“மணி
சார்! சீக்கிரம் இப்படிக் கொஞ்சம் வாங்களேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சார்!” ஆசிரியர் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை
அவசரப்படுத்தினாள் பாரதி.
சென்ற
வாரம்தான் புதிதாய் அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தாள். விரும்பாத பணியிட
மாற்றம்தான். என்ன செய்ய முடியும்! அதுவும் அந்தப் பள்ளி என்றதும் குலை நடுங்கிப்
போனது என்னமோ உண்மைதான்.
“சொல்லுங்க
டீச்சர்! ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? ஏதும் பிரச்சனையா?” வாயைத் துடைத்துக்
கொண்டே கேட்ட மணிமாறனை நிமிர்ந்து பார்த்தாள்.
“சார்!
ப..யமா இருக்கு! நீங்கதான்...” தடுமாறினாள் பாரதி.
“தயங்காம
சொல்லுங்க டீச்சர்! என்னால முடிஞ்சா கட்டாயம் உதவி செய்றேன்!” அவள் பயத்தைத் தூர
விரட்டப் பார்த்தான்.
“சார்,
நேத்து ரேஹாட் தைம்ல ரெண்டு பேரு வேப் குடிச்சதப் பாத்து ஆடிப் போயிட்டேன் சார்.
கூப்பிட்டு வார்னிங் கொடுத்தேன். ரெண்டு பேரும் அழுதாங்க. மன்னிப்புக் கேட்டாங்க.
டிசிப்பிலின் செக்குகிட்ட சொல்ல வேணாம்னு கெஞ்சனாங்க!” மூச்சு விடாமல் பேசினாள்
பாரதி.
“டீச்சர்,
மொதல்ல ரிலக்ஸ் ஆவுங்க! இந்த ஸ்கூல்ல இதெல்லாம் சகஜம்” அமைதிப்படுத்த முயன்றவனை
ஆதங்கத்துடன் பார்த்தாள்.
“அது
இல்லீங்க சார். அந்தப் பிள்ளைங்களோட அப்பா வந்திருக்காரு. என்கிட்ட பேசனும்னு
சொல்றாரு. கொஞ்சம் பயமா இருக்கு! நீங்களும் கொஞ்சம் கூட வாங்க சார், பிலீஸ்”
கண்களில் கண்ணீர் தேங்கத் தொடங்கியது.
அதற்கு
மேல் அவனுக்குப் பேசத் தோன்றவில்லை. பாரதியின் பயம் புரிந்தது. முதன் முதலில்
அந்தப் பள்ளிக்கு வந்தபோது இதே போல அவனும் கலங்கியிருக்கிறான்.
“என்ன
டீச்சர்? என் பிள்ளைங்கள கூப்பிட்டு வார்னீங் கொடுத்தீங்களா? பக்கத்து வீட்டுப்
பையன் சொன்னா!” முரட்டுக் குரலில் பேசியரைப் பார்த்து அரண்டு போனாள் பாரதி.
“அது
வந்து... உங்க பிள்ளைங்க....!” அவள் இமைகள் மூட மறந்தன.
“உங்க
பிள்ளைங்க வேப் குடிச்சா வார்னீங் கொடுப்பீங்களா டீச்சர்? அதுவும் பொம்பள
பிள்ளைங்க செஞ்சா பேசாம இருப்பீங்களா? ரெண்டு அறை விட மாட்டீங்க?”
“பொம்பள
பிள்ளைங்களா!” மணியின் புருவங்கள் உயர்ந்தன.
வாயடைத்து
நின்றாள் பாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக