“வேண்டான்டா
செல்வம். தயவு செஞ்சு பேசாம போயிடு. இல்ல... நடக்கிறதே வேற!”
பிரதாப்பின்
கோபம் தலைக்கேற சொற்கள் தீப்பிழம்பாய் வந்து கொட்டின.
“போக
மாட்டேன்டா! என்னடா பண்ணுவே?” திமிறிக்கொண்டு வந்தான் செல்வம்.
“உன்னையெல்லாம்
கூட்டாளின்னு சொல்லவே வெக்கமா இருக்குடா! போதும்டா! இதுக்கு மேல நீ இருக்கிற
பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்! இவ்வளவு நாளு நல்லவன் மாதிரி வேசம் போட்டு என்
குடும்பத்த கலைச்சிட்டலே. நீ நல்லா இருக்க மாட்டடா! கடவுள் இருக்கிறது உண்மைனா, நீ
வாழப்போற மோசமான வாழக்கையைக் கண்குளிர பாத்திட்டுதான்டா நான் செத்துப் போவேன்!”
அண்ணனின் வார்த்தைகள் சாபமாய் உருவெடுக்க மிரண்டு போனாள் தங்கை அபிராமி.
“யார்
படுக்கச் சொன்னா! படுக்காத!” செல்வத்தின் அலட்சியம் கோபத்தீயை மேலும் கிளறிவிட ஆக்ரோசமாய்க்
கைகளை ஓங்கினான் பிரதாப்.
“தைரியம்
இருந்தா அடிடா!” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தவனைத் தடுத்து நிறுத்தினாள்
அபிராமி.
“எங்களாலதான
இவ்வளவு பிரச்சனை. நாங்க போறோம். நீ மட்டும் சந்தோசமா இருண்ணே!” இமைகளெனும் அணையை
உடைத்துக்கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எரிமலையாய்க்
குமுறிக்கொண்டிருந்த அண்ணனைச் சமாதானப்படுத்தும் முயற்சியை உடனடியாகக் கைவிட்டாள்.
செல்வத்தின் மோட்டாரில் ஏறிக்கொண்டாள். அண்ணன் ஒருமுறையாவது தன்னைப் பார்த்து
விடமாட்டானா, தடுத்து நிறுத்தி சம்மதம் சொல்ல மாட்டானா என ஏங்கித் தவித்தது அவள்
உள்ளம்.
பிரதாப்பின்
மனத்தில் சுனாமிப் பேரலை. கொந்தளிப்புத் தாங்காமல் நொந்து போனான் அவன். நண்பனின் துரோகத்தைக் கண்ணெதிரே கண்டு நிலைத்தடுமாறிப்
போனான்.
“நீங்க
நல்லா இருக்க மாட்டீங்க!” வாய்க்குள்ளே முணுமுணுக்கத் தொடங்கினான். அவர்கள் மேலான
கோபம் அடங்குவதாய் இல்லை. கைப்பேசியை எடுத்தான். கொஞ்ச நஞ்ச கோபத்தையும் கொட்டிவிட
மனம் ஆவேசம் கொண்டது. செல்வத்தின் எண்களை அழுத்தினான். கோபத்தில் கைகள் நடுங்குவதை
அவனால் தடுக்க முடியவில்லை. கைப்பேசி நழுவாமல் இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டான்.
செல்வம் அழைப்பை எடுப்பதாய்த் தெரியவில்லை. அவனை அப்படியே விட்டுவிட பிரதாப்பின் மனம்
இடம் தரவில்லை. அவன் விரல்கள் எண்களைத் தட்டித் தட்டி அலுத்துப் போயின.
மூளை
பரபரத்தது. புலனச் செய்தி அவன் கோபத்தைக் கொண்டு சேர்க்கும் என முழுமையாய்
நம்பினான். குரல் பதிவில் எஞ்சியிருந்த கோபத்தையும் கொட்டித் தீர்த்தான்.
நீலக்கோடுகள் அவன் செய்தி போய்ச் சேர்ந்ததைக் காட்டின. உள்ளூர ஒரு திருப்தி. இருப்பினும்,
பதில் குரல் பதிவு வராதது ஏமாற்றத்தைத் தந்தது. மீண்டும் அவனை அழைத்து மனம் ஆறும்வரை திட்டித் தீர்க்க முடிவெடுத்தான். அழைத்தான். ‘நீங்கள்
அழைத்த எண் பயன்பாட்டில் இல்லை’ என்ற செய்தி மட்டும் வந்தது.
அடுத்து
வரப் போகும் செய்தி அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது என்பது அவனுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக