புதன், 18 மே, 2022

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

 

 


எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொண்ணூற்று ஒன்பது நாள்களில் தொண்ணூற்று ஒன்பது படைப்புகள். தன் இடது கையைக் கிள்ளிப் பார்த்தான். வலித்தது. நடப்பது நிஜம்தான். இலக்கின் இறுதி நாள். அந்த நாளை வரவேற்கக் காத்திருப்பது அவனுக்குச் சுகமாய் இருந்தது.

இதுநாள்வரை எழுதியதைவிட நூறாவது கதையைச் சிறப்பாய் எழுதிவிட வேண்டும். எதை எழுதுவது என்ற முடிவுக்கு வருவதற்கே அவனுக்குப் பல மணி நேரங்கள் தேவைப்பட்டன. மூளைக்குள் கதை உட்கார மறுத்தது. அவன் விடுவதாய் இல்லை. இலக்கு. அது மட்டுமே அவன் முடிவான முடிவாய் இருந்தது.

கதைகளைப் படித்து, குறைகளைச் சுட்டிக்காட்டிய முகம் தெரியா உறவுகளை நினைத்துப் பார்த்தான். மனம் நிறைவாய் இருந்தது. பேனாவெனும் கருவறைக்குள் சின்னதாய்க் உருவாகிய கதைகள் உருபெற்றபோது, பிரசவிக்கும் வலி தெரியாமல் தன் கரம்பற்றி நின்ற அண்ணன் தம்பி உறவுகளை எண்ணி அசைபோட்டான். மனத்தில் இன்ப ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடியது. அதில் மூழ்கியெழுந்தபோது புனித நீராடிய புத்துணர்ச்சி.

கதையெனும் குழந்தையோடு எதிரில் நின்றபோது உச்சி முகர்ந்து ஆசிர்வதித்த நட்புகளின் அன்பிற்கு அவன் அப்படி என்ன தந்துவிட முடியும். யோசித்துப் பார்த்தான். செல்வச் சீமானாய் இருந்திருந்தால் அவர்களுக்கெல்லாம் தங்கக்கிரீடம் சூட்டி அழகு பார்த்திருப்பான். பாவம்! சாதாரண மானிடன். மனத்திற்குள்ளே நன்றி பாராட்டும் விழா நடத்தி இன்புற்றுப் போனான். இலக்கின் எண்ணிக்கையோடு நிறுத்தி விடலாமா! உள்ளுக்குள் விவாத மேடை அரங்கேற்றம் கண்டது. நீதிபதியாய் அவன்.

“எழுது வெற்றிமாறா, எழுது! நிறுத்தி விடாதே! யாருக்காக இல்லாவிட்டாலும் உனக்காக எழுது! உன் ஆத்ம திருப்திக்காக எழுது! ஆசை தீரும்வரை எழுது! ஒரு அடியேனும் பின்வாங்கி விடாதே!” சன்னமாய் ஒரு குரல் உள்ளூர ஒலித்துக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை.

மடிக்கணினியின் முன் அவன். அடுத்த பிரசவத்திற்காகத் தயாராகத் தொடங்கினான். அழைப்பு ஒன்று அவசரமாய் வந்தது. உறவில் ஒன்று விடைபெற்றுக் கொண்டதாம். பூக்களுள் ஒன்று உதிர்ந்து போனதாம். கதையா உறவா? யோசிக்க அவகாசம் தேவைப்படவில்லை அவனுக்கு. மடிக்கணிணி அதன் கூட்டிற்குள் தஞ்சம் புகுந்து கொண்டது தற்காலிகமாக!

திங்கள், 16 மே, 2022

#குறுங்கதை 099 #முப்பது ஆண்டுகள்

 


மகிழ்ச்சி, கவலை, பாராட்டு, தூற்றல், மனநிறைவு, மனவுளைச்சல் எல்லாம் கலவையாய் முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. ஒவ்வொரு மாணவனின்  எண்ணமும் செயற்பாடும் மனோகரன் சாருக்கு அத்துப்படி. அவர்கள் பார்வையை வைத்தே முழு ஜாதகமும் சொல்லி விடுவார்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவம். பல நாட்கள் மகிழ்ச்சியில் மிதந்திருக்கிறார். சில நாட்கள் துன்பத்தில் துவண்டிருக்கிறார். நினைக்கும்போதே பிரமிப்பாய் இருந்தது அவருக்கு.

“ப்பா! அறுபது வயது வரைக்கும் நீங்க வேலை செய்யனும்னு அவசியம் இல்ல. பேசாம ரிதையர் பண்ணுங்க. நாங்க இருக்கோம். உங்க பென்சேன் பணம் இருக்கும். அப்புறம் என்ன கவலை? யோசிக்காதீங்கப்பா!” ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது மூத்த மகள் சொன்னது நியாயமாய்ப் பட்டது.

முப்பது ஆண்டுகளை ஆசிரியர்ப் பணிக்காக அர்ப்பணித்தாகி விட்டது. இனி வரும் காலங்கள் குடும்பத்திற்கு. யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. தீர்க்கமாய் ஒரு நாள் முடிவெடுத்தார் மனோகரன் சார். மனைவிக்கும் இந்த முடிவில் முழுச் சம்மதம்.

“இன்னைக்குப் போயி ரிதையர்மெண்டுக்கு எப்லை பண்ணப்போறேன்மா. நீங்க நெனைச்ச மாதிரி உங்களுக்காக வாழப்போற நேர வந்திடுச்சி!” காலையிலேயே மகளுக்கு அழைத்துச் சொன்னபோது மகள் மகிழ்ந்து போனாள். சின்னவளுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளலாமென முடிவெடுத்தார்.

வழக்கம்போல காலை மணி ஏழுக்கெல்லாம் பள்ளியை அடைந்து விட்டார். நடையில் சிறுபிள்ளையின் குதூகலம் தெரிந்தது. முகத்தில் நிலவின் பொழிவு தெரிந்தது. அலுவலகத்தில் வருகையைப் பதிவு செய்து விட்டு அதே உற்சாகத்தோடு நடைபோட்டார்.

“ஹாய் செக்கு மனோ! நம்பாக் ஹேப்பி ஹரி இனி!” எதிரில் வந்த மாணவர்நல ஆசிரியர் இப்ராஹிம் கேட்டபோது ஒன்றுமில்லையெனச் சிரித்துக் கொண்டே தலையாட்டிக் கொண்டார்.

“செக்கு மனோ! பொலே சக்காப் சிக்கிட் தாக்?” இப்ராஹிமின் தயக்கம் அவரின் சிரிப்பிற்கு  முற்றுப்புள்ளி வைத்தது.

அரை மணி நேரத்தில் இந்திய மாணவர்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு, சவால்கள் குறித்து இப்ராஹிம் பேசத் தொடங்கியபோது மௌனமாய்க் கேட்டுக்கொண்டார் மனோகரன் சார். அவரது மௌனத்திற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள், போராட்டங்கள்.

“ப்பா...! ரிதையர்மெண்ட் எப்லை பண்ணிட்டீங்களாப்பா? ஸ்கூல்ல என்ன சொன்னாங்க? எப்ப ரிதையர் பண்ணுவீங்க?” மதியம் அழைத்த மகளின் கேள்விகளுக்கு மௌனத்தை மட்டுமே பதிலாய்த் தந்தார் மனோகரன் சார். 

ஞாயிறு, 15 மே, 2022

#குறுங்கதை 098 #பூ பூக்கும் நேரம்

 


 

“இன்னும் ரெண்டு வருஷம்தான். காய் காய்க்க ஆரம்பிச்சிடும்ல!” சொல்லும்போதே அவன் கண்கள் ஒளி வீசத் தொடங்கின.

“அது காய்க்கிறப்ப காய்க்கும். அதுக்குள்ள ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்!” சொன்னதும் அவன் முகம் வாடிப் போனது.

“பேரப்பிள்ளைங்களுக்குன்னு நட்டது. அதுங்க வந்தா சந்தோசமா சாப்பிடுங்க இல்லையா?”

“சரிதான், யார் இல்லன்னு சொன்னா? அதுக்குன்னு இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணனுமா?” சலித்துக் கொண்டாள்.

மறுவார்த்தை பேசாமல் மாமரத்தை வருடிக் கொண்டே அப்படியே கீழே உட்கார்ந்துகொண்டான். கையால் குப்பைகளைக் நகர்த்திவிட்டு அவளும் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சின்ன மரம்தான். உச்சி நேரம் வந்தால் இப்படி  உட்கார முடியாது. வெயில் சுட்டெரித்து விடும்.

அவன் அமைதியாய் அவள் தோளில் சாய்ந்துகொண்டான். அவள் மெதுவாய் அவன் முடியைக் கோதி விட்டாள். தனி வீடு. யாரும் பார்க்க வாய்ப்பில்லை. பார்த்தாலும் பயப்படுவதற்கு ஒற்றுமில்லை. அவன் பார்வை முழுக்க மரத்தின்மேல் இருந்தது.

“காய்ச்சிடும்ல அஞ்சல!” ஏக்கமாய்க் கேட்டான்.

“எத்தனை முறை சொல்றது? காய்க்கிற நேரத்தில காய்க்கும்? சும்மா அதப் பத்தியே பேசினா எப்படி?” குரலில் கொஞ்சம் அதட்டல் தெரிந்தது.

அவளை வெறித்துப் பார்த்தான். கண்களில் ஒளி காணாமல் போயிருந்தது.  மிரட்சி, வருத்தம், எதிர்பார்ப்பு, கவலை மட்டுமே குடிகொண்டிருந்தது.  

“சரி, சரி, கவலப்படாதீங்க! சீக்கிரம் காய்ச்சிடும். காய்ச்சதும் பேரப்பிள்ளைங்க வருவாங்க, சாப்பிடுவாங்க. உங்க தாத்தா நட்ட மரம்னு நான் பெருமையா சொல்லுவேன். இப்ப சந்தோசம்தான?” குழந்தைபோல முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள். அடுத்த கணம்  அவன் கண்கள் உயிர்ப் பெற்றன.

“அஞ்சல, நாளைக்கு பூ உரம், காய் உரம் எல்லாம் வாங்கிடலாம். என்கூட வரயா! அதப் போட்டா சீக்கிரம் பூ பூக்குமாம். சீக்கிரம் பூ பூத்தா சீக்கிரம் காய் காய்க்கும் இல்லையா!” அவள் கைகளை இறுக்கமாய்ப் பற்றிக்கொண்டு உற்சாகமாய்ப் பேசியவன் முகத்தைப் பார்த்தாள்.

“சரி வரேன்!” அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

கருவோடு கருகிப்போன மகளை அவள் நினைவுபடுத்த விரும்பவில்லை.

சனி, 14 மே, 2022

#குறுங்கதை 097 #போகாதே!

 


நிமிடத்திற்கு நிமிடம் காரின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பின்னால் அமர்ந்திருக்கும் என்னுடைய பயம் அவளுக்குப் புரியவில்லை. அவள் தோள்பட்டையைப் பிடித்து அழுத்துகிறேன். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. மூச்சுத் திணறுகிறது. கண்ணாடியைத் திறந்து விடுகிறேன். விரித்துவிடப்பட்ட முடி கட்டுப்பாடின்றி பறக்கிறது. கையால் இழுத்துப் பிடித்துக் கொள்கிறேன். காற்று முகத்தில் வேகமாய் அடித்துச் செல்ல மூச்சுத் திணறல் அதிகமாகிறது. சட்டெனக் கண்ணாடியைச் சாத்துகிறேன்.

“ஏய்! உனக்குப் பைத்தியமா? இப்படியே போனா செத்திடுவோம்!” கத்துகிறேன். வேகத்தை மேலும் அதிகரிக்கிறாள். சாலையில் வாகனங்கள் அதிகமில்லாதது நல்லதாய்ப் போயிற்று.

“காடிய நிறுத்து! இல்ல...” அலறுகிறேன். சத்தமாய்ச் சிரிக்கிறாள்.

வேகம் நூற்று நாற்பதைத் தொட உடம்பெல்லாம் உதறத் தொடங்குகிறது.

“நான் சாக விரும்பல. தயவு செஞ்சி காடிய நிப்பாட்டு!” அவளிடம் உயிர்ப்பிச்சை கேட்கிறேன். அவள் தர மறுக்கிறாள்.

என் உறவுகளின் முகங்கள் ஒவ்வொன்றாய் கண்முன்னே மின்னல் வேகத்தில் வந்து செல்கின்றன. கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். நான் இறந்துவிட்டால் இவர்கள் நிலை? நினைத்துப் பார்க்கத் தைரியம் இல்லை.  நெஞ்சு படபடக்கிறது. தடவிவிட்டுக் கொள்கிறேன்.

“சொல்றத கேளு, ப்லீஸ்!” அவளைப் பலமாய் உலுக்குகிறேன். அவளின் சிரிப்புச் சத்தம் அதிகமாகிறது.

வேகம் நூற்றைம்பதை நெருங்குகிறது. அவள் இருக்கையை இரு கைகளால் இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்கிறேன். கைநடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இனியும் முடியாது. பயத்தில் அவள் கைகளைப் பிடித்து இழுக்கிறேன். கார் அசூர வேகத்தில் பறக்கிறது. அவள் பயங்கர சிரிப்பு என்னைப் அச்சுறுத்துகிறது.

அடுத்து நடக்கவிருப்பதை ஊகிப்பதற்குள் பேரிடி சத்தத்தோடு கார் எதையோ மோதி நிற்கிறது. அதிர்ச்சியில் கண்களை மூடிக்கொள்கிறேன். சில நொடிகளில் மெதுவாய்க் கண்களைத் திறக்கிறேன்.

அவள் உடல் ஸ்டேரிங்கில் சாய்ந்து கிடக்கிறது. தலையில் தொடங்கி உடலெல்லாம் இரத்தம். என் பார்வை மங்குகிறது. குமட்டிக்கொண்டு வருகிறது. தலையைப் பிடித்துக் கொள்கிறேன்.

“யாராவது இருங்கீங்களா! ப்லீஸ், வாங்களேன்!” அலறிக் கொண்டே வெகுதூரம் உதவி தேடி ஓடுகிறேன். யாரும் கண்ணில் தென்படவில்லை.

அவளைக் காப்பாற்ற வேண்டும். மனம் துடிக்கிறது. மீண்டும் அவளை நோக்கி ஓடி வருகிறேன்.  

“சொன்னனே கேட்டியா! அநியாயமா செத்துப் போயிட்டீயே!” அவள் முகத்தைத் தொட்டுத் திருப்புகிறேன். அவள் முகத்தில் என்னைக் காண்கிறேன்.

வெள்ளி, 13 மே, 2022

#குறுங்கதை 096 #யாரெனத் தெரிகிறதா?

 


முப்பது பேருக்கும் மறக்காமல் காலை வணக்கத்தை அனுப்பினால்தான் அன்றைய பொழுது நன்றாய் விடிவதாய் ஒரு நம்பிக்கை. ஐந்து பத்து நிமிட வேலைதான். இரண்டே வரிகளை யோசிக்க அதிக நேரம் தேவைப்பட்டதில்லை. அவசர உலகத்தில் இரண்டு வரிகளே அதிகமாகத் தோன்றியது.

இன்றும் அந்த வேலையை முடித்து விட்டதில் பரம திருப்தி. மெத்தையை விட்டு எழுந்தேன். புதிய எண்ணிலிருந்து புலனச் செய்தி என்னைத் தடுத்து நிறுத்தியது. யாராக இருக்கும்? அந்த எண்ணை இதற்குமுன் பார்த்தாக நினைவில்லை. யோசித்ததில் தலை வலி வந்ததுதான் மிச்சம்.

“உங்கள ரொம்ப நாளா தெரியும். ஆனா, நேராப் பார்த்துப் பேச வாய்ப்புக் கிடைச்சதில்ல”

படித்ததும் உள்ளுக்குள் பூரிப்பு. பெண்ணாய் இருக்குமோ? மனம் அலை பாய்ந்தது.

“நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” கேள்வியை உடனே தட்டச்சுச் செய்தேன்.

“இப்ப என்ன அவசரம்! ஆனா, ஒன்னு நிச்சயம். என்ன(னை) உங்களால மறக்க முடியாது!”

அடுத்த நொடியே பதில் வந்ததும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அதுக்கு வாய்ப்பே இல்ல!” உறுதியாய்ச் சொன்னேன்.

“பார்க்கலாம்!” அடுத்த முனையில் அதே உறுதி.

     சில நொடிப்பொழுதில் கற்பனை உலகில் நான். நீண்ட முடி, என் தோள்பட்டை அளவு உயரம், தெற்றுப் பல், கன்னத்தில் குழி. அவள் யாரென அறிய மனம் ஆளாய்ப் பறந்தது. நண்பர்கள் வேலையாக இருக்குமோ எனச் சந்தேகம் வராமல் இல்லை. ஆனால், அவர்கள் கைப்பேசி எண்ணெல்லாம் எனக்கு அத்துப்படி. தங்கை விளையாடுகிறாளோ! அந்த அளவிற்கு அவளுக்குத் தைரியம் இல்லை.

      “என்ன மிஸ்டர் மதன். ஆழமான சிந்தனையா? இவ்வளவு நேரம் கூப்பிடறேன். பதில் இல்ல!” அலுவலகத்தில் சக ஊழியர் சீண்டியபோது அவமானமாய் இருந்தது. அவள் என்னை ஏதோ செய்கிறாள்.

      “இன்னைக்கு எல்லாம் என்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா?” இரவு மீண்டும் அந்தப் புதிய எண்ணிலிருந்து  இதய அடையாளத்துடன் குட்டிக் கேள்வி.

“இல்லையே!” என்றேன்.

“அப்படின்னா, இதுக்குமேல என் மேசேஜ் உங்களுக்கு வராது!” முன்னறிவிப்போடு விடைபெற்றுக் கொண்டாள்.

“பைத்தியம்!” ஏமாற்றத்தில் சத்தமாய்க் கத்தினேன்.

“யாருங்க?” சோற்றுத் தட்டோடு பிள்ளையுடன் போராடிக் கொண்டிருந்த மனைவி அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.

வியாழன், 12 மே, 2022

#குறுங்கதை 095 #செல்லமே செல்லம்...

 


“தாத்தாவுக்கு ரொம்ப முடியலையாம்! சீக்கிரம் கிளம்பு!” அவசரப்படுத்திய அம்மாவைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தில் கலவரம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

“ம்மா... நாளைக்குப் போலாமா? ஸ்கூல் பாடம் இருக்கு!” சொல்லிக்கொண்டே என் அறைக்குள் நுழைந்து கொண்டேன்.

“என்னடா பேசற? தாத்தாவுக்கு முடியலன்னு சொல்றேன், நீ என்னடான்னா காரணம் சொல்ற!” அறைக்கதவிற்கிடையே தலையை விட்டுக் கோபமாய் எட்டிப் பார்த்தார் அம்மா. முதன்முறையாய் என்னைக் கோபித்துக் கொண்ட அம்மாவை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.

தாத்தாவின் செல்லமகள்தான் அம்மா.  பாட்டியின் முகம் பார்த்ததில்லையாம். செல்லமாக வளர்ந்ததை அம்மா பெருமையாய்ப் பேசிய தருணங்கள் பல. அப்படிப் பேசும்போதெல்லாம் அப்பா ஓரக்கண்ணால் சாடை காட்டத் தொடங்கி விடுவார். முகத்தைக் கோணலாக்கி அப்பா செய்யும் சேட்டைகள் இரசிக்கும்படியாக இருக்கும். அப்பாவின் கோணல் முகத்தைப் பார்த்துச் சத்தமாய்ச் சிரித்து அப்பாவைப் பலமுறை  காட்டிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவுக்கு அர்ச்சனைகள் ஆரம்பித்து விடும். நல்ல பிள்ளையாய் அறைக்குள் புகுந்து கொள்வேன்.

“என்ன(னை)ப் பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் கிண்டலாக இருக்குல!” குழந்தைபோல அழத்தொடங்கும் அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா எத்தனையோ முறை போராடியிருக்கிறார். பலமுறை தோற்றுப் போயிருக்கிறார். என் ஒரு முத்தம் மட்டுமே அதற்கான அருமருந்து என வளர வளரத் தெரிந்துகொண்டேன்.

“சீக்கிரம் கிளம்புடா! அப்பா வர வரைக்கும் காத்திருக்க முடியாது!” மெத்தை மேல் மல்லாக்காய்ப் படுத்திருந்த என்னை அவசரமாய்த் தட்டி எழுப்பிய அம்மாவைக் கோபித்துக்கொள்ள மனம் வரவில்லை. ஆனால், வர முடியாது என்பதை எப்படிச் சொல்வது? பாடங்களை இன்றே செய்து அனுப்பியாக வேண்டும். இல்லையென்றால் வார்த்தையால் வறுத்தெடுத்து விடுவார் கணித ஆசிரியர்.

மெத்தையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன். புத்தகங்களைப் பரப்பி வைத்தேன். முதலில் கணிதப் பாடம். மற்றதைப் பிறகு செய்துகொள்ளலமென முடிவெடுத்தேன். இடையிடையே அம்மாவின் குரல் கேட்காமல் ஏதோ போல இருக்க கூப்பிட்டுப் பார்த்தேன் பதிலில்லை. வீடெல்லாம் தேடினேன். காணவில்லை.

“ம்மா...! எங்கம்மா போனீங்க!” உதடுகள் துடித்தன. காரணமே இல்லாமல் கைகள் நடுங்கின. பயம் தொற்றிக் கொண்டது. மீண்டும் படுக்கையறை ஒவ்வொன்றாய்ச் சென்று பார்த்தேன். இல்லை.  சமையலறையிலும் இல்லை. குளியலறையில் ஏதும் மயங்கி விழுந்திருப்பாரோ! மூளை விபரீதமாய் யோசிக்க ஆரம்பித்தது. அப்படியேதும் இல்லை என்றபோது பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாய் நன்றி சொல்லிக்கொண்டேன்.

“நான் ரெடியாயிட்டேன். சீக்கிரம் கிளம்புடா” சொல்லிக்கொண்டே பூசையறையிலிருந்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மனம் லேசானது. படபடப்புத் தானாய் அடங்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் டீ-சர்ட் ஒன்றை மாட்டிக்கொண்டு கிளம்பினேன். 

புதன், 11 மே, 2022

#குறுங்கதை 094 #ஊனம்

 

பிரிக்பீல்ட்ஸில் புடவைக்கடைகளையெல்லாம் ஒரு சுற்று வந்தாகிவிட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒரு கடைதான். அழகு மனைவியின் ஆசையைப் பூர்த்திச் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் தொற்றிக்கொள்ள, மனத்தில் சின்னதாய் ஒரு நெருடல். அவள் விரும்பிய அந்த ஐந்நூறு வெள்ளிப் புடவையை எப்படியாவது வாங்கிக்கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

வயிறு சத்தம் போட ஶ்ரீ பாண்டி உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வேட்டையைத் தொடர முடிவெடுத்தேன். உணவகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  காத்திருக்கும் பொறுமையில்லை. அங்கிருந்து நகரவும் மனமில்லை. எனக்குப் பின்னால் கையில்  நீண்ட குச்சிகளுடன் ஆணும் பெண்ணுமாக இருவர். கருப்புக் கண்ணாடி அவர்கள் யாரென அடையாளம் காட்டியது. பெண்ணின் தோளில் கருப்புப் பை.

“அண்ணே! பிள்ளைங்க விளையாட்டுச் சாமான் விக்கிறோம். ஒன்னு வாங்கிக்கோங்கண்ணே”

தொந்தரவு செய்தவளை முறைத்துப் பார்த்தேன்.

“வேணாங்க!” ஒன்றை வரியில் முடித்துக் கொண்டேன்.

அந்தக் கருப்புப்பை கனத்திருக்க வேண்டும். பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டுத் தோள்பட்டையை வலது கையால் பிடித்து விட்டுக் கொண்டாள் அவள்.

அவர்களுக்கும் பின்னால் வரிசை நீண்டுகொண்டு போனது. எப்படியோ ஐந்தாறு பேர்  கடையிலிருந்து வெளியேற, என்னோடு சேர்த்து இன்னும் சிலருக்கும் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. சாப்பிட்டுவிட்டுப் புடவை வேட்டையைத் தொடங்கிவிட வேண்டுமென்பதில் மனம் பிடிவாதமாய் இருந்தது.

“சுமதி, எவ்வளவு நேரம் கேக்கிறன். உனக்கு என்ன வேணும் சொல்லு. வாங்கித் தறேன்” குரல் வந்த திசைக்கு என் பார்வையைத் திருப்பினேன். அதே ஜோடிகள்தான்.

“நான்தான் சொல்றேன்ல. தேவையில்லாம செலவு பண்ண வேண்டாம். இருக்கிறது போதும்!”   தீர்க்கமாய்ச் சொன்னாள் அவள்.

“பொறந்தநாளுக்கு ஆசையா ஏதாவது வாங்கிக்கொடுக்கலாம்னா,  ஒத்து வர மாட்டுறீயே!” சலித்துக்கொண்டான் அவன்.

“இந்தப் பொருளெல்லாம் வித்தாதான் காசு. காலையிலேர்ந்து பத்து பொருள்கூட விக்க முடியல! சொந்தமா உழைச்சி வாழனும்னு நெனைக்கிறோம். ஆனா, கருண காட்ட ஆளில்ல!” வேதனையின் அறிகுறிகள் அவள் வார்த்தைகளில் அப்பட்டமாய்த் தெரிந்தன.

“கண்ணில்லாத நாமதான் ஊனமின்னு நினைக்கிறீயா? இந்த உலகத்துல இதயமே இல்லாம எத்தனையோ பேரு ஊனமா இருக்காங்க!” அவன் வார்த்தைகள் நெஞ்சைத் தைத்தன.

“நம்மலவிட அவங்கதான் ரொம்ப பாவம்ல!” முகத்தைப் பரிதாபமாய் வைத்துக் கொண்டு உச்சுக் கொட்டியவளைப் பார்த்தேன்.

பசி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

செவ்வாய், 10 மே, 2022

#குறுங்கதை 093 #சுனாமி

 



“வேண்டான்டா செல்வம். தயவு செஞ்சு பேசாம போயிடு. இல்ல... நடக்கிறதே வேற!”

பிரதாப்பின் கோபம் தலைக்கேற சொற்கள் தீப்பிழம்பாய் வந்து கொட்டின.

“போக மாட்டேன்டா! என்னடா பண்ணுவே?” திமிறிக்கொண்டு வந்தான் செல்வம். 

“உன்னையெல்லாம் கூட்டாளின்னு சொல்லவே வெக்கமா இருக்குடா! போதும்டா! இதுக்கு மேல நீ இருக்கிற பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்! இவ்வளவு நாளு நல்லவன் மாதிரி வேசம் போட்டு என் குடும்பத்த கலைச்சிட்டலே. நீ நல்லா இருக்க மாட்டடா! கடவுள் இருக்கிறது உண்மைனா, நீ வாழப்போற மோசமான வாழக்கையைக் கண்குளிர பாத்திட்டுதான்டா நான் செத்துப் போவேன்!” அண்ணனின் வார்த்தைகள் சாபமாய் உருவெடுக்க மிரண்டு போனாள் தங்கை அபிராமி.

“யார் படுக்கச் சொன்னா! படுக்காத!” செல்வத்தின் அலட்சியம் கோபத்தீயை மேலும் கிளறிவிட ஆக்ரோசமாய்க் கைகளை ஓங்கினான் பிரதாப்.

“தைரியம் இருந்தா அடிடா!” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தவனைத் தடுத்து நிறுத்தினாள் அபிராமி.

“எங்களாலதான இவ்வளவு பிரச்சனை. நாங்க போறோம். நீ மட்டும் சந்தோசமா இருண்ணே!” இமைகளெனும் அணையை உடைத்துக்கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருந்த அண்ணனைச் சமாதானப்படுத்தும் முயற்சியை உடனடியாகக் கைவிட்டாள். செல்வத்தின் மோட்டாரில் ஏறிக்கொண்டாள். அண்ணன் ஒருமுறையாவது தன்னைப் பார்த்து விடமாட்டானா, தடுத்து நிறுத்தி சம்மதம் சொல்ல மாட்டானா என ஏங்கித் தவித்தது அவள் உள்ளம்.

பிரதாப்பின் மனத்தில் சுனாமிப் பேரலை. கொந்தளிப்புத் தாங்காமல் நொந்து போனான் அவன்.  நண்பனின் துரோகத்தைக் கண்ணெதிரே கண்டு நிலைத்தடுமாறிப் போனான்.

“நீங்க நல்லா இருக்க மாட்டீங்க!” வாய்க்குள்ளே முணுமுணுக்கத் தொடங்கினான். அவர்கள் மேலான கோபம் அடங்குவதாய் இல்லை. கைப்பேசியை எடுத்தான். கொஞ்ச நஞ்ச கோபத்தையும் கொட்டிவிட மனம் ஆவேசம் கொண்டது. செல்வத்தின் எண்களை அழுத்தினான். கோபத்தில் கைகள் நடுங்குவதை அவனால் தடுக்க முடியவில்லை. கைப்பேசி நழுவாமல் இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டான். செல்வம் அழைப்பை எடுப்பதாய்த் தெரியவில்லை. அவனை அப்படியே விட்டுவிட பிரதாப்பின் மனம் இடம் தரவில்லை. அவன் விரல்கள் எண்களைத் தட்டித் தட்டி அலுத்துப் போயின.

மூளை பரபரத்தது. புலனச் செய்தி அவன் கோபத்தைக் கொண்டு சேர்க்கும் என முழுமையாய் நம்பினான். குரல் பதிவில் எஞ்சியிருந்த கோபத்தையும் கொட்டித் தீர்த்தான். நீலக்கோடுகள் அவன் செய்தி போய்ச் சேர்ந்ததைக் காட்டின. உள்ளூர ஒரு திருப்தி. இருப்பினும், பதில் குரல் பதிவு வராதது ஏமாற்றத்தைத் தந்தது. மீண்டும் அவனை  அழைத்து மனம் ஆறும்வரை  திட்டித் தீர்க்க முடிவெடுத்தான். அழைத்தான். ‘நீங்கள் அழைத்த எண் பயன்பாட்டில் இல்லை’ என்ற செய்தி மட்டும் வந்தது.

அடுத்து வரப் போகும் செய்தி அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போடப் போகிறது என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திங்கள், 9 மே, 2022

#குறுங்கதை 092 #கருணை காட்டுங்கள்

 


வாழ்க்கையில் எவ்வளவு அசிங்கப்பட வேண்டுமோ அவ்வளவும் அசிங்கப்பட்டாகி விட்டது. இதற்கு மேல் அசிங்கப்படுவதுற்கும் அவமானப்படுவதற்கும் ஒன்றுமில்லை. என் மேல் விழும் ஒவ்வொரு பார்வையிலும் வெறுப்பின் நிழலைப் பார்த்து எத்தனையோ முறை வேதனையால் தலை கவிழ்ந்திருக்கிறேன். ஆனால், ஒரு போதும் நம்பிக்கையிழந்தது கிடையாது.

எத்தனையோ முறை கரிசனம் இல்லாமல் காரி உமிழ்ந்தவர்கள் மீது கோப்படுவதற்குப் பதிலாகப் பரிதாபப்பட்டிருக்கிறேன், என் பிறப்பு இழிபிறப்பாகி விட்டதால் ஏற்றுக்கொண்டுதான் போக வேண்டுமென என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்று மனிதர்களின் அராஜகத்தை ஜீரணிக்க முடியாமல் உடைந்து போயிருக்கிறேன். உடலெல்லாம் கூசுகிறது. இரத்தக் கறை படிந்த என்னை எனக்கே பிடிக்காமல் போகிறது. இரத்தத்தின் வாடை குமட்டலை உண்டுபண்ணுகிறது.

“இறைவா! எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்!” சத்தமாய்க் கத்துகிறேன். என் கதறலைப் பொருட்படுத்துவார் யாருமில்லை.

என் மடியில் இரத்தக்கறையுடன் இருப்பவளையாவது காப்பாற்றுங்கள், அவள் செய்த பாவமென்ன!  யாராவது வாருங்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! கொடூரன் ஒருவன் எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறான்! பல வேளைகளில் கருணையே இல்லாமல் என்னைச் சின்னாபின்னமாக்கியவன். இன்று மட்டும் எப்படி விட்டு வைத்து விடப் போகிறான்.

தனியொருத்தியாய் நான் என்ன செய்து விட முடியும். என்னைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும்போது இவளை எப்படி நான் காப்பாற்றப் போகிறேன்? இதோ அவன் எங்களை நெருங்கி விட்டான். இம்முறை அவன் தேவை நானல்ல என்பது தெளிவாய்த் தெரிகிறது. என் மடியில் இருப்பவளை அனுபவிக்க வெறி கொண்ட பார்வையோடு வருகிறான். அந்தப் பார்வையில் எத்துணைக் கோடுரம்!  

அவளை வெறித்தனமாய் முகர்ந்து பார்க்கிறான். இரத்த வாடை பிடித்திருக்க வேண்டும். அவளைப் பதம் பார்க்கத் தொடங்கி விட்டான். பிஞ்சு கைகளைக் கருணையின்றி பிய்த்தெடுக்கிறான். அடுத்து அவள் தலைக்குக் குறி வைக்கிறான். இனியும் இக்கொடூரத்தைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை.

“ஈன்றெடுத்த அடுத்த நொடி என்னிடம் விட்டுச் சென்றவளைத் தண்டிக்காமல், இந்தப் பச்சிளங்குழந்தையைத் தண்டிப்பது எந்த வகையில் நியாயம்!” என் கேள்வி யார் காதுகளிலாவது விழுகிறதா?

ஞாயிறு, 8 மே, 2022

குறுங்கதை 091 #அன்புள்ள அம்மா

 

காலை எழுந்தவுடன் நினைத்தது போலவே மகள் ஜானு அணிச்சலோடு வரவேற்பறையில் தயாராக இருக்க, மாடியிலிருந்து இறங்கி வருகிறாள் மஞ்சு. அவள் கடைசிப் படியில் காலடி எடுத்து வைக்கும்போது அம்மா பாடல் ஒலியேற மகள் கைகளைப் பிடித்து அவளை வரவேற்பறை நடுவில் கொண்டு வந்து நிறுத்துகிறாள்.   மலர் மழை பொழிகிறது. மஞ்சு அணிச்சலை வெட்ட கத்தி ஆரவாரம் செய்கிறாள் ஜானு. சத்தம் தாங்காமல் காதுகளைப் பொத்தி கண்களை இறுக மூடுகிறாள் மஞ்சு.

மீண்டும் கண்களைத் திறந்து பார்க்கிறாள். வரவேற்பறையில் ஜானு இல்லை. அணிச்சல் இல்லை. அம்மா பாடல் இல்லை. இருள் மட்டுமே சூழ்ந்திருந்தது. அந்த இருட்டு அவளுக்குள் பயத்தை உண்டு பண்ணியது. அவசரமாய்ச் சென்று கதவுகளைத் திறந்து விட்டாள். மூச்சை நீளமாய் இழுத்து விட்டாள்.

“ம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்!” அன்னையர் தினத்திற்கு முதல் மகள் சொன்னபோது விபரீதம் புரியாமல் தலையை ஆட்டிக் கொண்டாள் மஞ்சு.

“ம்மா... நான் ஒருத்தர காதல் பண்றேன். அவர கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க!” தலைமேல் பெரும் பாரத்தைத் தூக்கி வைத்துவிட்டுச் சுவரோரம் சாய்ந்து கொண்டாள் ஜானு.

“ஜானு, என்ன பேசற! காதல் கத்திரிக்கான்னு. தனியாளா உன்ன வளக்க என்ன பாடு பட்டிருப்பேன். உனக்குத் தெரியாதா என்ன?” மஞ்சுவின் குரல் உயர்ந்தது.

“எனக்குப் பிடிச்சிருக்கும்மா. அவ்வளவுதான்!” குரலின் அழுத்தம் மஞ்சுவை நடுங்கச் செய்தது.

“முடியாது ஜானு! இந்த வீட்டில காதலுக்கு இடம் இல்ல. உங்கப்பாவ காதல் பண்ணி நான் ஏமாந்தது போதும். எல்லாத்தையும் மறந்திட்டு ஒழுங்கா இரு!” எச்சரித்தாள் மஞ்சு.

“சரிம்மா. இனி பேசி புண்ணியம் இல்ல. நான் கிளம்பறேன்!” மகள் நினைத்தைச் சாதித்துக் கொண்டாள்.

“ஒரு அம்மாவோட மனசு புரியாம நீ நடந்துக்கிறது சரியில்ல ஜானு! உன்ன பொத்திப் பொத்தி வளத்தேன் ஜானு. மறந்திடாத! என்ன அனாதையா விட்டுட்டுப் போகாத! பிளீஸ்!” மஞ்சுவின் கதறல் அவள் இரும்பு மனதைக் கரைக்கவில்லை. மஞ்சு அவள் மகிழ்ச்சியைத் தொலைத்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. மானம் இழந்து மரியாதை இழந்து உறவுகளின் கேலிக்கு ஆளாகி படாதபாடு விட்டாள்.

வீட்டு வாசல்மணி அடிக்கிறது. கண்களைத் துடைத்துக் கொண்டாள் மஞ்சு. கதவைத் திறந்தாள். குடும்பம் தலை குனிய காரணமானவள் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள்.

“ஒரு குழந்தைக்கு அம்மாவா, உங்க மனச புரிஞ்சிகிட்டு வந்திருக்கேன்மா. என்ன(னை) மன்னிக்க மாட்டீங்களா?"

அடுத்த கணம் மஞ்சுவின் அணைப்பில் ஜானு. ஜானுவின் அணைப்பில் அவள் குழந்தை. அதற்கு மேல் வார்த்தைகளுக்கு இடமில்லாமல் போனது.

சனி, 7 மே, 2022

#குறுங்கதை 090 #அம்மாவின் நாசி லெமாக்

 


“ம்மா... பிள்ளைங்க எல்லாம் நாசி லெமாக் சாப்பிடனும்னு ஆசப்படுறாங்க. எப்படிம்மா? காலையில செய்ய முடியுமா?” மகனின் ஆசை, வார்த்தைகளில் மட்டுமல்ல கண்களிலும் தெரிந்தது.

“செஞ்சிடலாம் ஐயா!’

“ம்மா! நாளைக்கு ரொம்ப ஜேம்மா இருக்கும். காலையில எட்டு மணிக்கெல்லாம் கெளம்பினாதான் சரியா இருக்கும். நீங்க எத்தனை மணிக்கு எழுந்து செய்வீங்க? கஷ்டமா இருந்தா பரவாலம்மா!” மகனின் கவலை புரிந்தது.

“கவலப்படாத ஐயா. அம்மா செஞ்சிடுவேன்!”

முதல் நாள் இரவே மிளகாய்ச்சாந்து தயாராகி விட்டது. காலையில் அரைத்துப் பிள்ளைகளின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பவில்லை கனிமொழி. சம்பாலுக்கான வெங்காயங்களைத் தோல் உரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொண்டாள். கணவன் எத்தனையோ முறை படுக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவள் கேட்டபாடில்லை. நிலக்கடலையைப் பொரித்துப் போத்தலில் போட்டு வைத்து விட்டாள். வெள்ளரிக்காய் வெட்டுவது பெரிய வேலையில்லை. காலையில் பார்த்துக்கொள்ளலாம். முட்டையைப் பத்து நிமிடங்களில் அவித்துத் தோல் நீக்கி விடலாம். எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள்.

இரவெல்லாம் மகன் கேட்ட நாசி லேமாக் அவளைத் தூங்க விடாமல் செய்தது. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு வந்திருக்கிறான். அவனுக்கு விருப்பமானதைச் செய்து கொடுத்து அசத்திவிட வேண்டும். கனிமொழியின் மனம் தீர்க்கமாய் முடிவெடுத்தது.

விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் விடைபெற்றுக்கொள்ள எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.

“கனி! பேசாம படுக்கிறீயா! இத்தனை காலையில எழுந்து என்ன பண்ணப் போற? பிள்ளைங்க தூங்குதுங்க! சட்டி பானைய உருட்டி எழுப்பிடாத!” தூக்கக் கலக்கத்திலும் தெளிவாய்ப் பேசினான் கணவன்.

ஒரு அடுப்பில் முட்டை, மற்றொரு அடுப்பில் சம்பால், கூக்கரில் சோறு. நாசி லேமாக் செய்யும் வேலையில் மூழ்கிப்போனாள் கனிமொழி.  மணக்க மணக்க நாசிலேமாக் சுவையான சம்பாலோடு தயாரானது. இவள் வேலையை முடிப்பதற்கும் மகன் எழுந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

“ஏம்மா! எட்டு மணிக்கெல்லாம் கெளம்பனும்னு சொன்னேன். ஏன் எழுப்பி விடல?” முகத்தைச் சுளித்தான் மகன். அடுத்த சில நிமிடங்கள் வீடே அல்லோலங்கலப்பட்டுப் போனது. அரை மணி நேரத்திற்குள் மகன் குடும்பம் விடைபெறத் தயாரானது.

“ஐயா, நாசி லெமாக் சாப்பிடாமயே போறீங்களே!” கனிமொழி குரலில் ஏமாற்றம் தெரிந்தது.

“பரவாலம்மா... மணி ஆச்சி கிளம்பறோம்!”

மனமில்லாமல் கையசைத்து வழியனுப்பினாள். சோபாவில் அமர்ந்திருந்த கணவன் மேல் சாய்ந்துகொண்டாள். இமைகள் கனத்து மூடிக் கொண்டன. கண்ணீர், கணவனின் தோள்பட்டையை நனைத்தது.

“பாட்டி... கதவ திறங்க. எங்களுக்குப் பசிக்குது... நாசி லெமாக் வேணும்!” கதவைத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்த பேரப்பிள்ளைகளை ஓடிச் சென்று கட்டி அணைத்துக்கொண்டாள் கனிமொழி.

வெள்ளி, 6 மே, 2022

#குறுங்கதை 089 அவன் வருவானா?

 



மூச்சு முட்டச் செய்யும் பெட்டிக்குள் இருப்பது எத்துணைத் துன்பம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எனக்கும் இன்றுதான் தெரிகிறது. என்னைச் சுற்றி உறவுகள் கண்ணீரைச் சிந்துவதும் மூக்கைச் சிந்துவதும் சங்கடமாய்த்தான் இருக்கிறது. பெரியசாமி பெரியப்பாவின் குரல் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களாய் லொக் லொக்கென்று இரும்மிக் கொண்டிருந்தவர் இன்று துருதுருவெனக் இயங்கிக் கொண்டிருப்பது  ஆச்சரியத்தைத் தருகிறது.

“பெரியப்பா, நீங்கதான் ஏதாவது பண்ணனும். ப்லீஸ் பெரியப்பா!” துக்கத்தை அடக்க முடியாமல் கதறுகிறாள் சத்தியா.

“நீ கவலப்படாதடா செல்லம். பெரியப்பா இருக்கேன்!” பெரியப்பாவின் ஆறுதல் வார்த்தைகள் இதமாய் ஒலிக்கின்றன.

நானில்லாத வாழ்க்கையைச் சத்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மையை உணரும்போது  உள்ளத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. ஆனால், அவள் அழுகை துன்பத்தை அல்லவா தருகிறது. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை நினைத்தாலே கோபம் கோபமாய் வருகிறது.

“பஞ்சு! எங்கடா இருக்கே!” சத்தியாவின் குரல் என்னைப் பலவீனப்படுத்துகிறது.

“ஹலோ! நான் இங்கதான் இருக்கேன். பத்தடி பின்னால வந்து பாத்தா எல்லாப் பிரச்சனையும் தீர்ந்திடும் சத்தியா! ”

புரியாதவர்களிடத்தில் என்ன பேசி என்ன பயன்? மனம் நொந்து கொள்கிறது. நேரமாக ஆக அழுகைச் சத்தம் குறையத் தொடங்குகிறது.  இவ்வளவுதானா வாழ்க்கை என்றிருந்தது. பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனிதன் எவ்வளவு சீக்கிரம் பழகிக் கொள்கிறான்! நினைக்க நினைக்க எனக்கு வியப்பாக இருக்கிறது.

“சரி இப்படியே இருந்தா எப்படி? எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். போயி எல்லாம் நடக்க வேண்டியத பாருங்க!” பெரியப்பாவின் தோரணை எனக்கே நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது. அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் போலும். அழுகைச் சத்தம் போன இடம் தெரியவில்லை.

இனியும் இப்படியே இருந்தால் என்னை இந்தக் குடும்பமே மறந்துவிடும் என்ற பயம் தொற்றிக் கொள்கிறது. பெட்டியை உதைக்கிறேன். தலையால் மோதிப் பார்க்கிறேன். முடியவில்லை. இப்படியே மூச்சு முட்டிச் செத்து விட்டால், சத்தியாவின்  நிலை?

என் வாழ்க்கையை நாசப்படுத்தியவன் மனது வைத்தாலொழிய என்னை யாராலும் காப்பாற்ற முடியாது. என் இறகுகளைப் பிடித்து இந்தப் பெட்டிக்குள் போட்டவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அவன் வருவானா?

வியாழன், 5 மே, 2022

#குறுங்கதை 088 #உலக மகா நடிப்புடா சாமி!

 

 

“டேய் மச்சான்! அவன் என்னடா,  நம்மள பாக்காத மாதிரியே போறான்!” அலுத்துக் கொண்டான் சரத் என்கிற சரத்குமார். 

“விடுடா, அவன பத்தி உனக்குத் தெரியாதா! காரியம் நடக்கனும்னா கால பிடிப்பான். இல்லன்னா கழுத்த நெறிப்பான்!” சமாதானப்படுத்த முயன்றான் கதிர்.

“அதுக்கு இல்லடா, நேத்துகூட அவசரமா இருநூறு வெள்ளி வேணும்னு போன் அடிச்சி தொல்ல பண்ணான்டா! நானும் பாவம்னு கொடுத்தேன். இன்னைக்கு என்னடான்னா... நன்றி கெட்டவன்! தெரியாத மாதிரி நடந்துக்கிறான்!“

“சரி, அவனப் பத்தி பேசினா டென்ஷன்தான் ஆகும். வா, போயி பேங்க்ல காச எடுத்திட்டுக் கிளம்புவோம்!” சரத்தின் கவனத்தைத் திசை திருப்பப் பார்த்தான் கதிர். ஆனால், மிஞ்சியது என்னமோ தோல்விதான்.

“கொஞ்சம் இங்கயே நில்லுடா. அவன்கிட்ட என்னன்னு கேட்டிட்டு வந்திடுறேன்!” பதில் மொழிக்காகக் காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை.

கவுண்டரில் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருந்தவனை முதுகுப் புறத்தில் தட்டினான். அவன் பயந்திருக்க வேண்டும். திரும்பி மிரட்சியுடன் பார்த்தான்.

“என்னடா சேகர். பாத்துக் பாக்காத மாதிரியே போற!” சேகரின் அதிர்ச்சியை அணுஅணுவாய் இரசித்தான் சரத்.

“ஏய்... சரத். எப்படா வந்த? சோரிடா, முக்கியமான வேலையில உன்ன கவனிக்கவே இல்ல!” அவன் வார்த்தைகளில் வருத்தம் இழையோடியது.

“எப்படிடா உன்னால மட்டும் இப்படியெல்லாம் நடிக்க முடியுது. உலக மகா நடிப்புடா சாமி! ஒஸ்காரே கொடுக்கலாம்டா?”

“இல்லடா சரத். சத்தியமா நான் பாக்கல! பாத்திருந்தா பேசியிருக்க மாட்டனா!”

“டேய், போதும்டா. இனிமே உன்ன நம்பறதா இல்ல!” வார்த்தையில் இருந்த வெறுப்பு முகத்திலும் தெரிந்தது.

சேகரின் முகம் வாட்டம் கண்டது.

“சத்தியமா சொல்றேன்,  நம்புடா!”

“உங்க அம்மா மேல சத்தியம் பண்ணுடா, நம்பறேன்” நண்பனை வார்த்தையால் மடக்கி விட்டதில் சரத்துக்கு உள்ளூற மகிழ்ச்சி பொங்கியது.

“சோரிடா, அது மட்டும் முடியாது!”

“நீ பண்ணமாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்டா”

“இல்லடா சரத். செத்தவங்கங்கள ஏன் கஷ்டப்படுத்தனும்!” குரல் உடைந்து அழுகை பெரிதாய் வெளிப்பட்டது.

“என்னடா சொல்றே!”

“நேத்து ஹார்ட் எத்தேக் வந்து எங்கம்மா துடிச்சுப் போயிட்டாங்கடா சரத். கிளினிக் கூட்டிட்டுப் போகத்தான் உன்கிட்ட காசு கேட்டேன்”

“டேய், என்னடா, என்னன்னமோ சொல்ற?” ஆணவம் இருந்த இடத்தில் அதிர்ச்சி குடி கொண்டது.

“இப்ப அம்மா எப்படி இருக்காங்க?” சரத்தின் கேள்வி முடியும் முன்பே சேகரின் அழுகை மேலும் பெரிதானது.

“அவங்க என்ன அனாதையா  விட்டுட்டுப் போயிட்டாங்கடா! கடைசி காரியம் பண்ண காசு பத்தல. அதான், எக்கவுண்டல ஏதாவது இருக்குமான்னு பாக்க வந்தேன்! சத்தியா நான் நடிக்கலடா!” ஓவெனக் கதறியவனைக் கட்டி அணைத்துக் கொண்டான் சரத்.

புதன், 4 மே, 2022

#குறுங்கதை 087 #மஞ்சு

 

கண் விழித்துப் பார்த்ததும் அரண்டு போனான் நாதன். அவன் படுக்கையறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. பக்கத்தில் மனைவி மஞ்சுவைக் காணவில்லை. இதுநாள் வரை விளக்கு வெளிச்சம் இல்லாமல் அவன் படுத்ததில்லை. அருகில் இருந்த மேசை விளக்கை எட்டிப் பிடித்துத் தட்டினான். சொல்லி வைத்தாற்போல அதுவும் சதி செய்தது. படுக்கையை விட்டு எழ முயற்சித்தான். உடலெல்லாம் தாங்க முடியாத வலி. வலது கையை இடப் பக்கமாய்த் திருப்பி உடம்பை முறுக்கினான். வலி மறைந்த பாடில்லை.

“மஞ்சு... வெளிய என்ன செய்ற? ரூம்ல லைட்டு இல்ல. கேண்டல் எடுத்துக்கிட்டு வாயேன்!” பதில் இல்லை. கோபம் தலைக்கேறியது. கதவின் பிடியைப் பிடித்துக் கதவைத் தள்ளினான். திறக்க முடியவில்லை. கதவைப் பலங்கொண்டு தட்டினான். மஞ்சுவின் காதில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.

தட்டுத் தடுமாறி மீண்டும் படுக்கைக்குச் சென்றான். கால்களை நீட்டினான். கைகளை விரித்துப் படுத்துக் கொண்டான்.

“நான் படுத்திருக்கேன் தெரியல?” ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் கரார் குரல். நாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

படுக்கையைத் தடவிப் பார்த்தான். கைகளில் கொத்தாய் ஏதோ அகப்பட பிடித்து இழுத்தான்.

“டேய், விடுடா!” கன்னத்தில் விழுந்த அறையால் நிலை தடுமாறிப் போனான். சுயநினைவிற்கு வந்தபோது தரையின் மேல் குப்புற விழுந்து கிடந்தான். கால் முட்டி தரையில் இடித்துக்கொண்டிருக்க வேண்டும். வலி உயிரை எடுத்தது. முட்டியைத் தேய்த்து விட்டுக்கொண்டே எழுந்தான்.  மிக மிக அருகில் யாரோ நிற்க, உடல் வெடவெடத்துப் போனது.  சூடான மூச்சுக்காற்று முகத்தில் பட அலறியடித்துக் கொண்டு அறையின் மூலையில் தஞ்சம் புகுந்தான். அடுத்த கணம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாய் உஷ்ணம் குறையத் தொடங்கியது. உடல் சில்லிட்டுப் போனது. மூச்சு வாங்கியது.

“மஞ்சு... மஞ்சு... சீக்கிரம் வா. எனக்கு என்னமோ ஆயிகிட்டு இருக்கு!” சத்தமாய் அலறினான். அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. மீண்டும் இருட்டில் கதவைத் தேடிப் பிடித்துப் பலமாய்த் தட்டினான். கதவு திறக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு வந்தது. மஞ்சு மெதுவாய் நடந்து அறைக்குள் வந்தாள். வெளி விளக்கின் ஒளி அறைக்குள் கொஞ்சமாய் வெளிச்சத்தைக் கொடுக்கத் தொடங்கியது.

“ஆரம்பிச்சிட்டீங்களா! தூக்க மாத்திர போட்டிட்டு நீங்க படுத்துற பாடு தாங்க முடியல! பேசாம போய்ப் படுங்க!” சலித்துக் கொண்டு வெளியே போனவளைக் கண் கொட்டாமல் பார்த்தான். அவள் உருவம் மறைந்த அடுத்த கணம் கதவு தானாய்ச் சாத்திக் கொண்டது.

“மஞ்சு! என்ன(னை) தனியா விட்டுட்டுப் போகாத. பயமா இருக்கு!” வெட்கத்தை விட்டுச் சத்தமாய்க் கத்தினான். உடல் நடுக்கம் தீரவில்லை.

மஞ்சு வந்தபாடில்லை. சில நொடிகளில் பலத்த காற்று வீச, கீச் என்ற சத்தத்துடன் கதவு தானாய்த் திறந்து கொண்டது. அறைக்கு வெளியே மஞ்சுவின் படம் மாலையுடன் காட்சி தந்தது.

செவ்வாய், 3 மே, 2022

#குறுங்கதை 086 #இது சரியா?

 


“மணி சார்! சீக்கிரம் இப்படிக் கொஞ்சம் வாங்களேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சார்!”  ஆசிரியர் அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை அவசரப்படுத்தினாள் பாரதி.

சென்ற வாரம்தான் புதிதாய் அந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்திருந்தாள். விரும்பாத பணியிட மாற்றம்தான். என்ன செய்ய முடியும்! அதுவும் அந்தப் பள்ளி என்றதும் குலை நடுங்கிப் போனது என்னமோ உண்மைதான்.

“சொல்லுங்க டீச்சர்! ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? ஏதும் பிரச்சனையா?” வாயைத் துடைத்துக் கொண்டே கேட்ட மணிமாறனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சார்! ப..யமா இருக்கு! நீங்கதான்...” தடுமாறினாள் பாரதி.

“தயங்காம சொல்லுங்க டீச்சர்! என்னால முடிஞ்சா கட்டாயம் உதவி செய்றேன்!” அவள் பயத்தைத் தூர விரட்டப் பார்த்தான்.

“சார், நேத்து ரேஹாட் தைம்ல ரெண்டு பேரு வேப் குடிச்சதப் பாத்து ஆடிப் போயிட்டேன் சார். கூப்பிட்டு வார்னிங் கொடுத்தேன். ரெண்டு பேரும் அழுதாங்க. மன்னிப்புக் கேட்டாங்க. டிசிப்பிலின் செக்குகிட்ட சொல்ல வேணாம்னு கெஞ்சனாங்க!” மூச்சு விடாமல் பேசினாள் பாரதி.

“டீச்சர், மொதல்ல ரிலக்ஸ் ஆவுங்க! இந்த ஸ்கூல்ல இதெல்லாம் சகஜம்” அமைதிப்படுத்த முயன்றவனை ஆதங்கத்துடன் பார்த்தாள்.

“அது இல்லீங்க சார். அந்தப் பிள்ளைங்களோட அப்பா வந்திருக்காரு. என்கிட்ட பேசனும்னு சொல்றாரு. கொஞ்சம் பயமா இருக்கு! நீங்களும் கொஞ்சம் கூட வாங்க சார், பிலீஸ்” கண்களில் கண்ணீர் தேங்கத் தொடங்கியது.

அதற்கு மேல் அவனுக்குப் பேசத் தோன்றவில்லை. பாரதியின் பயம் புரிந்தது. முதன் முதலில் அந்தப் பள்ளிக்கு வந்தபோது இதே போல அவனும் கலங்கியிருக்கிறான்.

“என்ன டீச்சர்? என் பிள்ளைங்கள கூப்பிட்டு வார்னீங் கொடுத்தீங்களா? பக்கத்து வீட்டுப் பையன் சொன்னா!” முரட்டுக் குரலில் பேசியரைப் பார்த்து அரண்டு போனாள் பாரதி.

“அது வந்து... உங்க பிள்ளைங்க....!” அவள் இமைகள் மூட மறந்தன.

“உங்க பிள்ளைங்க வேப் குடிச்சா வார்னீங் கொடுப்பீங்களா டீச்சர்? அதுவும் பொம்பள பிள்ளைங்க செஞ்சா பேசாம இருப்பீங்களா?  ரெண்டு அறை விட மாட்டீங்க?”

“பொம்பள பிள்ளைங்களா!” மணியின் புருவங்கள் உயர்ந்தன.

வாயடைத்து நின்றாள் பாரதி.

#குறுங்கதை 100 #நூறாவது நாள்

    எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சவால்கள், தடைகள். கடந்து வந்த மாயம் தெரியவில்லை. ஏடுகள் ஒவ்வொன்றாய்ப் புரட்டிப் பார்த்தான் வெற்றிமாறன். தொ...