பிரிக்பீல்ட்ஸில் புடவைக்கடைகளையெல்லாம் ஒரு சுற்று வந்தாகிவிட்டது.
எஞ்சியிருப்பது ஒரே ஒரு கடைதான். அழகு மனைவியின் ஆசையைப் பூர்த்திச் செய்ய முடியாதோ
என்ற சந்தேகம் தொற்றிக்கொள்ள, மனத்தில் சின்னதாய் ஒரு நெருடல். அவள் விரும்பிய அந்த
ஐந்நூறு வெள்ளிப் புடவையை எப்படியாவது வாங்கிக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே
எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
வயிறு சத்தம் போட ஶ்ரீ பாண்டி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வேட்டையைத்
தொடர முடிவெடுத்தேன். உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. காத்திருக்கும் பொறுமையில்லை. அங்கிருந்து நகரவும்
மனமில்லை. எனக்குப் பின்னால் கையில் நீண்ட
குச்சிகளுடன் ஆணும் பெண்ணுமாக இருவர். கருப்புக் கண்ணாடி அவர்கள் யாரென அடையாளம் காட்டியது.
பெண்ணின் தோளில் கருப்புப் பை.
“அண்ணே!
பிள்ளைங்க விளையாட்டுச் சாமான் விக்கிறோம். ஒன்னு வாங்கிக்கோங்கண்ணே”
தொந்தரவு
செய்தவளை முறைத்துப் பார்த்தேன்.
“வேணாங்க!”
ஒன்றை வரியில் முடித்துக் கொண்டேன்.
அந்தக்
கருப்புப்பை கனத்திருக்க வேண்டும். பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டுத் தோள்பட்டையை
வலது கையால் பிடித்து விட்டுக் கொண்டாள் அவள்.
அவர்களுக்கும் பின்னால் வரிசை நீண்டுகொண்டு போனது. எப்படியோ
ஐந்தாறு பேர் கடையிலிருந்து வெளியேற, என்னோடு
சேர்த்து இன்னும் சிலருக்கும் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. சாப்பிட்டுவிட்டுப் புடவை
வேட்டையைத் தொடங்கிவிட வேண்டுமென்பதில் மனம் பிடிவாதமாய் இருந்தது.
“சுமதி,
எவ்வளவு நேரம் கேக்கிறன். உனக்கு என்ன வேணும் சொல்லு. வாங்கித் தறேன்” குரல் வந்த திசைக்கு
என் பார்வையைத் திருப்பினேன். அதே ஜோடிகள்தான்.
“நான்தான்
சொல்றேன்ல. தேவையில்லாம செலவு பண்ண வேண்டாம். இருக்கிறது போதும்!” தீர்க்கமாய்ச்
சொன்னாள் அவள்.
“பொறந்தநாளுக்கு
ஆசையா ஏதாவது வாங்கிக்கொடுக்கலாம்னா, ஒத்து
வர மாட்டுறீயே!” சலித்துக்கொண்டான் அவன்.
“இந்தப்
பொருளெல்லாம் வித்தாதான் காசு. காலையிலேர்ந்து பத்து பொருள்கூட விக்க முடியல! சொந்தமா
உழைச்சி வாழனும்னு நெனைக்கிறோம். ஆனா, கருண காட்ட ஆளில்ல!” வேதனையின் அறிகுறிகள் அவள்
வார்த்தைகளில் அப்பட்டமாய்த் தெரிந்தன.
“கண்ணில்லாத
நாமதான் ஊனமின்னு நினைக்கிறீயா? இந்த உலகத்துல இதயமே இல்லாம எத்தனையோ பேரு ஊனமா இருக்காங்க!”
அவன் வார்த்தைகள் நெஞ்சைத் தைத்தன.
“நம்மலவிட
அவங்கதான் ரொம்ப பாவம்ல!” முகத்தைப் பரிதாபமாய் வைத்துக் கொண்டு உச்சுக் கொட்டியவளைப்
பார்த்தேன்.
பசி
இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக