தர்மன் அறைக்கதவைத் திறந்து வெளியே வருவதைப் பார்த்ததும்தான் மாரிமுத்துவிற்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது. அவசரமாய் அவன் பக்கத்தில் போய் நின்று கொண்டார்.
“தர்மா... ஒரு பத்து வெள்ளி இருந்தா கொடுப்பா!” முகத்தைப் பரிதாபமாய் வைத்துக் கொண்டு கேட்டவரை
அலட்சியமாய்ப் பார்த்தான் தர்மன்.
“ப்பா... என்னத்துக்கு பத்து வெள்ளி. நேத்துதான பத்து வெள்ளி கொடுத்தேன்! பழைய மாதிரி தண்ணீ போட
ஆரம்பிச்சிட்டீங்களா!”
“ஐயோ! அப்படியெல்லாம் இல்லப்பா! அவசரமா தேவைப்படுது!” முகத்தில்
வருத்தம் அப்பட்டமாய்த் தெரிந்தது. மனைவியின் இறப்பிற்குப் பிறகு அவர் குடிப்பதையே
மறந்து போனாரென்று மகனிடம் யார் சொல்வது?
“ப்பா... நான் ஒரு ஆளுதான் சம்பாதிக்கிறேன். உங்களுக்கே நம்ப
குடும்ப நிலைம தெரியும். பாத்து நடந்துக்குங்கப்பா! அவ்வளவுதான் சொல்லுவேன்!” பணப்பையைத்
திறந்து பத்து வெள்ளியை நீட்டி விட்டு காரை நோக்கி நடையைக் கட்டினான்.
“டாடி... நில்லுங்க டாடி. நேத்து என்கிட்ட என்ன புரோமிஸ் பண்ணீங்?
ஞாபகம் இருக்கா இல்லையா!” சிணுங்கினாள் செல்ல மகள்.
“புரோமீஸா? சத்தியமா ஞாபகம் இல்லடா பேபி!” தலையைச் சொறிந்தவன்
மகளை ஓரக்கண்ணால் பார்த்தான். குண்டு விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தாள் வீட்டின்
கடைக்குட்டி.
“என் பேர்த்டேய்க்கு பப்பி வாங்கிக் கொடுக்கிறேன்னு சொன்னீங்களே.
மறந்துட்டீங்களா? நீங்க ரொம்ப மோசம் டேடி!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மகள்.
“எப்படிச் செல்லம் மறப்பேன்! இப்ப அதுக்குத்தான் கெளம்பின.
அதுக்குள்ள நீ கூப்பிட்டிட்டே!” கன்னத்தில் அன்பாய்த் தட்டிக் கொடுத்தான். மகிழ்ச்சியால்
துள்ளிக் குதித்தாள் மகள். மகளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது.
“தர்மா... நானு கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வறேன்பா!” அனுமதிக்காகக்
காத்திருந்தார் மாரிமுத்து.
“போயிட்டு சீக்கிரம் வாங்கப்பா! வயசான காலத்தில அங்க இங்கன்னு
சுத்தாதீங்க!”
“சரிப்பா!” தலையைப் பலமாய் ஆட்டிக் கொண்டார்.
மனைவியின் கல்லறையின் முன் மாரிமுத்து. கண்களில் கண்ணீர் குளம்
கட்டியிருந்தது.
“என்ன(னை) அனாதையா விட்டிட்டுப் போயிட்டியே சுசி! என்னையும்
கையோட கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல! நீ செத்த நாளுகூட யாருக்கும் ஞாபகம் இல்ல!”
மனத்திலும் உடலிலும் வலுவின்றி கல்லறை மேல் சாய்ந்து கொண்டார்.
பத்து வெள்ளி மலர்மாலை அவர் அன்பு மனைவியின் கல்லறையை அலங்கரித்துக்
கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக