னதும்
இல்லை.
“காயத்திரி..!. ஆண்ட்டி பிள்ளைங்க இன்னும்
சிங்கப்பூரிலிருந்து வரல. வந்ததும் அவங்க வேலைய பார்த்துப்பாங்க. அதுவரைக்கும்
அங்க இருந்து தேவையானத பார்த்துக்கோ”
பக்கத்து வீடுதானே! எட்டே அடியில் அவர் வீட்டை
எட்டிப்பிடித்தேன். சவப்பெட்டிக்குள் பார்வதி ஆண்ட்டியை வைத்துப் பார்ப்பது வேதனையாக
இருந்தது.
“நல்ல மனுசி... பாவம்’ என்று உச்சுக்
கொட்டினர் சிலர்.
“சாகற வயசா இது!” என்று மனசாட்சியே இல்லாமல் வருத்தப்பட்டுக்
கொண்டனர் சிலர்.
“பிள்ளங்க இருந்தும் அனாதையா செத்தா மனுசி,” என்று
கோபத்தில் வெடித்தனர் சிலர்.
கூட்டத்தில் சலசலப்பு. மகள்கள் குடும்பத்தோடு வந்திறங்கினர்.
ஓடி வந்து ஆண்ட்டியின் தலைமாட்டில் உட்கார்ந்துகொண்டார்கள்.
“என்னங்க...
என்னால முடியலீங்க... உங்க அம்மாவ கூட்டிட்டு வந்திடு, நம்ம
கூடவே வச்சிக்கலாம்னு போன வாரந்தானே
சொன்னீங்க...” கதறிய
பெரியவளைப் பரிதாபமாய்ப் பார்த்தது அங்கிருந்த கூட்டம். உறவுக்காரியோ யாரோ தெரியவில்லை.
அழுதவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். இறுதிக் கட்டச் சடங்கு. மனத்தினுள் பாரம் அதிகமானது.
“பெட்டிய மூடப்போறம். பார்க்கிறவங்க எல்லாம்
பாத்துக்கோங்க!” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்பிள்ளைகள் இருவரும் துடித்துப்
போனார்கள்.
“அம்மா... எழுந்திரும்மா... எங்கள விட்டுட்டு
போவாதம்மா... நீ இல்லாம எப்படிம்மா இருக்கப்போறோம்... அம்மா..... அம்மா.....” பெட்டி மேல் விழுந்தார்கள்;
அழுதார்கள்.
இதுவரை அழாமல் இருந்தவர்களும் உடைந்து போனார்கள். எல்லாம் முடிந்தது.
ஆண்ட்டியின் அடையாளமாய் வரவேற்பறையில் ஒரு புகைப்படம். அதே அழகிய சிரிப்பு. ஆண்ட்டி
படத்தருகே பூச்சாடியில் பூ வைக்கச் சொல்லி அம்மா சொல்ல, அடுத்த கணம் சமையலறையில் இருந்தாள்.
அதுதான் தப்பாய்ப் போனது. கேட்கக் கூடாததைக் கேட்க வேண்டியதாகிப் போனது
“நாம அடிக்கடி வந்து போக முடியாதுன்னுதான் இன்னிக்கே
பால் ஊத்தியாச்சு. அடுத்து என்ன செய்யனும்னு முடிவு பண்ணனும். பேங்க் பேலன்ஸ் செக்
பண்ணனும். இந்த வீட்டைப் பத்தி பேசனும்,” என்று மூத்தவள் அடுக்கிக்கொண்டு போக சின்னவள் பூம்பூம்
மாடாய்த் தலை அசைத்தாள்.
“நல்ல வேள சீக்கிர போயிட்டீங்க ஆண்ட்டி,” மனம் வெம்பியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக