புதன், 18 மே, 2022

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

 

 


எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொண்ணூற்று ஒன்பது நாள்களில் தொண்ணூற்று ஒன்பது படைப்புகள். தன் இடது கையைக் கிள்ளிப் பார்த்தான். வலித்தது. நடப்பது நிஜம்தான். இலக்கின் இறுதி நாள். அந்த நாளை வரவேற்கக் காத்திருப்பது அவனுக்குச் சுகமாய் இருந்தது.

இதுநாள்வரை எழுதியதைவிட நூறாவது கதையைச் சிறப்பாய் எழுதிவிட வேண்டும். எதை எழுதுவது என்ற முடிவுக்கு வருவதற்கே அவனுக்குப் பல மணி நேரங்கள் தேவைப்பட்டன. மூளைக்குள் கதை உட்கார மறுத்தது. அவன் விடுவதாய் இல்லை. இலக்கு. அது மட்டுமே அவன் முடிவான முடிவாய் இருந்தது.

கதைகளைப் படித்து, குறைகளைச் சுட்டிக்காட்டிய முகம் தெரியா உறவுகளை நினைத்துப் பார்த்தான். மனம் நிறைவாய் இருந்தது. பேனாவெனும் கருவறைக்குள் சின்னதாய்க் உருவாகிய கதைகள் உருபெற்றபோது, பிரசவிக்கும் வலி தெரியாமல் தன் கரம்பற்றி நின்ற அண்ணன் தம்பி உறவுகளை எண்ணி அசைபோட்டான். மனத்தில் இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடியது. அதில் மூழ்கியெழுந்தபோது புனித நீராடிய புத்துணர்ச்சி.

கதையெனும் குழந்தையோடு எதிரில் நின்றபோது உச்சி முகர்ந்து ஆசிர்வதித்த நட்புகளின் அன்பிற்கு அவன் அப்படி என்ன தந்துவிட முடியும். யோசித்துப் பார்த்தான். செல்வச் சீமானாய் இருந்திருந்தால் அவர்களுக்கெல்லாம் தங்கக்கிரீடம் சூட்டி அழகு பார்த்திருப்பான். பாவம்! சாதாரண மானிடன். மனத்திற்குள்ளே நன்றி பாராட்டும் விழா நடத்தி இன்புற்றுப் போனான். இலக்கின் எண்ணிக்கையோடு நிறுத்தி விடலாமா! உள்ளுக்குள் விவாத மேடை அரங்கேற்றம் கண்டது. நீதிபதியாய் அவன்.

“எழுது வெற்றிமாறா, எழுது! நிறுத்தி விடாதே! யாருக்காக இல்லாவிட்டாலும் உனக்காக எழுது! உன் ஆத்ம திருப்திக்காக எழுது! ஆசை தீரும்வரை எழுது! ஒரு அடியேனும் பின்வாங்கி விடாதே!” சன்னமாய் ஒரு குரல் உள்ளூர ஒலித்துக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை.

மடிக்கணினியின் முன் அவன். அடுத்த பிரசவத்திற்காகத் தயாராகத் தொடங்கினான். அழைப்பு ஒன்று அவசரமாய் வந்தது. உறவில் ஒன்று விடைபெற்றுக் கொண்டதாம். பூக்களுள் ஒன்று உதிர்ந்து போனதாம். கதையா உறவா? யோசிக்க அவகாசம் தேவைப்படவில்லை அவனுக்கு. மடிக்கணிணி அதன் கூட்டிற்குள் தஞ்சம் புகுந்து கொண்டது தற்காலிகமாக!

திங்கள், 16 மே, 2022

#குறுங்கதை 099 #முப்பது ஆண்டுகள்

 


மகிழ்ச்சி, கவலை, பாராட்டு, தூற்றல், மனநிறைவு, மனவுளைச்சல் எல்லாம் கலவையாய் முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவனின்  எண்ணமும் செயற்பாடும் மனோகரன் சாருக்கு அத்துப்படி. அவர்கள் பார்வையை வைத்தே முழு ஜாதகமும் சொல்லி விடுவார்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவம். பல நாட்கள் மகிழ்ச்சியில் மிதந்திருக்கிறார். சில நாட்கள் துன்பத்தில் துவண்டிருக்கிறார். நினைக்கும்போதே பிரமிப்பாய் இருந்தது அவருக்கு.

“ப்பா! அறுபது வயது வரைக்கும் நீங்க வேலை செய்யனும்னு அவசியம் இல்ல. பேசாம ரிதையர் பண்ணுங்க. நாங்க இருக்கோம். உங்க பென்சேன் பணம் இருக்கும். அப்புறம் என்ன கவலை? யோசிக்காதீங்கப்பா!” ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது மூத்த மகள் சொன்னது நியாயமாய்ப் பட்டது.

முப்பது ஆண்டுகளை ஆசிரியர்ப் பணிக்காக அர்ப்பணித்தாகி விட்டது. இனி வரும் காலங்கள் குடும்பத்திற்கு. யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. தீர்க்கமாய் ஒரு நாள் முடிவெடுத்தார் மனோகரன் சார். மனைவிக்கும் இந்த முடிவில் முழுச் சம்மதம்.

“இன்னைக்குப் போயி ரிதையர்மெண்டுக்கு எப்லை பண்ணப்போறேன்மா. நீங்க நெனைச்ச மாதிரி உங்களுக்காக வாழப்போற நேர வந்திடுச்சி!” காலையிலேயே மகளுக்கு அழைத்துச் சொன்னபோது மகள் மகிழ்ந்து போனாள். சின்னவளுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளலாமென முடிவெடுத்தார்.

வழக்கம்போல காலை மணி ஏழுக்கெல்லாம் பள்ளியை அடைந்து விட்டார். நடையில் சிறுபிள்ளையின் குதூகலம் தெரிந்தது. முகத்தில் நிலவின் பொழிவு தெரிந்தது. அலுவலகத்தில் வருகையைப் பதிவு செய்து விட்டு அதே உற்சாகத்தோடு நடைபோட்டார்.

“ஹாய் செக்கு மனோ! நம்பாக் ஹேப்பி ஹரி இனி!” எதிரில் வந்த மாணவர்நல ஆசிரியர் இப்ராஹிம் கேட்டபோது ஒன்றுமில்லையெனச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொண்டார்.

“செக்கு மனோ! பொலே சக்காப் சிக்கிட் தாக்?” இப்ராஹிமின் தயக்கம் அவரின் சிரிப்பிற்கு  முற்றுப்புள்ளி வைத்தது.

அரை மணி நேரத்தில் இந்திய மாணவர்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு, சவால்கள் குறித்து இப்ராஹிம் பேசத் தொடங்கியபோது மௌனமாய்க் கேட்டுக்கொண்டார் மனோகரன் சார். அவரது மௌனத்திற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள், போராட்டங்கள்.

“ப்பா...! ரிதையர்மெண்ட் எப்லை பண்ணிட்டீங்களாப்பா? ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? எப்ப ரிதையர் பண்ணுவீங்க?” மதியம் அழைத்த மகளின் கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாய்த் தந்தார் மனோகரன் சார். 

ஞாயிறு, 15 மே, 2022

#குறுங்கதை 098 #பூ பூக்கும் நேரம்

 


 

“இன்னும் ரெண்டு வருஷம்தான். காய் காய்க்க ஆரம்பிச்சிடும்ல!” சொல்லும்போதே அவன் கண்கள் ஒளி வீசத் தொடங்கின.

“அது காய்க்கிறப்ப காய்க்கும். அதுக்குள்ள ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்!” சொன்னதும் அவன் முகம் வாடிப் போனது.

“பேரப்பிள்ளைங்களுக்குன்னு நட்டது. அதுங்க வந்தா சந்தோசமா சாப்பிடுங்க இல்லையா?”

“சரிதான், யார் இல்லன்னு சொன்னா? அதுக்குன்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணனுமா?” சலித்துக் கொண்டாள்.

மறுவார்த்தை பேசாமல் மாமரத்தை வருடிக் கொண்டே அப்படியே கீழே உட்கார்ந்துகொண்டான். கையால் குப்பைகளைக் நகர்த்திவிட்டு அவளும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சின்ன மரம்தான். உச்சி நேரம் வந்தால் இப்படி  உட்கார முடியாது. வெயில் சுட்டெரித்து விடும்.

அவன் அமைதியாய் அவள் தோளில் சாய்ந்துகொண்டான். அவள் மெதுவாய் அவன் முடியைக் கோதி விட்டாள். தனி வீடு. யாரும் பார்க்க வாய்ப்பில்லை. பார்த்தாலும் பயப்படுவதற்கு ஒற்றுமில்லை. அவன் பார்வை முழுக்க மரத்தின்மேல் இருந்தது.

“காய்ச்சிடும்ல அஞ்சல!” ஏக்கமாய்க் கேட்டான்.

“எத்தனை முறை சொல்றது? காய்க்கிற நேரத்தில காய்க்கும்? சும்மா அதப் பத்தியே பேசினா எப்படி?” குரலில் கொஞ்சம் அதட்டல் தெரிந்தது.

அவளை வெறித்துப் பார்த்தான். கண்களில் ஒளி காணாமல் போயிருந்தது.  மிரட்சி, வருத்தம், எதிர்பார்ப்பு, கவலை மட்டுமே குடிகொண்டிருந்தது.  

“சரி, சரி, கவலப்படாதீங்க! சீக்கிரம் காய்ச்சிடும். காய்ச்சதும் பேரப்பிள்ளைங்க வருவாங்க, சாப்பிடுவாங்க. உங்க தாத்தா நட்ட மரம்னு நான் பெருமையா சொல்லுவேன். இப்ப சந்தோசம்தான?” குழந்தைபோல முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள். அடுத்த கணம்  அவன் கண்கள் உயிர்ப் பெற்றன.

“அஞ்சல, நாளைக்கு பூ உரம், காய் உரம் எல்லாம் வாங்கிடலாம். என்கூட வரயா! அதப் போட்டா சீக்கிரம் பூ பூக்குமாம். சீக்கிரம் பூ பூத்தா சீக்கிரம் காய் காய்க்கும் இல்லையா!” அவள் கைகளை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு உற்சாகமாய்ப் பேசியவன் முகத்தைப் பார்த்தாள்.

“சரி வரேன்!” அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

கருவோடு கருகிப்போன மகளை அவள் நினைவுபடுத்த விரும்பவில்லை.

சனி, 14 மே, 2022

#குறுங்கதை 097 #போகாதே!

 


நிமிடத்திற்கு நிமிடம் காரின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பின்னால் அமர்ந்திருக்கும் என்னுடைய பயம் அவளுக்குப் புரியவில்லை. அவள் தோள்பட்டையைப் பிடித்து அழுத்துகிறேன். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. மூச்சுத் திணறுகிறது. கண்ணாடியைத் திறந்து விடுகிறேன். விரித்துவிடப்பட்ட முடி கட்டுப்பாடின்றி பறக்கிறது. கையால் இழுத்துப் பிடித்துக் கொள்கிறேன். காற்று முகத்தில் வேகமாய் அடித்துச் செல்ல மூச்சுத் திணறல் அதிகமாகிறது. சட்டெனக் கண்ணாடியைச் சாத்துகிறேன்.

“ஏய்! உனக்குப் பைத்தியமா? இப்படியே போனா செத்திடுவோம்!” கத்துகிறேன். வேகத்தை மேலும் அதிகரிக்கிறாள். சாலையில் வாகனங்கள் அதிகமில்லாதது நல்லதாய்ப் போயிற்று.

“காடிய நிறுத்து! இல்ல...” அலறுகிறேன். சத்தமாய்ச் சிரிக்கிறாள்.

வேகம் நூற்று நாற்பதைத் தொட உடம்பெல்லாம் உதறத் தொடங்குகிறது.

“நான் சாக விரும்பல. தயவு செஞ்சி காடிய நிப்பாட்டு!” அவளிடம் உயிர்ப்பிச்சை கேட்கிறேன். அவள் தர மறுக்கிறாள்.

என் உறவுகளின் முகங்கள் ஒவ்வொன்றாய் கண்முன்னே மின்னல் வேகத்தில் வந்து செல்கின்றன. கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். நான் இறந்துவிட்டால் இவர்கள் நிலை? நினைத்துப் பார்க்கத் தைரியம் இல்லை.  நெஞ்சு படபடக்கிறது. தடவிவிட்டுக் கொள்கிறேன்.

“சொல்றத கேளு, ப்லீஸ்!” அவளைப் பலமாய் உலுக்குகிறேன். அவளின் சிரிப்புச் சத்தம் அதிகமாகிறது.

வேகம் நூற்றைம்பதை நெருங்குகிறது. அவள் இருக்கையை இரு கைகளால் இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்கிறேன். கைநடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இனியும் முடியாது. பயத்தில் அவள் கைகளைப் பிடித்து இழுக்கிறேன். கார் அசூர வேகத்தில் பறக்கிறது. அவள் பயங்கர சிரிப்பு என்னைப் அச்சுறுத்துகிறது.

அடுத்து நடக்கவிருப்பதை ஊகிப்பதற்குள் பேரிடி சத்தத்தோடு கார் எதையோ மோதி நிற்கிறது. அதிர்ச்சியில் கண்களை மூடிக்கொள்கிறேன். சில நொடிகளில் மெதுவாய்க் கண்களைத் திறக்கிறேன்.

அவள் உடல் ஸ்டேரிங்கில் சாய்ந்து கிடக்கிறது. தலையில் தொடங்கி உடலெல்லாம் இரத்தம். என் பார்வை மங்குகிறது. குமட்டிக்கொண்டு வருகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறேன்.

“யாராவது இருங்கீங்களா! ப்லீஸ், வாங்களேன்!” அலறிக் கொண்டே வெகுதூரம் உதவி தேடி ஓடுகிறேன். யாரும் கண்ணில் தென்படவில்லை.

அவளைக் காப்பாற்ற வேண்டும். மனம் துடிக்கிறது. மீண்டும் அவளை நோக்கி ஓடி வருகிறேன்.  

“சொன்னனே கேட்டியா! அநியாயமா செத்துப் போயிட்டீயே!” அவள் முகத்தைத் தொட்டுத் திருப்புகிறேன். அவள் முகத்தில் என்னைக் காண்கிறேன்.

வெள்ளி, 13 மே, 2022

#குறுங்கதை 096 #யாரெனத் தெரிகிறதா?

 


முப்பது பேருக்கும் மறக்காமல் காலை வணக்கத்தை அனுப்பினால்தான் அன்றைய பொழுது நன்றாய் விடிவதாய் ஒரு நம்பிக்கை. ஐந்து பத்து நிமிட வேலைதான். இரண்டே வரிகளை யோசிக்க அதிக நேரம் தேவைப்பட்டதில்லை. அவசர உலகத்தில் இரண்டு வரிகளே அதிகமாகத் தோன்றியது.

இன்றும் அந்த வேலையை முடித்து விட்டதில் பரம திருப்தி. மெத்தையை விட்டு எழுந்தேன். புதிய எண்ணிலிருந்து புலனச் செய்தி என்னைத் தடுத்து நிறுத்தியது. யாராக இருக்கும்? அந்த எண்ணை இதற்குமுன் பார்த்தாக நினைவில்லை. யோசித்ததில் தலை வலி வந்ததுதான் மிச்சம்.

“உங்கள ரொம்ப நாளா தெரியும். ஆனா, நேராப் பார்த்துப் பேச வாய்ப்புக் கிடைச்சதில்ல”

படித்ததும் உள்ளுக்குள் பூரிப்பு. பெண்ணாய் இருக்குமோ? மனம் அலை பாய்ந்தது.

“நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” கேள்வியை உடனே தட்டச்சுச் செய்தேன்.

“இப்ப என்ன அவசரம்! ஆனா, ஒன்னு நிச்சயம். என்ன(னை) உங்களால மறக்க முடியாது!”

அடுத்த நொடியே பதில் வந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அதுக்கு வாய்ப்பே இல்ல!” உறுதியாய்ச் சொன்னேன்.

“பார்க்கலாம்!” அடுத்த முனையில் அதே உறுதி.

     சில நொடிப்பொழுதில் கற்பனை உலகில் நான். நீண்ட முடி, என் தோள்பட்டை அளவு உயரம், தெற்றுப் பல், கன்னத்தில் குழி. அவள் யாரென அறிய மனம் ஆளாய்ப் பறந்தது. நண்பர்கள் வேலையாக இருக்குமோ எனச் சந்தேகம் வராமல் இல்லை. ஆனால், அவர்கள் கைப்பேசி எண்ணெல்லாம் எனக்கு அத்துப்படி. தங்கை விளையாடுகிறாளோ! அந்த அளவிற்கு அவளுக்குத் தைரியம் இல்லை.

      “என்ன மிஸ்டர் மதன். ஆழமான சிந்தனையா? இவ்வளவு நேரம் கூப்பிடறேன். பதில் இல்ல!” அலுவலகத்தில் சக ஊழியர் சீண்டியபோது அவமானமாய் இருந்தது. அவள் என்னை ஏதோ செய்கிறாள்.

      “இன்னைக்கு எல்லாம் என்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா?” இரவு மீண்டும் அந்தப் புதிய எண்ணிலிருந்து  இதய அடையாளத்துடன் குட்டிக் கேள்வி.

“இல்லையே!” என்றேன்.

“அப்படின்னா, இதுக்குமேல என் மேசேஜ் உங்களுக்கு வராது!” முன்னறிவிப்போடு விடைபெற்றுக் கொண்டாள்.

“பைத்தியம்!” ஏமாற்றத்தில் சத்தமாய்க் கத்தினேன்.

“யாருங்க?” சோற்றுத் தட்டோடு பிள்ளையுடன் போராடிக் கொண்டிருந்த மனைவி அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

வியாழன், 12 மே, 2022

#குறுங்கதை 095 #செல்லமே செல்லம்...

 


“தாத்தாவுக்கு ரொம்ப முடியலையாம்! சீக்கிரம் கிளம்பு!” அவசரப்படுத்திய அம்மாவைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தில் கலவரம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“ம்மா... நாளைக்குப் போலாமா? ஸ்கூல் பாடம் இருக்கு!” சொல்லிக்கொண்டே என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

“என்னடா பேசற? தாத்தாவுக்கு முடியலன்னு சொல்றேன், நீ என்னடான்னா காரணம் சொல்ற!” அறைக்கதவிற்கிடையே தலையை விட்டுக் கோபமாய் எட்டிப் பார்த்தார் அம்மா. முதன்முறையாய் என்னைக் கோபித்துக் கொண்ட அம்மாவை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.

தாத்தாவின் செல்லமகள்தான் அம்மா.  பாட்டியின் முகம் பார்த்ததில்லையாம். செல்லமாக வளர்ந்ததை அம்மா பெருமையாய்ப் பேசிய தருணங்கள் பல. அப்படிப் பேசும்போதெல்லாம் அப்பா ஓரக்கண்ணால் சாடை காட்டத் தொடங்கி விடுவார். முகத்தைக் கோணலாக்கி அப்பா செய்யும் சேட்டைகள் இரசிக்கும்படியாக இருக்கும். அப்பாவின் கோணல் முகத்தைப் பார்த்துச் சத்தமாய்ச் சிரித்து அப்பாவைப் பலமுறை  காட்டிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவுக்கு அர்ச்சனைகள் ஆரம்பித்து விடும். நல்ல பிள்ளையாய் அறைக்குள் புகுந்து கொள்வேன்.

“என்ன(னை)ப் பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் கிண்டலாக இருக்குல!” குழந்தைபோல அழத்தொடங்கும் அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா எத்தனையோ முறை போராடியிருக்கிறார். பலமுறை தோற்றுப் போயிருக்கிறார். என் ஒரு முத்தம் மட்டுமே அதற்கான அருமருந்து என வளர வளரத் தெரிந்துகொண்டேன்.

“சீக்கிரம் கிளம்புடா! அப்பா வர வரைக்கும் காத்திருக்க முடியாது!” மெத்தை மேல் மல்லாக்காய்ப் படுத்திருந்த என்னை அவசரமாய்த் தட்டி எழுப்பிய அம்மாவைக் கோபித்துக்கொள்ள மனம் வரவில்லை. ஆனால், வர முடியாது என்பதை எப்படிச் சொல்வது? பாடங்களை இன்றே செய்து அனுப்பியாக வேண்டும். இல்லையென்றால் வார்த்தையால் வறுத்தெடுத்து விடுவார் கணித ஆசிரியர்.

மெத்தையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன். புத்தகங்களைப் பரப்பி வைத்தேன். முதலில் கணிதப் பாடம். மற்றதைப் பிறகு செய்துகொள்ளலமென முடிவெடுத்தேன். இடையிடையே அம்மாவின் குரல் கேட்காமல் ஏதோ போல இருக்க கூப்பிட்டுப் பார்த்தேன் பதிலில்லை. வீடெல்லாம் தேடினேன். காணவில்லை.

“ம்மா...! எங்கம்மா போனீங்க!” உதடுகள் துடித்தன. காரணமே இல்லாமல் கைகள் நடுங்கின. பயம் தொற்றிக் கொண்டது. மீண்டும் படுக்கையறை ஒவ்வொன்றாய்ச் சென்று பார்த்தேன். இல்லை.  சமையலறையிலும் இல்லை. குளியலறையில் ஏதும் மயங்கி விழுந்திருப்பாரோ! மூளை விபரீதமாய் யோசிக்க ஆரம்பித்தது. அப்படியேதும் இல்லை என்றபோது பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக்கொண்டேன்.

“நான் ரெடியாயிட்டேன். சீக்கிரம் கிளம்புடா” சொல்லிக்கொண்டே பூசையறையிலிருந்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மனம் லேசானது. படபடப்புத் தானாய் அடங்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் டீ-சர்ட் ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். 

புதன், 11 மே, 2022

#குறுங்கதை 094 #ஊனம்

 

பிரிக்பீல்ட்ஸில் புடவைக்கடைகளையெல்லாம் ஒரு சுற்று வந்தாகிவிட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒரு கடைதான். அழகு மனைவியின் ஆசையைப் பூர்த்திச் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் தொற்றிக்கொள்ள, மனத்தில் சின்னதாய் ஒரு நெருடல். அவள் விரும்பிய அந்த ஐந்நூறு வெள்ளிப் புடவையை எப்படியாவது வாங்கிக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

வயிறு சத்தம் போட ஶ்ரீ பாண்டி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வேட்டையைத் தொடர முடிவெடுத்தேன். உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  காத்திருக்கும் பொறுமையில்லை. அங்கிருந்து நகரவும் மனமில்லை. எனக்குப் பின்னால் கையில்  நீண்ட குச்சிகளுடன் ஆணும் பெண்ணுமாக இருவர். கருப்புக் கண்ணாடி அவர்கள் யாரென அடையாளம் காட்டியது. பெண்ணின் தோளில் கருப்புப் பை.

“அண்ணே! பிள்ளைங்க விளையாட்டுச் சாமான் விக்கிறோம். ஒன்னு வாங்கிக்கோங்கண்ணே”

தொந்தரவு செய்தவளை முறைத்துப் பார்த்தேன்.

“வேணாங்க!” ஒன்றை வரியில் முடித்துக் கொண்டேன்.

அந்தக் கருப்புப்பை கனத்திருக்க வேண்டும். பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டுத் தோள்பட்டையை வலது கையால் பிடித்து விட்டுக் கொண்டாள் அவள்.

அவர்களுக்கும் பின்னால் வரிசை நீண்டுகொண்டு போனது. எப்படியோ ஐந்தாறு பேர்  கடையிலிருந்து வெளியேற, என்னோடு சேர்த்து இன்னும் சிலருக்கும் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. சாப்பிட்டுவிட்டுப் புடவை வேட்டையைத் தொடங்கிவிட வேண்டுமென்பதில் மனம் பிடிவாதமாய் இருந்தது.

“சுமதி, எவ்வளவு நேரம் கேக்கிறன். உனக்கு என்ன வேணும் சொல்லு. வாங்கித் தறேன்” குரல் வந்த திசைக்கு என் பார்வையைத் திருப்பினேன். அதே ஜோடிகள்தான்.

“நான்தான் சொல்றேன்ல. தேவையில்லாம செலவு பண்ண வேண்டாம். இருக்கிறது போதும்!”   தீர்க்கமாய்ச் சொன்னாள் அவள்.

“பொறந்தநாளுக்கு ஆசையா ஏதாவது வாங்கிக்கொடுக்கலாம்னா,  ஒத்து வர மாட்டுறீயே!” சலித்துக்கொண்டான் அவன்.

“இந்தப் பொருளெல்லாம் வித்தாதான் காசு. காலையிலேர்ந்து பத்து பொருள்கூட விக்க முடியல! சொந்தமா உழைச்சி வாழனும்னு நெனைக்கிறோம். ஆனா, கருண காட்ட ஆளில்ல!” வேதனையின் அறிகுறிகள் அவள் வார்த்தைகளில் அப்பட்டமாய்த் தெரிந்தன.

“கண்ணில்லாத நாமதான் ஊனமின்னு நினைக்கிறீயா? இந்த உலகத்துல இதயமே இல்லாம எத்தனையோ பேரு ஊனமா இருக்காங்க!” அவன் வார்த்தைகள் நெஞ்சைத் தைத்தன.

“நம்மலவிட அவங்கதான் ரொம்ப பாவம்ல!” முகத்தைப் பரிதாபமாய் வைத்துக் கொண்டு உச்சுக் கொட்டியவளைப் பார்த்தேன்.

பசி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...