முப்பது பேருக்கும் மறக்காமல் காலை வணக்கத்தை
அனுப்பினால்தான் அன்றைய பொழுது நன்றாய் விடிவதாய் ஒரு நம்பிக்கை. ஐந்து பத்து
நிமிட வேலைதான். இரண்டே வரிகளை யோசிக்க அதிக நேரம் தேவைப்பட்டதில்லை. அவசர
உலகத்தில் இரண்டு வரிகளே அதிகமாகத் தோன்றியது.
இன்றும் அந்த வேலையை முடித்து விட்டதில் பரம திருப்தி.
மெத்தையை விட்டு எழுந்தேன். புதிய எண்ணிலிருந்து புலனச் செய்தி என்னைத் தடுத்து
நிறுத்தியது. யாராக இருக்கும்? அந்த
எண்ணை இதற்குமுன் பார்த்தாக நினைவில்லை. யோசித்ததில் தலை வலி வந்ததுதான் மிச்சம்.
“உங்கள
ரொம்ப நாளா தெரியும். ஆனா, நேராப் பார்த்துப் பேச வாய்ப்புக் கிடைச்சதில்ல”
படித்ததும்
உள்ளுக்குள் பூரிப்பு. பெண்ணாய் இருக்குமோ? மனம் அலை பாய்ந்தது.
“நீங்க
யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” கேள்வியை உடனே தட்டச்சுச் செய்தேன்.
“இப்ப
என்ன அவசரம்! ஆனா, ஒன்னு நிச்சயம். என்ன(னை) உங்களால மறக்க முடியாது!”
அடுத்த
நொடியே பதில் வந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
“அதுக்கு வாய்ப்பே இல்ல!” உறுதியாய்ச் சொன்னேன்.
“பார்க்கலாம்!”
அடுத்த முனையில் அதே உறுதி.
சில நொடிப்பொழுதில் கற்பனை உலகில் நான்.
நீண்ட முடி, என் தோள்பட்டை அளவு உயரம், தெற்றுப் பல், கன்னத்தில் குழி. அவள் யாரென
அறிய மனம் ஆளாய்ப் பறந்தது. நண்பர்கள் வேலையாக இருக்குமோ எனச் சந்தேகம் வராமல்
இல்லை. ஆனால், அவர்கள் கைப்பேசி எண்ணெல்லாம் எனக்கு அத்துப்படி. தங்கை
விளையாடுகிறாளோ! அந்த அளவிற்கு அவளுக்குத் தைரியம் இல்லை.
“என்ன மிஸ்டர் மதன். ஆழமான சிந்தனையா?
இவ்வளவு நேரம் கூப்பிடறேன். பதில் இல்ல!” அலுவலகத்தில் சக ஊழியர் சீண்டியபோது
அவமானமாய் இருந்தது. அவள் என்னை ஏதோ செய்கிறாள்.
“இன்னைக்கு எல்லாம் என்னைப் பத்தியே
நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா?” இரவு மீண்டும் அந்தப் புதிய எண்ணிலிருந்து இதய அடையாளத்துடன் குட்டிக் கேள்வி.
“இல்லையே!”
என்றேன்.
“அப்படின்னா,
இதுக்குமேல என் மேசேஜ் உங்களுக்கு வராது!” முன்னறிவிப்போடு விடைபெற்றுக் கொண்டாள்.
“பைத்தியம்!”
ஏமாற்றத்தில் சத்தமாய்க் கத்தினேன்.
“யாருங்க?”
சோற்றுத் தட்டோடு பிள்ளையுடன் போராடிக் கொண்டிருந்த மனைவி அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக