சனி, 30 ஏப்ரல், 2022

#குறுங்கதை 083 #விருந்து

 


 புதிய தலைமையாசிரியர் தங்கமணி வந்ததிலிருந்து  பள்ளி மாற்றமெனும் புது வண்ணத்தைப் பூசத் தொடங்கியிருந்தது. அது அழகாகவும் இருந்தது. மலேசியக் கலாச்சாரம் வேறுன்ற வேண்டும் என்ற அவரது சிந்தனை எல்லா நிகழ்ச்சிகளிலும் வடிவம் பெறத் தொடங்கியது. அதன் விளைவாய் உதித்ததுதான் இந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.

காலையிலேயே பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், செயலவை உறுப்பினர்கள், ஆசிரியர், மாணவர்களோடு நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் பள்ளி மண்டபத்தில் அரங்கேறியது. பள்ளி அலுவலகத்தில் பணி புரியும் மலாய்க்கார ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மாணவர்கள் படைப்பிலும் மலேசிய மண்ணின் கலாச்சாரம் மணம் வீசி அரங்கைக் குளிரச் செய்தது. தலைமையாசிரியருக்குப் பரம திருப்தி. அருகிலிருந்த ராஜனைப் பக்கத்தில் வருமாறு சாடை காட்ட, அடுத்த நொடி ராஜன் அவர் பக்கத்தில் ஆஜரானார்.

“வந்தவங்க எல்லாரையும் கொஞ்சம் நல்லா கவனிச்சிக்குங்க சார்! நீங்கதான் இங்க பழைய ஆளு. உங்களுக்குத்தான் இங்க எல்லாரையும் தெரியும்!” தலைமையாசிரியரின்  பாராட்டு ராஜனை உற்சாகப்படுத்தியது.

மூட்டு வலியையும் மறந்து பம்பரமாய்ச் சுழலத் தொடங்கினார். நோன்புப் பெருநாளையொட்டி ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த பலகாரக்கூடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் கைகளிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொண்டபோது ஊழியர்களில் முகமெல்லாம் மகிழ்ச்சி ரேகை.

மீண்டும் தலைமையாசிரியரின் கண்கள் ராஜனைத் தேட, அடுத்த கட்டளைக்காக அவர் எதிரே பவ்வியமாய் நின்றுகொண்டார் ராஜன்.

“எல்லாம் நல்லவிதமா நடந்துகிட்டு இருக்குங்க சார். மனசெல்லாம் நெறைவா இருக்கு. விருந்தையும் அப்படியே கொஞ்சம் பாத்துக்குங்க சார்!’’

“கவலய விடுங்க சார்! நான் இருக்கேன்!” அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் கட்டிளங்காளையாய் விசுவரூபம் எடுத்தார் ராஜன்.

கெத்துப்பாட், லெமாங், ரொட்டி ஜாலா என மேசை மேல் வரிசைகட்டி நின்ற உணவுகள் மனநிறைவைத் தந்தன. லெமாங்கிற்கென மலாய்க்காரர் உணவகத்தில் ஆர்டர் செய்திருந்த ரெண்டாங்கின் வாசம் மூக்கைத் துளைத்தது. அடுத்த சில நிமிடங்களில் சிற்றுண்டிச் சாலை நிறைந்து வழிந்தது. மலாய்க்காரர்களுக்கென ஒதுக்கப்பட்ட உணவிடத்தில் கூட்டம் குழுமத் தொடங்கியது. ராஜனின் கண்கள் மலாய்க்கார ஊழியர்களைத் தேடின. ஒருவரையும் அங்குக் காணாது தவித்துப் போனார் ராஜன். நேரம் கடந்தது. வாடிய முகத்துடன் ஓரமாய் நின்று கொண்டார்.

“ராஜன் சார்! என்னாச்சி? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.”

“சார்!”

“சொல்லுங்க சார்!”

“அது வந்து... நம்ம கிராணி நோராய்னிகிட்ட ஏன் சாப்பிடலன்னு கேட்டேன் சார். அதுக்கு, உங்க சாப்பாட ஒரு கை பார்த்திடலாம்னு ஆசையா வந்தோம். இட்லி, தோசய்ய நாட்டுக் கோழி கறியில தொட்டுச் சாப்பிட எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மொறுமொறு பருப்பு வட ருசியா இருக்கும். ஆனா, அதெல்லாம் இன்னைக்கு இல்லையேன்னு வருத்தப்பட்டாங்க சார்!”

தலைமையாசிரியரின் இதழோரத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது. 

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

#குறுங்கதை 082 #வாழ்த்துகிறேன்...

 


      திருமண வாழ்க்கைக்கான முதலடி எடுத்து வைத்திருக்கின்ற இளஞ்சிட்டுகள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். எங்கோ பிறந்தீர்கள். இறைவனின் அருளால் இன்றைய இனிய நாளில் இணையராக நிச்சயிக்கப்பட்டுள்ளீர்கள். பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து உங்களை அன்போடும் ஆசிர்வாதத்தோடும் இணையராக அறிவிக்கும் இந்த நாள்,  இனிய நாளாக நிலைத்திருக்க வாழ்த்துகள். இன்றைய தினம் உங்கள் இருவரின் காதலை, அன்பை உலகம் அறியும்  தினம். இந்தக் காதலும் அன்பும் என்றென்றும் நிலைத்திருப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இன்று தொடங்கி இறுதிவரை இருவரும் கைகோர்த்து ஒன்றாய் இருங்கள்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுங்கள். உங்கள் மணவாழ்க்கையை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள மனமொத்துத் திட்டமிடுங்கள். நல்ல மணவாழ்க்கைக்குப் புரிதல் மிக அவசியம். புரிதல் இருந்து விட்டால் அன்பு பெருகும். அன்பு பெருகினால் வாழ்க்கை அழகாகும். வாழ்க்கை அழகானால், மகிழ்ச்சி ததும்பும். இளமை மாறி முதுமை அடைந்தாலும் கூட இந்த மாறாத அன்பும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கொண்டு ஒன்றாகக் கலந்திருங்கள். வாழ்க்கையை இனிமையான தருணங்களாக மாற்றி அமைத்திடுங்கள். இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தோள் கொடுத்து  உதவுங்கள். இன்று இருக்கின்ற இதே அன்பு, இதே பாசம், இதே சந்தோசம் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சிக்காகப் பிராத்தனை செய்யும் உங்கள் உறவுகளை மறந்து விடாதீர்கள். அவர்கள் உங்கள் உறவின்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமை உங்களுக்கு உண்டு என்பதை மனத்தின் ஆழத்தில் பதியச் செய்யுங்கள். இறுதியாக, நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கையின் இந்தத் தொடக்கம் மகிழ்ச்சியானதாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.

எழுதி முடித்ததும் பேனாவைக் கீழே வைத்தாள் பாரதி. நேற்றைய தினம் கணவன் விட்டுச் சென்ற விவாகரத்து கோரல் மனு அவள் கையொப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தது. 

வியாழன், 28 ஏப்ரல், 2022

#குறுங்கதை 081# பிரம்பு நாற்காலி

 


மொட்டை மாடி சிலுசிலு காற்றுக்காகவே பிரம்பு நாற்காலிகளை அடம் பிடித்து வாங்கிக் கொண்டதை நினைக்கும்போது ரஞ்சினிக்குப் பெருமையாய் இருந்தது.

“ரஞ்சினி, இப்ப இந்த நாற்காலி எதுக்கு? தண்டச் செலவு தேவையா?” சலித்துக் கொண்ட பிரபுவை அவள் கண்டு கொள்ளவில்லை.

ஆ மேங் கடையில் வாங்கிய நாற்காலிகளை அழகாய் வட்டமாய் அடுக்கினாள். சுற்றிலும் மூங்கில் செடிகளை வைத்து அழகு பார்த்தாள். ஏதோவொன்று குறையாய்ப் பட, மீண்டும் செடிகளை இருந்த இடத்திலே வைத்துவிட்டு கைகளைக் கட்டி மொட்டை மாடியைத் தீவிரமாய் நோட்டமிட்டாள்.

“டியர்! இங்க கொஞ்சம் வாங்களேன். இந்த எடத்த  செட் பண்ணனும். ஐடியா கொடுங்க ப்லீஸ்!” அறையில் அலுவலக வேலையில் மூழ்கிக் கிடந்தவனைக் கைகளைப் பிடித்து இழுத்து வந்தாள்.

“ஏய் ரஞ்சினி! என்ன பண்றே? இந்தப் பைல நாளைக்கு அனுப்பனும்! ஆள விடு!” மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டவனைத் தேடிச் சென்று வம்பிழுத்தாள்.

“என் மேல உங்களுக்குக் கொஞ்சம்கூட பாசம் இல்ல! நான் ஆச பட்டுக் கேட்டா, சலிச்சுக்கிறீங்க!” முணகிக் கொண்டு மெத்தையின் விளிம்பில் கால்களைக் குறுக்கி அமர்ந்து கொண்டாள்.

“நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா? என்கிட்ட அவசரத்துக்கு இருந்ததே அந்த மூவாயிரம் வெள்ளிதான். நீ என்னடான்னா...”

“ஏன் இப்படி கஞ்சப் பிரபுவா இருக்கீங்க! போறப்ப என்னத்த எடுத்திட்டுப் போவப் போறோம்!” அலுத்துக் கொண்டாள்.

அதற்குமேல் பேசி ஜெயிக்க முடியாது என்பது தெளிவாய்த் தெரிந்து போக மீண்டும் கோப்புகளுக்குள் மூழ்கிப் போனான் பிரபு.  

தன் ஆசைகளைப் புரிந்துகொள்ளாத கணவனை நினைத்தபோது மனசெல்லாம் வலித்தது. மெத்தையை விட்டு எழுந்தாள். மீண்டும் மொட்டை மாடிக்குச் சென்றாள். காற்று சிலு சிலுவென வீச அப்படியே பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அம்மாவிடம் பேசினால் தேவலம் எனத் தோன்றியது. கைப்பேசியை எடுத்து எண்ணைத் தட்டவும் அவள் அம்மா அழைக்கவும் சரியாக இருந்தது.

“ரஞ்சும்மா! உங்க அப்பா நம்மல ஏமாத்திட்டுப் போயிருவாரோன்னு பயமா இருக்குடா. திடீன்னு நெஞ்சு வலின்னு சொன்னவரு, அப்படியே மயக்கம் போட்டு விழுந்திட்டாரு. உன்ன விட்டா எங்களுக்கு யாருடா இருக்கா! ஈப்போ ஸ்பெசலிஸ்ட்டுக்குக் கொண்டு போயிட்டு இருக்கோம். சீக்கிரம் வாடா!” அழைப்பு அவசரமாய்த் துண்டிக்கப்பட்டது

“போறப்ப என்னத்த எடுத்திட்டுப் போவப் போறோம்!” அவள் கேள்வி அவளைப் பதம் பார்க்கத் தொடங்கியது.

புதன், 27 ஏப்ரல், 2022

#குறுங்கதை 080 #பத்து வெள்ளி

 

தர்மன் அறைக்கதவைத் திறந்து வெளியே வருவதைப்  பார்த்ததும்தான்  மாரிமுத்துவிற்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது. அவசரமாய் அவன் பக்கத்தில் போய் நின்று கொண்டார்.

“தர்மா... ஒரு பத்து வெள்ளி இருந்தா கொடுப்பா!”  முகத்தைப் பரிதாபமாய் வைத்துக் கொண்டு கேட்டவரை அலட்சியமாய்ப் பார்த்தான் தர்மன்.

“ப்பா... என்னத்துக்கு பத்து வெள்ளி. நேத்துதான  பத்து வெள்ளி கொடுத்தேன்! பழைய மாதிரி தண்ணீ போட ஆரம்பிச்சிட்டீங்களா!”

“ஐயோ! அப்படியெல்லாம் இல்லப்பா! அவசரமா தேவைப்படுது!” முகத்தில் வருத்தம் அப்பட்டமாய்த் தெரிந்தது. மனைவியின் இறப்பிற்குப் பிறகு அவர் குடிப்பதையே மறந்து போனாரென்று மகனிடம் யார் சொல்வது?

“ப்பா... நான் ஒரு ஆளுதான் சம்பாதிக்கிறேன். உங்களுக்கே நம்ப குடும்ப நிலைம தெரியும். பாத்து நடந்துக்குங்கப்பா! அவ்வளவுதான் சொல்லுவேன்!” பணப்பையைத் திறந்து பத்து வெள்ளியை நீட்டி விட்டு காரை நோக்கி நடையைக் கட்டினான்.  

“டாடி... நில்லுங்க டாடி. நேத்து என்கிட்ட என்ன புரோமிஸ் பண்ணீங்? ஞாபகம் இருக்கா இல்லையா!” சிணுங்கினாள் செல்ல மகள்.

“புரோமீஸா? சத்தியமா ஞாபகம் இல்லடா பேபி!” தலையைச் சொறிந்தவன் மகளை ஓரக்கண்ணால் பார்த்தான். குண்டு விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தாள் வீட்டின் கடைக்குட்டி.

“என் பேர்த்டேய்க்கு பப்பி வாங்கிக் கொடுக்கிறேன்னு சொன்னீங்களே. மறந்துட்டீங்களா? நீங்க ரொம்ப மோசம் டேடி!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மகள்.

“எப்படிச் செல்லம் மறப்பேன்! இப்ப அதுக்குத்தான் கெளம்பின. அதுக்குள்ள நீ கூப்பிட்டிட்டே!” கன்னத்தில் அன்பாய்த் தட்டிக் கொடுத்தான். மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள் மகள். மகளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது.

“தர்மா... நானு கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வறேன்பா!” அனுமதிக்காகக் காத்திருந்தார் மாரிமுத்து.

“போயிட்டு சீக்கிரம் வாங்கப்பா! வயசான காலத்தில அங்க இங்கன்னு சுத்தாதீங்க!”

“சரிப்பா!” தலையைப் பலமாய் ஆட்டிக் கொண்டார்.

மனைவியின் கல்லறையின் முன் மாரிமுத்து. கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

“என்ன(னை) அனாதையா விட்டிட்டுப் போயிட்டியே சுசி! என்னையும் கையோட கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல! நீ செத்த நாளுகூட யாருக்கும் ஞாபகம் இல்ல!”

மனத்திலும் உடலிலும் வலுவின்றி கல்லறை மேல் சாய்ந்து கொண்டார்.

பத்து வெள்ளி மலர்மாலை அவர் அன்பு மனைவியின் கல்லறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

குறுங்கதை 079 #சித்திரா பௌர்ணமி

 

சித்திரா பௌர்ணமி அன்று கோயிலில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தெருவின் இரு மருங்கிலும் கடைகளுக்குப் பஞ்சமில்லை. ரகளைகளுக்கும் பஞ்சமில்லை. சுந்தரமூர்த்தி குடும்பத்தோடு  கோயில் வாசலை வந்து சேர்வதற்கும் பூசை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. இந்தக் கூட்டத்தைத் தாண்டி மூலஸ்தானத்தை அடைவது சாத்தியமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. எப்படியாவது போய் விட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார் சுந்தரமூர்த்தி.

“சாரதா, நான் முன்னுக்குப் போறேன். நீ பின்னாலேயே வா. பொம்பள பிள்ளைங்க கைய நல்லா பிடிச்சிக்கோ. கண்ண மூடிகிட்டு நடப்பானுங்க! புரியுதா இல்லையா?” குரலில் கடுமை தெரிந்தது. பதிலேதும் பேசவில்லை சாரதா. தலையை மட்டும் பலமாய் ஆட்டிக் கொண்டாள்.

கூட்டத்தை ஊருவிக் கொண்டு உள்ளே செல்லப் படாத பாடுபட்டது சுந்தரமூர்த்தியின் குடும்பம்.

“என்னங்க! என்னால முடியல. நீங்க பிள்ளைங்க கைய....” முடிப்பதற்குள் எரித்து விடுவது போல பார்த்த சுந்தரமூர்த்தியின் பார்வையை எதிர்கொள்ள  முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் சாரதா.

“ஒன்னுத்தும் லாயிக்கில்ல!” முணகிக் கொண்டே பிள்ளைகளைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.

அவரையும் முந்திக்கொண்டு வந்தது இளைஞர் பட்டாளம் ஒன்று. ஏனோ இந்தக் காலத்து இளைஞர்களைக் கண்டால் சுந்தரமூர்த்திக்கு அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை. அந்தப் பட்டாளத்தில் கடைசியாய் வந்தவனுக்கு நேரம் சரியில்லை போலும். சொல்லி வைத்தாற்போல் கால் தடுக்கிச் சுந்தரமூர்த்தியின் மகளின் மேல் விழுந்தான்.

“ஏய்... கண்ண எங்கப்பா வச்சிருக்கிற. கோயிலுக்கு வந்தா அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டீங்களா? பொம்பள பிள்ளைங்களத் தேடி வந்து விழுவீங்களா? திருந்தாத ஜென்மங்க!” ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினான் சுந்தரமூர்த்தி.

“சார்! தப்பா பேசாதீங்க! தெரியாமத்தான் நடந்திச்சி!” விளக்கமளிக்க முயன்றவனை பார்வையால் அடக்கப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

“கோயில்ல வந்து பொறுக்கித்தனம் பண்றது!” சுந்தரமூர்த்திக்கு.ஆத்திரம் அடங்கவில்லை.

பேசிப் பயனில்லையென்று தெரிந்ததும் கண்டும் காணாமல் போனது அந்த இளைஞர்க் கூட்டம்.

எல்லாம் முடிந்து வெளியே வருவதற்குள் சுந்தரமூர்த்திக்கு வியர்த்துக் கொட்டியது.

முகத்தை துடைத்துக் கொண்டு திரும்புவதற்கும் பின்னால் எவனோ ஒருவன் மேலே வந்து விழுவதற்கும் சரியாக இருந்தது.

“டேய்... திருந்த மாட்டீங்களா? கண்ண எங்கடா வச்சிருக்கீங்க!” அலறிக்கொண்டே திரும்பியவரின் அடுத்த வார்த்தை வெளிவராமல் அப்படியே நின்று போனது.

வாட்டசாட்டமாய் நின்று கொண்டிருந்த காவலரைக் கண்டதும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார் சுந்தரமூர்த்தி.

“சோரி என்சிக்!” அசடு வழிந்த சுந்தரமூர்த்தியை அந்த இளைஞர் கூட்டம் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது

திங்கள், 25 ஏப்ரல், 2022

#குறுங்கதை 078 #பழிக்குப் பழி

 

டேய் மச்சான், எனக்கென்னமோ ரொம்ப பயமா இருக்குடா? இந்த நேரத்தில நாம இங்க வரது சரியாப் படல!” சொல்லிக்கொண்டே எச்சிலை விழுங்கினான் கரும்புலி கந்தன்.

“ஏய், நிறுத்துடா பயந்தாங்கொள்ளி, ஏன் இப்படி பயந்து சாகற!” கோபத்திலும் கிசுகிசுத்தான் பாலா.

தன் காதலை உதாசினப்படுத்திய அனிதாவை இன்று உண்டு இல்லை என்று செய்து விட முடிவெடுத்தான் பாலா. அதன் விளைவு இன்று பாலா கரும்புலி கந்தனுடன் அனித்தாவின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பூனை போல பதுங்கி உட்கார்ந்திருக்கிறான்..

“டேய் பாலா.. டேய்... எங்கடா இருக்க? எனக்கு இந்த இருட்ட பார்த்தா பயமா இருக்குடா. பக்கத்துல ஏதோ நிக்கிற மாதிரியே இருக்கு!,” பாலாவின் மௌனம் கரும்புலி கந்தனின் திகிலை அதிகரித்தது.

“ஸ்ஸ்ஸ்...“ பாம்பாக இருக்குமோ என்று அரண்டு போனான் கரும்புலி.

“பாலா...! பாலா...! பேசுடா...”

“ஸ்ஸ்ஸ்...” மீண்டும் அதே சத்தம்.

சில்லுன்னு காற்று வேறு. காற்றோடு சேர்ந்து வந்தது மல்லிகையின் மணம். பயத்தின் உச்சத்தில் இருந்த கரும்புலிக்கு விட்டால் ஓடிவிட வேண்டும்போல் இருந்தது. பாலாவின் நண்பனானதற்கு இன்று முதல் முறையாக வருத்தப்பட்டான்.

திடீரென யாரோ தலையைத் தடவ, அலறத் தொடங்கியவனை வாயைப் பொத்தி அடக்கினான் பாலா.

“டேய் மச்சான்... யாரோ என் தலைய தடவுறாங்கடா. பயமா இருக்குடா...வாடா போயிடலாம்,” காலில் விழாத குறையாய்க் கெஞ்சினான் கரும்புலி.

“ஸ்ஸ்ஸ்... வாய மூடு. சத்தம் போடாத. இன்னொரு முறை சத்தம் வந்துச்சு.. செத்த...,” பல்லைக் கடித்தான் பாலா.

“உன்ன விட மாட்டேன். இன்னிக்கு வசமா மாட்டின, உன்னை வச்சு செய்யப் போறேன்,” மனதிற்குள் பேசுவதாக நினைத்துச் சத்தமாகவே பேசினான்.

“என்னடா பேசுற...? யாருகிட்ட பேசற?” குழப்பமும் பயமும் ஒரு சேர கேட்ட கரும்புலிக்குத் தகுந்த பதில் வரவில்லை.

“கரும்புலி...! கரும்புலி...! வந்துட்டியா. ஹா...ஹா...ஹா... வாடா உனக்காகத்தான் காத்திருக்கிறேன். வாடா... வா...,” முந்தைய நாள் தூக்குப்போட்டுச் செத்துப் போன பொன்னம்மா அக்காள் குரல் போலவே இருக்க, போட்டிருந்த காற்சட்டை ஈரமாவதை அவனால் தடுக்க முடியவில்லை. அந்தக் குளிரிலும் கரும்புலிக்கு வியர்த்துக் கொட்டியது.

“டேய் மச்..சான்... என்னால இதுக்..கு மேல கொஞ்ச நேரங்கூட இங்க இருக்...க முடியாது. பயத்துல நெஞ்செல்லாம் அடைக்கு..து,” கரும்புலியின் குரல் சிக்கி சிக்கி  வந்தது.

நினைத்தது போலவே அனித்தா பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

“டேய்... பயப்படறத நிப்பாட்டு. நான் இப்ப அந்தத் திமிர் பிடிச்சவளைக் கட்டிப்பிடிச்சி  முத்தம் கொடுப்பேன். நீ வீடியோ எடு புலி. என் முகம் மட்டும் தெரியக்கூடாது!” பக்குவமாய் நினைவுறுத்தினான் பாலா.

பதுங்கிய இடத்திலிருந்து எழுந்தான். அனித்தாவை நெருங்கினான்; முரட்டுத்தனமாய்க் கட்டிப் பிடித்தான். முத்தம் கொடுத்தான். அவன்  நினைத்தது போல் அவள் திமிரவில்லை. வாயெல்லாம் பிசுபிசுத்தது. அவள் முகத்தைப் பார்த்தான். வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

#குறுங்கதை 077 #மது

 

இரவு பத்து மணிக்குப் படுக்கைக்குச் சென்ற கற்பகத்தால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. படுக்கையில் படுத்த அடுத்த கணம் தன்னை மறந்து உறங்கிப் போகும் ரகம் கற்பகம். ஆனால், அன்று ஏனோ அது நடக்கவில்லை. வலுக்காட்டாயமாகக் கண்ணை மூடினாள். அடுத்த நொடி அறைக்கதவு தட்டப்படுவதை உணர்ந்தாள். மதுவைத் தவிர வேறு யாராகவும் இருக்கும். கதவைத் திறந்தாள். மது தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.

“என்னடா மது. இந்த நேரத்தில. உடம்பு சரியில்லையா?’ மதுவின் நெற்றியில் கை வைத்துக் காய்ச்சல் அடிக்கிறதா எனப் பார்த்தாள்.

அவன் தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தினாள். முகம் வெற்றிலை போல் வாடியிருந்தது. கண்கள் வீங்கி சிவந்திருந்தன. மனம் பதறிப் போனது.

“ரொம்ப முடியலையா? சொல்லுடா! மருந்து தரட்டுமா?” குரலில் கனிவு பெருகியது.

“காய்ச்ச இல்ல. தலதான் கொஞ்சம் வலிக்குது. தூங்கனா சரியாயிடும்!” மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டான்.

இனி யாருக்கும் அவன் தொல்லையாக இருக்க விரும்பவில்லை. திட்டமிட்டபடி இன்று வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். சரியாய் விடியற்காலை மணி 1.30. அம்மா தூங்கியிருப்பார் என்ற நம்பிக்கை வந்தவுடன் துணிப்பையோடு வரவேற்பறைக்கு வந்தான். முன் கதவைத் திறக்க சாவி வேண்டும். சாவி மாட்டும் ஆணியை வருடினான். சாவி இல்லை. மஞ்சள் விளக்கைத் தட்டிவிட்டுத் தேடுவதென முடிவு செய்தான். தட்டினான். சாவிக்குப் பதிலாக அவன் அம்மா கண்ணில் பட்டாள்.  மதுவுக்கு வியர்த்துக் கொட்டியது. அம்மாவைப் பார்த்தான். அம்மா அவனைப் பார்த்தாள். ஓடிச் சென்று அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டான். அருவியாய்க் கொட்டிய கண்ணீர் அவன் அம்மாவின் கன்னத்தையும் சேர்த்தே நனைத்தது.

“தொடாத டா!” அவனைத் தள்ளி விட்டாள் கற்பகம்.

“ம்மா...”

“நிறுத்துடா...!”

“ம்மா...”

“என்ன விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. கல் நெஞ்சுக்காரா!” பொங்கினாள் கற்பகம்.

“ம்மா...”

“அப்படி என்ன தீர்க்க முடியாத பிரச்சன உனக்கு? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லியிருக்கலாம்ல”

“ம்மா.... நான் சொன்னா நீங்க செத்துப் போயிடுவீங்க! அம்மா காலில் அப்படியே சரிந்து விழுந்தான் மது.

அவனைத் தூக்கி நிறுத்தினாள் கற்பகம். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள்.

“உன்னால ஒரு பையனா வாழ முடியல. இதான உன் பிரச்சன?”

இதுநாள் வரை தான் சொல்லத் தவித்ததை, சொல்ல பயந்ததை இவ்வளவு இயல்பாய்த் தன் தாயால் எடுத்துக்கொள்ள முடியும் என்பதைக் கனவிலும்கூட நினைத்ததில்லை.

“உன் சந்தோசத்தவிட எனக்கு வேற ஏதும் பெரிசு இல்லடா மது.”

“ம்மா...  நான்...”

அவள் அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். உச்சி முகர்ந்தாள். அடுத்த நொடி அவனை விலக்கி விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். சில நிமிடங்களிலே திரும்பி வந்தாள். தன் கையில் இருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தைக் காட்டினாள். முப்பதாயிரம் நிங்கிட் மதுவின் பெயரில் இருந்தது.

 

 

 

 

சனி, 23 ஏப்ரல், 2022

#குறுங்கதை 076 #சவம்

 






பக்கத்து வீட்டில் அழுகைச் சத்தம் ஓய்ந்தபாடில்லை. அலை போல் வந்து வந்து போனது. மனம் கனத்தது.

“பாவம் பார்வதி ஆண்ட்டி. அவங்க நிலம யாருக்கும் வரக்கூடாது!” அம்மாவின்  பேச்சு என்னையும் ஏதோ செய்தது.

“நினைச்சா கஷ்டமாதான் இருக்கு மா. ஆனா, நாம என்ன பண்ண முடியும்?” சுருக்கமாக நிறுத்திக்கொண்டேன்.

இன்று காலை முதலே சொந்த பந்தங்கள் எனக் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டது. பார்வதி ஆண்ட்டிக்கு இவ்வளவு சொந்தங்களா? எனக்குள் ஆச்சரியம். இதுவரை அவருக்கு அவர் பிள்ளைகள் தவிர யாருமில்லை என நான் நினைத்து தப்பாய்ப் போனது. வயது 65 இருக்கும் என நினைக்கிறேன். இதழோரத்தில்  என்றும் ஒரு புன்னகை இழையோடிக்கொண்டிருக்கும். ஆனால், அவரது கண்களில் மட்டும்  ஏதோ ஒரு சோகம். காரணம் என்னவென்று நாங்கள் கேட்டதும் இல்லை. அவர் சொன்னதும் இல்லை.

“காயத்திரி..!. ஆண்ட்டி பிள்ளைங்க இன்னும் சிங்கப்பூரிலிருந்து வரல. வந்ததும் அவங்க வேலைய பார்த்துப்பாங்க. அதுவரைக்கும் அங்க இருந்து தேவையானத பார்த்துக்கோ”

பக்கத்து வீடுதானே! எட்டே அடியில் அவர் வீட்டை எட்டிப்பிடித்தேன். சவப்பெட்டிக்குள் பார்வதி ஆண்ட்டியை வைத்துப் பார்ப்பது வேதனையாக இருந்தது.

“நல்ல மனுசி... பாவம் என்று உச்சுக் கொட்டினர் சிலர்.

“சாகற வயசா இது!” என்று மனசாட்சியே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டனர் சிலர்.

“பிள்ளங்க இருந்தும் அனாதையா செத்தா மனுசி,” என்று கோபத்தில் வெடித்தனர் சிலர்.

கூட்டத்தில் சலசலப்பு. மகள்கள் குடும்பத்தோடு வந்திறங்கினர். ஓடி வந்து ஆண்ட்டியின் தலைமாட்டில் உட்கார்ந்துகொண்டார்கள்.

என்னங்க... என்னால முடியலீங்க... உங்க அம்மாவ கூட்டிட்டு வந்திடு, நம்ம கூடவே  வச்சிக்கலாம்னு போன வாரந்தானே சொன்னீங்க...” கதறிய பெரியவளைப் பரிதாபமாய்ப் பார்த்தது அங்கிருந்த கூட்டம். உறவுக்காரியோ யாரோ தெரியவில்லை. அழுதவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லிக்  கொண்டிருந்தாள்.  இறுதிக் கட்டச் சடங்கு. மனத்தினுள் பாரம் அதிகமானது.

“பெட்டிய மூடப்போறம். பார்க்கிறவங்க எல்லாம் பாத்துக்கோங்க!” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்பிள்ளைகள் இருவரும் துடித்துப் போனார்கள்.  

“அம்மா... எழுந்திரும்மா... எங்கள விட்டுட்டு போவாதம்மா... நீ இல்லாம எப்படிம்மா இருக்கப்போறோம்... அம்மா.....  அம்மா.....” பெட்டி மேல்  விழுந்தார்கள்; அழுதார்கள்.

இதுவரை அழாமல் இருந்தவர்களும் உடைந்து போனார்கள். எல்லாம் முடிந்தது. ஆண்ட்டியின் அடையாளமாய் வரவேற்பறையில் ஒரு புகைப்படம். அதே அழகிய சிரிப்பு. ஆண்ட்டி படத்தருகே பூச்சாடியில் பூ வைக்கச் சொல்லி அம்மா சொல்ல, அடுத்த கணம் சமையலறையில் இருந்தாள். அதுதான் தப்பாய்ப் போனது. கேட்கக் கூடாததைக் கேட்க வேண்டியதாகிப் போனது

நாம  அடிக்கடி வந்து போக முடியாதுன்னுதான் இன்னிக்கே பால் ஊத்தியாச்சு. அடுத்து என்ன செய்யனும்னு முடிவு பண்ணனும். பேங்க் பேலன்ஸ் செக் பண்ணனும். இந்த வீட்டைப் பத்தி பேசனும்,” என்று மூத்தவள் அடுக்கிக்கொண்டு போக சின்னவள் பூம்பூம் மாடாய்த் தலை அசைத்தாள்.

“நல்ல வேள சீக்கிர போயிட்டீங்க ஆண்ட்டி,” மனம் வெம்பியது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

#குறுங்கதை 075 #வேலை முடிந்திருக்குமே!

 

வேலைக்கு அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஜே.பி.ஜே. போய்ச் சேர்ந்தபோது சரியாய் பிற்பகல் மணி 3.20. எனக்கு முன்னே பெரிய கூட்டம் காத்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. இன்னும் சீக்கிரம் வந்திருக்கலாமோ. சிடுமூச்சி போஸ் ஆ மெங் விட்டால்தானே அது சாத்தியம். ஒரு மணி நேர விடுப்பு எடுப்பதற்கே  காலில் விழாத குறையாய்க் கெஞ்ச வேண்டியிருந்தது. இன்னும் சீக்கிரம் என்றால் எப்படிச் சாத்தியமாகும்!

“நாலு மணிக்கெல்லாம் சாத்திடுவான். சீக்கிரம் போனாதான் லைசன்ஸ் ரினிவு பண்ண முடியும்!”  நேற்று இரவு கணவர் எச்சரித்தது மூளையைக் குடைய ஆரம்பித்தது. மூன்று மணிக்குத் தொழிற்சாலையை விட்டுக் கிளம்பி வந்து சேர்வதற்குள் இருபது நிமிடங்களாகி விட்டன.

“பிள்ளையாரப்பா! நீதாம்பா என்ன(னை) காப்பாத்தனும்” ஜே.பி.ஜே.வில் இருக்கிறேன் என்பதையும் மறந்து கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

முன் வாசல் தேடிப் போய்க் கதவைத் திறக்க கரார் குரலொன்று எமனாய் வந்தது.

“தக் தவு பஹாசா மெலாயுகா? இக்கூட் பின்து லகி சத்து!” குரல் வந்த திசையைப் பார்த்தேன். குரலின் சொந்தக்காரனின் தோற்றம் பயமுறுத்தியது. வாயை மூடிக்கொண்டு அவன் காட்டிய திசைக்குச் சென்றேன். என் கணவர் மட்டும் இப்படிப் பேசியிருந்தால் அவர் கதை கந்தல்தான்.

அங்குச் சென்ற பிறகுதான் அடுத்த கண்டம் கைநீட்டிக் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. மை செஜாத்ராவை ஸ்கென் செய்ய வேண்டுமாம். ஜே.பி.ஜே. ஏப்ஸ் பதிவிறக்கம் செய்ய வேண்டுமாம். அதில் காட்டப்படும் பட்டனைத் தட்ட எண் எடுக்க வேண்டுமாம். அந்த எண் கிடைத்த பின்தான் உள்ளேயே போக முடியுமாம். எனக்காக ஒரு நாள் விடுமுறை எடுக்க முடியாத என் கணவர் மேல் அப்பொழுதுதான் அதிகமாய்க் கோபம் வந்தது.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு எண் கிடைத்து விட உள்ளே சென்று அமர்ந்துகொண்டேன். சரியாக மணி 3.45. என்னுடைய எண் கூப்பிடப்படாமல் இருந்தது. மனதிற்குள் படபடப்பு.  கணவரை அழைத்தேன்.

“என்னங்க! உங்களால்தான் எல்லாம். தனியா மாட்டிகிட்டு கஷ்டப்படுறேன். எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்கானுங்க! நம்பர கூப்பிட மாட்றானுங்க! எனக்குப் பின்னால வந்தவங்க எல்லாம் அவங்களா போயி லைசன்ஸ் எடுத்துகிட்டுப் போறாங்க! இப்ப நான் என்னா பண்ணட்டும்?” கோபம் முழுவதுமாய்க் கணவர் பக்கம் திரும்பியது.

“பக்கத்தில இருக்கிறவங்ககிட்ட கேக்கத் தெரியாதா? அதுகூடவா நான் சொல்லிக்கொடுக்கனும்!” அடுத்த முனையில் அலறினார் கணவர். அழைப்பைக் கோபமாய்த் துண்டித்து விட்டு கவுண்டருக்குப் போனபோது சரியாய் மணி 3.59.

“சோரி சேக், கவுண்டர் மாவ் துத்தூப். தோலோங் டத்தாங் ஏசோக்!”

‘சில கெ கவுண்டர் டுவா’ என்பது ஜே.பி.ஜே. ஏப்பில் வந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ வேலை முடிந்திருக்குமே! 

வியாழன், 21 ஏப்ரல், 2022

#குறுங்கதை 074 #முனியம்மா

 


“ஏன்மா! உன்னதான். நிறையமுறை உன்ன இங்க பாத்திட்டேன். இந்தக் கொலைய பத்தி உனக்கு ஏதாவது தகவல் தெரியுமா? தெரிஞ்சா பயப்படாம சொல்லு,” நிதானமாய்க் கேட்டான் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம்.

“தெரியாதுங்க சார்!” வெற்றிலையை மென்றுகொண்டு சுருக்கமாய்ப் பதில் சொன்னாள் முனியம்மா.

“இதுவரைக்கும் நிறைய பேர விசாரிச்சிட்டேன். ஆனா, ஒருத்தர்கூட சரியான தகவல் சொல்லல!” சிகரெட் புகையை உள்ளே ஆழமாய் இழுத்து மெதுவாய் விட்டுக்கொண்டே முனியம்மாவை ஓரக்கண்ணால்  பார்த்தான் ராஜசுந்தரம்.

“சார், அந்தப் பொண்ணோட கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. அந்தப் பொண்ண நான் பாத்ததுகூட இல்லை. அப்பப்ப இங்க வருவேன். சும்மா உலாத்துவேன். அப்புறம் போயிடுவேன். மத்தபடி இங்க யாருகிட்டயும் அதிகமா பேச மாட்டேன்!”

அவள் பேச்சில் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. இதோடு மூன்றாவது முறை இளம்பெண் கல்பனாவின் கொலையைப் பற்றிய விசாரனைக்காக அங்கு வந்து விட்டான். கணவன் வெளியூர் போயிருந்த சமயம் திருமணமாகி மூன்று மாதங்களில் தன் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவளைப் பணிப்பெண்தான் முதலில் பார்த்துக் காவல்துறைக்குத் தகவல் சொல்லியிருக்கிறாள். கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்கான தடயங்கள் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான்.

யார் யாரையோ எல்லாம் விசாரித்தாகி விட்டது. இதுவரையில் சிக்கலின் முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அவன் அங்குப் போகும்போதெல்லாம் இந்த முனியம்மா கண்ணில் பட்டுவிடுவாள். அவள் மேல் அவன் கழுகுப் பார்வை திரும்பியது.

“தோ பாரு முனியம்மா. இன்னைக்கு நீ உண்மைய சொல்லல, நடக்கிறதே வேற,” குரல் தடித்தது.

அவளிடம் தயக்கமோ நடுக்கமோ இல்லை. அவனை உற்றுப் பார்த்தாள்.

“உன்ன மாதிரி அவளும் ஒரு பொண்ணு. அவளுக்கு நியாயம் கிடைக்கணும்!” அவள் கண்களில் உண்மையைத் துளாவினான்.

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் சார்” முனியம்மாவின் அலட்சியம் அவன் கோபத்திற்குத் தூபம் போட்டது.

“இதுக்கு மேல என் விசாரன வேற மாதிரி இருக்கப்போவுது. நினைவில வச்சுக்கோ!” கராராய் எச்சரித்தான்.

“இப்ப துடிக்கிறீங்க  சார். என் புருசன் என்ன கொன்னப்பா இப்படி விசாரிச்சிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்!”

இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரத்தின் பார்வை மங்கத் தொடங்கியது.

புதன், 20 ஏப்ரல், 2022

#குறுங்கதை 073 #அப்பாவின் கைக்கடிகாரம்

 

அன்புள்ள அப்பாவுக்கு,

      நெடுநாளாய் எழுத நினைத்த கடிதம் இது. நீங்கள் படிக்கும் போது என்னைத் துரோகி எனத் தள்ளி வைக்கப்போவது நிஜம்.  நீங்கள் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்த கைக்கடிகாரத்தை உங்களுக்குத் தெரியாமல் என்னோடு எடுத்து வந்து விட்டேன். அதை உங்களுக்குத் தெரியாமல் எடுப்பதற்கு நீங்கள்தான் காரணம்.

எத்தனையோ இரவுகள் நீங்கள் அதைக் குட்டிப் பெட்டியிலிருந்து எடுத்துக் கைகளில் கட்டி இரசிப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அப்படி ஒரு நாள் நீங்கள் பார்த்துவிட்டு அசந்து தூங்கியபோது அதை உங்களுக்கே தெரியாமல் பூனை போல பதுங்கி வந்து எடுத்துப் பார்த்தேன். பழைய டிசைனாக இருந்தாலும் அழகாய்த்தான் இருந்தது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை! பழைய கைக்காரங்கள் கொலெக்‌ஷன் செய்வதாய் ஒரு நாள் சும்மா சொல்லிப் பார்த்தேன். அதற்கு உங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அப்பொழுதே கொடுத்திருந்தால் அதை நான் எடுத்திருக்க மாட்டேன். மன்னிக்கவும்... திருடியிருக்க மாட்டேன்.

உங்கள் சுயநலத்தை நினைத்து அன்று எனக்குக் கோபம் வந்தது. பலி வாங்க முடிவெடுத்தேன். உங்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்க எனக்குள் இருந்த கொடூரன் தீவிரமாய் யோசித்தான். அவனை அடக்கப் பார்த்தேன். கோபம் என் கண்ணை மறைத்து விட்டது. அவன் போக்கில் அவனை விட்டு விட்டேன். மருத்துவப் படிப்புக்காக இந்தோனேசியா பயணமாக முடிவெடுத்தபோது என்னுள் இருந்த அந்தக் கோடூரன் விழித்துக் கொண்டான். இந்தோனேசியா கிளம்புவதற்கு முதல் நாள் இரவு துணிகளோடு துணிகளாய் பெட்டிக்குள் அடக்கம் பெற்றது உங்கள் கைகடிகாரம்.

அடுத்த நாள் காலை நீங்கள் நீங்களாய் இல்லை. உங்கள் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அம்மா கிண்டல் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உங்கள் கண்கள் தொலைந்ததைத் தேடிக் கொண்டிருப்பதை அம்மா பார்க்க வாய்ப்பில்லைதான்.  ஆனால், நான் பார்த்தேன் என்பது உங்களுக்கே தெரியாது.

இந்தோனேசியா வந்ததும் முதல் வேலையாய் உங்கள் கைக்கடிகாரப் பெட்டியைத்தான் திறந்தேன்.  மனத்திற்குள் அப்படியொரு திருப்தி. அதை என் கையில் கட்டிக் கொண்டேன். பெட்டியை மேசை மேல் தூக்கிப் போட்டேன். குட்டிக் காகிதமொன்று வெளியே வந்து விழுந்தது. எடுத்துப் படித்தேன்.

“அன்புடன் சாரதா”

மன்னித்து விடுங்கள் அப்பா. நான் உங்கள் கைக்காரத்தை எடுத்திருக்கக் கூடாது!

 

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

#குறுங்கதை 072 #தலைவன்டா!

 

தன் மானசீக நடிகனின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்காக  என்.யூ. சென்டர் ஜீ.எஸ்.சியில் தன் நண்பனுக்கும் சேர்த்து இரண்டு டிக்கட்டுகளைப்  பதிவு செய்து விட்டதில் கதிருக்கு  அப்படியொரு மகிழ்ச்சி. படத்திற்கான அந்த மூன்று மணி நேர காத்திருப்புக்கூட அவனுக்குத் துன்பமாய் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கெல்லாம் போப் கோர்ன் பெப்சியோடு திரையரங்கிற்குள்  தன் நண்பனோடு ஆஜாரானான் கதிர். திரையரங்கு நிறைந்திருந்தது. தன் தானைத் தலைவன் விஜயின் ஒவ்வொரு அசைவையும் இரசித்து இரசித்துப் பார்த்து விசில் அடித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த பெண், கண்களை உருட்டிப் பார்ப்பதைப் பற்றி அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

“தலைவா! தலைவா!”  கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான். கைகளைத் தட்டி குதூகலித்தான்.

அவனை அடக்கப் பார்த்துத் தோற்றுப் போனான் நண்பன்.  ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விஜய் இரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தில் திரையரங்கே அதிர்ந்துதான் போனது.  தீவிரவாதிகளின் கையில் மாட்டிக்கொண்டவர்களை உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய விஜயை நினைத்து மெய் சிலிர்த்துப் போனான். படத்தின் இறுதி வரை தீவிர இரசிகனாய் உயிர்ப் பெற்றிருந்தான்  கதிர்.

ஹலமிதி ஹபிபொ ஹலமித்திமித்தி  வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமித்திமித்தி வந்தா ஹலமிதி ஹபிபொ

ஹலமித்தி மித்தி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ ஹலமித்தி ஹபிபோ

பாடல் வரிகள் மனத்தில் ஒட்டிக்கொள்ள முணுமுணுத்துக் கொண்டே நண்பனோடு லிப்டில் ஏறிக் கொண்டான்.

“டேய் மச்சான்! விஜய் செம்ம மாஸ்டா. என்னா டான்ஸு... என்னா பைட்டு...  தலைவன்டா... வாழ்ந்தா தலைவன் மாதிரி ஊருக்கு நல்லது செஞ்சி வாழனும். அப்படி இல்லன்னா செத்துப் போயிடனும்!”  உணர்ச்சி பொங்கப் பேசினான்.

“ஆமாண்டா...!” கதிரின் பூரிப்புக்கு உரமேற்றி விட்டான் நண்பன்.  

சளைக்காமல் விஜயின் புராணத்தைச் பாடிக் கொண்டே குமரன்ஸ் சில்க்ஸைத் தாண்டிப் போனவர்களை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது. சொல்லி வைத்தாற்போல இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தனர்.

“தம்பி... ரெண்டு வெள்ளி இருந்தா தரீங்களா... பசிக்குது!” பேசியவரைத் தலை முதல் கால் வரை நோட்டமிட்டான் கதிர். அழுக்குச் சட்டை. பரட்டைத் தலை. குளித்து நாளாகியிருக்க வேண்டும். முகத்தைச் சுளித்துக் கொண்டான்.  

பணப்பையைத் திறந்து பணத்தை எடுக்கப் போனான் நண்பன். தடுத்தான் கதிர்.

“இதெல்லாம் தண்ணீ கேசுடா. காசு கொடுத்தா உடனே தண்ணீ வாங்கிப் போட்டுட்டுத் தமழன் மானத்த வாங்குங்க! நினைச்சாலே வெக்கமா இருக்கு!” தலையில் அடித்துக் கொண்டான்.

மீண்டும் விஜயின் புராணம் தொடங்கியது. பெரியவரின் நினைவு மனத்தை நெருட,  திரும்பிப் பார்த்தான் நண்பன். பெரியவர் குப்பையோடு குப்பையாய் இருந்த உணவுப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...