கண் விழித்துப் பார்த்ததும் அரண்டு போனான் நாதன். அவன் படுக்கையறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் மனைவி மஞ்சுவைக் காணவில்லை. இதுநாள் வரை விளக்கு வெளிச்சம் இல்லாமல் அவன் படுத்ததில்லை. அருகில் இருந்த மேசை விளக்கை எட்டிப் பிடித்துத் தட்டினான். சொல்லி வைத்தாற்போல அதுவும் சதி செய்தது. படுக்கையை விட்டு எழ முயற்சித்தான். உடலெல்லாம் தாங்க முடியாத வலி. வலது கையை இடப் பக்கமாய்த் திருப்பி உடம்பை முறுக்கினான். வலி மறைந்த பாடில்லை.
“மஞ்சு...
வெளிய என்ன செய்ற? ரூம்ல லைட்டு இல்ல. கேண்டல் எடுத்துக்கிட்டு வாயேன்!” பதில்
இல்லை. கோபம் தலைக்கேறியது. கதவின் பிடியைப் பிடித்துக் கதவைத் தள்ளினான். திறக்க முடியவில்லை.
கதவைப் பலங்கொண்டு தட்டினான். மஞ்சுவின் காதில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.
தட்டுத்
தடுமாறி மீண்டும் படுக்கைக்குச் சென்றான். கால்களை நீட்டினான். கைகளை விரித்துப் படுத்துக்
கொண்டான்.
“நான்
படுத்திருக்கேன் தெரியல?” ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் கரார் குரல். நாதனுக்குத்
தூக்கி வாரிப் போட்டது.
படுக்கையைத்
தடவிப் பார்த்தான். கைகளில் கொத்தாய் ஏதோ அகப்பட பிடித்து இழுத்தான்.
“டேய்,
விடுடா!” கன்னத்தில் விழுந்த அறையால் நிலை தடுமாறிப் போனான். சுயநினைவிற்கு வந்தபோது
தரையின் மேல் குப்புற விழுந்து கிடந்தான். கால் முட்டி தரையில் இடித்துக்கொண்டிருக்க
வேண்டும். வலி உயிரை எடுத்தது. முட்டியைத் தேய்த்து விட்டுக்கொண்டே எழுந்தான். மிக மிக அருகில் யாரோ நிற்க, உடல் வெடவெடத்துப் போனது.
சூடான மூச்சுக்காற்று முகத்தில் பட அலறியடித்துக்
கொண்டு அறையின் மூலையில் தஞ்சம் புகுந்தான். அடுத்த கணம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாய்
உஷ்ணம் குறையத் தொடங்கியது. உடல் சில்லிட்டுப் போனது. மூச்சு வாங்கியது.
“மஞ்சு...
மஞ்சு... சீக்கிரம் வா. எனக்கு என்னமோ ஆயிகிட்டு இருக்கு!” சத்தமாய் அலறினான்.
அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. மீண்டும் இருட்டில் கதவைத் தேடிப் பிடித்துப் பலமாய்த்
தட்டினான். கதவு திறக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு வந்தது. மஞ்சு மெதுவாய் நடந்து
அறைக்குள் வந்தாள். வெளி விளக்கின் ஒளி அறைக்குள் கொஞ்சமாய் வெளிச்சத்தைக் கொடுக்கத்
தொடங்கியது.
“ஆரம்பிச்சிட்டீங்களா!
தூக்க மாத்திர போட்டிட்டு நீங்க படுத்துற பாடு தாங்க முடியல! பேசாம போய்ப் படுங்க!”
சலித்துக் கொண்டு வெளியே போனவளைக் கண் கொட்டாமல் பார்த்தான். அவள் உருவம் மறைந்த அடுத்த
கணம் கதவு தானாய்ச் சாத்திக் கொண்டது.
“மஞ்சு!
என்ன(னை) தனியா விட்டுட்டுப் போகாத. பயமா இருக்கு!” வெட்கத்தை விட்டுச் சத்தமாய்க்
கத்தினான். உடல் நடுக்கம் தீரவில்லை.
மஞ்சு
வந்தபாடில்லை. சில நொடிகளில் பலத்த காற்று வீச, கீச் என்ற சத்தத்துடன் கதவு தானாய்த்
திறந்து கொண்டது. அறைக்கு வெளியே மஞ்சுவின் படம் மாலையுடன் காட்சி தந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக