வாழ்க்கையில்
எவ்வளவு அசிங்கப்பட வேண்டுமோ அவ்வளவும் அசிங்கப்பட்டாகி விட்டது. இதற்கு மேல் அசிங்கப்படுவதுற்கும்
அவமானப்படுவதற்கும் ஒன்றுமில்லை. என் மேல் விழும் ஒவ்வொரு பார்வையிலும் வெறுப்பின்
நிழலைப் பார்த்து எத்தனையோ முறை வேதனையால் தலை கவிழ்ந்திருக்கிறேன். ஆனால், ஒரு போதும்
நம்பிக்கையிழந்தது கிடையாது.
எத்தனையோ
முறை கரிசனம் இல்லாமல் காரி உமிழ்ந்தவர்கள் மீது கோப்படுவதற்குப் பதிலாகப் பரிதாபப்பட்டிருக்கிறேன்,
என் பிறப்பு இழிபிறப்பாகி விட்டதால் ஏற்றுக்கொண்டுதான் போக வேண்டுமென என்னை நானே சமாதானப்படுத்திக்
கொண்டிருக்கிறேன்.
ஆனால்,
இன்று மனிதர்களின் அராஜகத்தை ஜீரணிக்க முடியாமல் உடைந்து போயிருக்கிறேன். உடலெல்லாம்
கூசுகிறது. இரத்தக் கறை படிந்த என்னை எனக்கே பிடிக்காமல் போகிறது. இரத்தத்தின் வாடை
குமட்டலை உண்டுபண்ணுகிறது.
“இறைவா!
எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்!” சத்தமாய்க் கத்துகிறேன். என் கதறலைப் பொருட்படுத்துவார்
யாருமில்லை.
என்
மடியில் இரத்தக்கறையுடன் இருப்பவளையாவது காப்பாற்றுங்கள், அவள் செய்த பாவமென்ன! யாராவது வாருங்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள்!
கொடூரன் ஒருவன் எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறான்! பல வேளைகளில் கருணையே இல்லாமல்
என்னைச் சின்னாபின்னமாக்கியவன். இன்று மட்டும் எப்படி விட்டு வைத்து விடப் போகிறான்.
தனியொருத்தியாய்
நான் என்ன செய்து விட முடியும். என்னைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும்போது
இவளை எப்படி நான் காப்பாற்றப் போகிறேன்? இதோ அவன் எங்களை நெருங்கி விட்டான். இம்முறை
அவன் தேவை நானல்ல என்பது தெளிவாய்த் தெரிகிறது. என் மடியில் இருப்பவளை அனுபவிக்க வெறி
கொண்ட பார்வையோடு வருகிறான். அந்தப் பார்வையில் எத்துணைக் கோடுரம்!
அவளை
வெறித்தனமாய் முகர்ந்து பார்க்கிறான். இரத்த வாடை பிடித்திருக்க வேண்டும். அவளைப் பதம்
பார்க்கத் தொடங்கி விட்டான். பிஞ்சு கைகளைக் கருணையின்றி பிய்த்தெடுக்கிறான். அடுத்து
அவள் தலைக்குக் குறி வைக்கிறான். இனியும் இக்கொடூரத்தைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை.
“ஈன்றெடுத்த
அடுத்த நொடி என்னிடம் விட்டுச் சென்றவளைத் தண்டிக்காமல், இந்தப் பச்சிளங்குழந்தையைத்
தண்டிப்பது எந்த வகையில் நியாயம்!” என் கேள்வி யார் காதுகளிலாவது விழுகிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக