சித்திரா பௌர்ணமி அன்று கோயிலில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தெருவின் இரு மருங்கிலும் கடைகளுக்குப் பஞ்சமில்லை. ரகளைகளுக்கும் பஞ்சமில்லை. சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு கோயில் வாசலை வந்து சேர்வதற்கும் பூசை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. இந்தக் கூட்டத்தைத் தாண்டி மூலஸ்தானத்தை அடைவது சாத்தியமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. எப்படியாவது போய் விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார் சுந்தரமூர்த்தி.
“சாரதா, நான் முன்னுக்குப் போறேன். நீ பின்னாலேயே வா. பொம்பள
பிள்ளைங்க கைய நல்லா பிடிச்சிக்கோ. கண்ண மூடிகிட்டு நடப்பானுங்க! புரியுதா இல்லையா?”
குரலில் கடுமை தெரிந்தது. பதிலேதும் பேசவில்லை சாரதா. தலையை மட்டும் பலமாய் ஆட்டிக்
கொண்டாள்.
கூட்டத்தை ஊருவிக் கொண்டு உள்ளே செல்லப் படாத பாடுபட்டது சுந்தரமூர்த்தியின்
குடும்பம்.
“என்னங்க! என்னால முடியல. நீங்க பிள்ளைங்க கைய....” முடிப்பதற்குள்
எரித்து விடுவது போல பார்த்த சுந்தரமூர்த்தியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் சாரதா.
“ஒன்னுத்தும் லாயிக்கில்ல!” முணகிக் கொண்டே பிள்ளைகளைத் தன்
பக்கமாய் இழுத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.
அவரையும் முந்திக்கொண்டு வந்தது இளைஞர் பட்டாளம் ஒன்று. ஏனோ
இந்தக் காலத்து இளைஞர்களைக் கண்டால் சுந்தரமூர்த்திக்கு அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை.
அந்தப் பட்டாளத்தில் கடைசியாய் வந்தவனுக்கு நேரம் சரியில்லை போலும். சொல்லி வைத்தாற்போல்
கால் தடுக்கிச் சுந்தரமூர்த்தியின் மகளின் மேல் விழுந்தான்.
“ஏய்... கண்ண எங்கப்பா வச்சிருக்கிற. கோயிலுக்கு வந்தா அடக்க
ஒடுக்கமா இருக்க மாட்டீங்களா? பொம்பள பிள்ளைங்களத் தேடி வந்து விழுவீங்களா? திருந்தாத
ஜென்மங்க!” ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினான் சுந்தரமூர்த்தி.
“சார்! தப்பா பேசாதீங்க! தெரியாமத்தான் நடந்திச்சி!” விளக்கமளிக்க
முயன்றவனை பார்வையால் அடக்கப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.
“கோயில்ல வந்து பொறுக்கித்தனம் பண்றது!” சுந்தரமூர்த்திக்கு.ஆத்திரம்
அடங்கவில்லை.
பேசிப் பயனில்லையென்று தெரிந்ததும் கண்டும் காணாமல் போனது
அந்த இளைஞர்க் கூட்டம்.
எல்லாம் முடிந்து வெளியே வருவதற்குள் சுந்தரமூர்த்திக்கு வியர்த்துக்
கொட்டியது.
முகத்தை துடைத்துக் கொண்டு திரும்புவதற்கும் பின்னால் எவனோ
ஒருவன் மேலே வந்து விழுவதற்கும் சரியாக இருந்தது.
“டேய்... திருந்த மாட்டீங்களா? கண்ண எங்கடா வச்சிருக்கீங்க!”
அலறிக்கொண்டே திரும்பியவரின் அடுத்த வார்த்தை வெளிவராமல் அப்படியே நின்று போனது.
வாட்டசாட்டமாய் நின்று கொண்டிருந்த காவலரைக் கண்டதும் பெட்டிப்
பாம்பாய் அடங்கிப் போனார் சுந்தரமூர்த்தி.
“சோரி என்சிக்!” அசடு வழிந்த சுந்தரமூர்த்தியை அந்த இளைஞர் கூட்டம்
கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக